
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு உதவி நிறுவனங்கள் சில சிறிலங்காவுக்கு எதிராக தொடர்ந்தும் சதி செய்து வருவதாக சிறிலங்காவின் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ச குற்றம்சாட்டியுள்ளார்.
ராஜபக்ச குடும்பத்துக்கு எதிராக அமெரிக்காவின் இராஜாங்கத் திணைக்களம் குற்றஅறிக்கை ஒன்றைத் தயாரித்துள்ளதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
எம்பிலிப்பிட்டியவில் நேற்று நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் பேசும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
“விடுதலைப் புலிகள் தோற்கடிக்கப்பட்ட பின்னர் வெளிநாடுகளின் உதவியுடன் தப்பிச் சென்ற புலிகள், சில வெளிநாட்டு சக்திகளுடன் இணைந்து கொண்டு சிறிலங்காவில் குழப்ப நிலையை ஏற்படுத்த முனைகின்றனர்.
சில உதவி நிறுவனங்களும் அவர்களுடன் இணைந்துள்ளன. தற்போது இந்த தீய சக்திகள் ஒன்றுக்குப் பின் ஒன்றாக பல்வேறு சதித் திட்டங்களை செயற்படுத்தி வருகின்றனர்.
இதில் ஒன்று தான் அமெரிக்க இராஜாங்கத் திணைக்களம் தயாரித்த ராஜபக்ச குடும்பத்துக்கு எதிரான குற்ற அறிக்கை. ஐ.நா நிபுணர் குழு அறிக்கைக்குப் பின்னர் இது வந்தது.
சிறிலங்காவின் முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க நாட்டை காட்டிக் கொடுத்தவர். ரணில்- பிரபா உடன்பாட்டின் மூலம் அவர் எட்டு மாவட்டங்களை விடுதலைப் புலிகளிடம் ஒப்படைத்தார்.
இப்போது அவர்கள் மனிதஉரிமைகள், போர்க்குற்றங்கள், தகவல் உரிமை குறித்துப் பேசுகிறார்கள்.
கிராமப்புற மக்கள் இவையெல்லாம் என்னவென்று கேட்கிறார்கள்.
அண்மையில் ஐதேகவினால் நாடாளுமன்றில் சமர்ப்பிக்கப்பட்ட தகவல் உரிமைச் சட்டமூலத்தின் பிரதியைக் கூட வெளிநாட்டு உதவி நிறுவனம் ஒன்று தான் தயாரித்துக் கொடுத்து என்றும் அவர் மேலும் குற்றம்சாட்டியுள்ளார்.
கருத்துரையிடுக