News Update :
Home » » இந்திய உளவுத்துறையே என்னையும், சரத் பொன்சேகாவையும் எதிரிகளாக்கியது

இந்திய உளவுத்துறையே என்னையும், சரத் பொன்சேகாவையும் எதிரிகளாக்கியது

Penulis : ۞உழவன்۞ on புதன், 29 ஜூன், 2011 | PM 12:00


இந்திய உளவுத்துறையின் சதி காரணமாகவே தானும் ஜெனரல் சரத் பொன்சேகாவும் எதிரிகளாக நோ்ந்துள்ளதாக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ பச்சாதாபப்பட்டுள்ளார்.விடுதலைப் புலிகளுடனான யுத்தம் வெற்றி கொள்ளப்பட்டு சிறிது காலத்துக்குள்ளாகவே இராணுவத்தளபதி பதவியிலிருந்து சரத் பொன்சேகாவை நீக்கியது தான் செய்த தவறு என்று ஏற்றுக் கொண்டிருக்கும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, இந்திய உளவுத்துறையின் சதியே அதற்கான காரணம் என்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

ஜனாதிபதிக்கு மிகவும் நெருக்கமான முன்னாள் இராணுவ ஜெனரல்கள் இருவருடன் தனிப்பட்ட முறையிலான உரையாடலொன்றை மேற்கொண்டிருந்த போதே ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

ஜெனரல் சரத் பொன்சேகா குறித்து இந்திய உளவுத்துறை போலியான தகவல்களை வழங்கி என்னை தவறாக வழிநடாத்தி விட்டது. அதன் பின்பு ஜனாதிபதித் தோ்தலில் போட்டியிடுவதற்காக சரத் பொன்சேகா கூட்டுப் படைகளின் பிரதம அலுவலர் பதவியிலிருந்து இராஜினாமாச் செய்ய முன்வந்த போது அவரது இராஜினாமாவை ஏற்றுக் கொண்டது அதனை விடப் பெரும் தவறாகும்.

சரத் பொன்சேகாவின் ராஜினாமாவை ஏற்றுக் கொள்ளாதிருக்கும்படி பாதுகாப்புச் செயலாளர் கோத்தாபய ராஜபக்ஷ எவ்வளவோ வற்புறுத்தியும் இந்தியாவின் அழுத்தங்களை ஏற்றுக் கொண்டு அதனை நான் ஏற்றுக் கொண்டேன்.

அவ்வாறின்றி அவரது இராஜினாமாவை ஏற்றுக் கொள்ளாதிருந்தால், காலப்போக்கில் சரத் பொன்சேகாவுடன் இருந்த மனக்கசப்புகளைத் தீர்த்துக் கொண்டிருக்க முடிந்திருக்கும்.

விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின் மரணத்தின் பின் சரத் பொன்சேகா புகழேணியின் உச்சத்துக்கு ஏறியிருப்பதாகவும், அதன் காரணமாக அவர் இராணுவ சதிப்புரட்சி மூலமாக அரசாங்கத்தைக் கைப்பற்ற முனைவதாகவும், அவ்வாறான சந்தர்ப்பத்தில் நாட்டில் பெரும்பாலானவர்கள் அவரை ஏற்றுக் கொள்