News Update :
Home » » புதிய வியூகம் வகுக்கிறார் மகிந்த ராஜபக்ச

புதிய வியூகம் வகுக்கிறார் மகிந்த ராஜபக்ச

Penulis : ۞உழவன்۞ on ஞாயிறு, 26 ஜூன், 2011 | PM 1:27


வடக்கு மாகாணசபைக்கு உடனடியாகத் தேர்தலை நடத்த சிறிலங்கா அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாக கொழும்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

தேசியப் பிரச்சினைக்கு அரசியல்தீர்வு காணப்பட்ட வேண்டும் என்று அதிகரித்து வரும் அழுத்தங்களைச் சமாளிக்கவே சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்ச இந்த முடிவுக்கு வந்துள்ளதாக கூறப்படுகிறது.

இதையடுத்து வடக்கு மாகாணசபையை அமைப்பது தொடர்பாக உயர்மட்டக் கலந்துரையாடல்கள் நடத்தப்பட்டு வருகின்றன.

சிறிலங்கா அரசுக்கும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கும் இடையிலான பேச்சுக்களில் அரசியல் இணக்கப்பாடு எட்டப்படுவதற்கு முன்னதாக, வடக்கு மாகாணசபைக்கான தேர்தலை நடத்த வேண்டும் என்ற அரசியல் மூலோபாய வகுப்பாளர்களும், அரசியல்வாதிகளும் சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்சவுக்கு ஆலோசனை கூறியுள்ளனர்.

இதையடுத்து இந்த ஆண்டு இறுதிக்குள் வடக்கு மாகாணசபைக்கான தேர்தலை நடத்த சிறிலங்கா அதிபர் திட்டமிட்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

வடக்கு மாகாணசபைத் தேர்தலை நடத்துவது தொடர்பாக விரைவில் தேர்தல் ஆணையாளருடன் சிறிலங்கா அதிபர் கலந்துரையாடவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

போர்க்குற்ற ஆதாரங்களை வைத்து பரப்புரை செய்யத் திட்டமிடும் ஐதேக

ஐ.நா நிபுணர்குழு அறிக்கையின் சிங்கள மொழிபெயர்ப்பு மற்றும் சிறிலங்காவின் கொலைக்களங்கள் காணொலி ஆகியவற்றை சிறிலங்கா முழுவதும் இலவசமாக விநியோகிப்பதற்கு ஐதேக தீர்மானித்துள்ளது.

அண்மையில் நடைபெற்ற ஐ.தேகவின் செயற்குழுக் கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

முதற்கட்டமாக எதிர்வரும் ஜூலை மாதம் 4ம் நாள் கண்டியில் நடைபெறவுள்ள ஐதேகவின் பரப்புரைக் கூட்டத்தில் வைத்து இவை விநியோகிக்கப்படவுள்ளன.

ஐ.நா நிபுணர்குழு அறிக்கையின் சிங்கள மொழிபெயர்ப்பை பொதுமக்கள் மத்தியில் விநியோகிப்பதென்று ஐதேக ஏற்கனவே தீர்மானித்திருந்தது.

இந்தநிலையிலேயே அண்மையில் சனல் 4 தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ஆவணப்படத்தையும் அதனுடன் இணைத்து பொதுமக்கள் மத்தியில் விநியோகிக்கத் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக கொழும்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

எனினும், ஐதேகவின் பெரும்பாலான நாடாளுமன்ற உறுப்பினர்கள் இந்த முடிவுக்கு எதிர்ப்பு வெளியிட்டுள்ளனர்.

அரசியல் நலனை விட நாட்டு நலன் குறித்து ஐதேக அதிக கவனம் செலுத்த வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

நாடாளுமன்ற உறுப்பினர்கள் பாலித ரங்க பண்டார, சுஜீவ சேனசிங்க போன்றோரே ஐதேகவின் இந்தத் தீர்மானத்துக்கு கடும் எதிர்ப்பை வெளியிட்டுள்ளனர்.

தெரிவுக்குழு மூலம் மட்டுமே அரசியல்தீர்வு - மகிந்தவின் பிடிவாதம்

நாடாளுமன்றத் தெரிவுக்குழு மூலம் மட்டுமே தேசிய இனப்பிரச்சினைக்கு அரசியல் தீர்வு காண முடியும் என்று சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

ஐதேகவின் பிரதித் தலைவர் கரு ஜெயசூரிய அண்மையில் சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்சவைச் சந்தித்த போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

நாடாளுமன்றத்தில் அங்கம் வகிக்கும் சகல அரசியல் கட்சிகளினதும் இணக்கப்பாட்டுடன் கூடிய அரசியல் தீர்வுத் திட்டமொன்றே முன்வைக்கப்படவுள்ளதாகவும் இந்தச் சந்திப்பின்போது சிறிலங்கா அதிபர் கரு ஜெயசூரியவிடம் தெரிவித்துள்ளார்.

அத்துடன் நாடாளுன்றத் தெரிவுக் குழுவில் ஐதேகவையும் இணைந்து கொள்ளுமாறும் அவர் அழைப்பு விடுத்துள்ளார்.

அம்பாறையில் இரு அதிரடிப்படை முகாம்களுக்கு மூடுவிழா

அம்பாறை மாவட்டத்தில் நீண்டகாலமாக இயங்கி வந்த இரண்டு சிறப்பு அதிரடிப்படை முகாம்கள் நாளையுடன் மூடப்படவுள்ளன.

காரைதீவு மற்றும் கல்முனை சிறப்பு அதிரடிப்படை முகாம்களே நாளையுடன் மூடப்படவுள்ளன.

இங்குள்ள சிறப்பு அதிரடிப்படையினர் வவுனியாவுக்கும், மல்வத்தைக்கும் அனுப்பப்படவுள்ளனர்.

காரைதீவு சிறப்பு அதிரடிப்படை முகாம் தனியார் மற்றும் அரச கட்டடங்களை உள்ளடக்கி அமைக்கப்பட்டுள்ளது.

நாளை இந்த முகாம் மூடப்பட்ட பின்னர் தனியார் கட்டடம் உரிமையாளரிடம் ஒப்படைக்கப்படவுள்ள அதேவேளை, அரச கட்டடத்தில் சிறிலங்கா இராணுவத்தினர் முகாமிடவுள்ளனர்.

அதேவேளை, காரைதீவு முகாமுக்கு அருகே, மூடப்பட்ட நிலையில் உள்ள வீதியும் நாளை முதல் திறக்கப்படவுள்ளது.

தடுப்புமுகாம்களுக்குச் செல்ல சட்டவாளர்களுக்கு அனுமதி

தடுப்பு முகாம்களில் தடுத்து வைக்கப்பட்டுள்ள விடுதலைப் புலிகள் இயக்க சந்தேக நபர்களை சந்திப்பதற்கு சட்டவாளர்களை அனுமதிக்குமாறு சிறிலங்காவின் உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மரியன் ஜோசப் டேவிட் என்பவரின் சார்பில் அவரது சட்டவாளர் சாலிய பீரிஸ் தாக்கல் செய்த அடிப்படை உரிமைமீறல் மனு மீதான விசாரணையின் போதே சிறிலங்கா உயர்நீதிமன்றம் இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளது.

பூசா தடுப்பு முகாமில் தடுத்து வைக்கப்பட்டுள்ள சந்தேக நபர்களை பார்வையிடுவதற்கு அவர்களின் உறவினர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுகின்ற போதும், சட்டவாளர்கள் அனுமதிக்கப்படுவதில்லை.

இதனால் தமது கட்சிக்காரர் தொடர்பிலான தரவுகளைப் பெற்றுக் கொள்ள முடியாதிருப்பதாக, சட்டவாளர்கள் சுட்டிக்காட்டியிருந்தனர்.

இந்த மனுவை விசாரித்த சிராணி திலகவர்த்தன தலைமையிலான மூன்று உறுப்பினர் நீதியரசர் குழுவே சிறிலங்காவின் சட்டமா அதிபருக்கு இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளது.

பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் சுமார் 2000 விடுதலைப் புலிகள் இயக்க சந்தேகநபர்கள் பூசா முகாமில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

சனல்4 மீது வழக்குத் தொடுக்க தாயாராகிறது சிறிலங்கா

சிறிலங்காவின் கொலைக்களங்கள் என்ற ஆவணப்படத்தை ஒளிபரப்பிய சனல் 4தொலைக்காட்சி நிறுவனம் மீது எதிராக வழக்குத் தொடரப்பட உள்ளதாக சிறிலங்கா அரசாங்கம் அறிவித்துள்ளது.

சனல் 4 தொலைக்காட்சி நிறுவனத்துக்கு எதிராக வழக்குத் தொடர்வதற்கு தேவையான ஆவணங்கள் தயாரிக்கப்பட்டு வருவதாக சிறிலங்காவின் நீதி அமைச்சர் ரவூப் ஹக்கீம் தெரிவித்துள்ளார்.

அத்துடன் இந்த ஆவணப் படத்தின் மூலப்பிரதியை தம்மிடம் ஒப்படைக்குமாறும் சிறிலங்கா அரசாங்கம் சனல் 4 தொலைக்காட்சியிடம் கோரிக்கை விடுத்துள்ளது.

சிறிலங்காவின் கொலைக்களங்கள் ஆவணப்படம் போலியானது என்பதை நிரூபிக்கும் வகையிலான ஆதாரங்கள் திரட்டப்பட்டு வருவதாகவும் அமைச்சர் ரவூப் ஹக்கீம் தெரிவித்துள்ளார்.

நாட்டின் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் நோக்கில் இது போலியாக தயாரிக்கப்பட்டுள்ளது என்று தெரிவித்துள்ள அவர், இதற்காக சனல் 4 தொலைக்காட்சி பகிரங்க மன்னிப்பு கோரப்பட வேண்டும் இல்லையேல் நட்டஈடு தரக்கோரி வழக்குத் தொடரப்படும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
Share this article :

கருத்துரையிடுக

 
Company Info | Contact Us | Privacy policy | Term of use | Widget | Advertise with Us | Site map
Copyright © 2011. welvom . All Rights Reserved.
Design Template by panjz-online | Support by creating website | Powered by Blogger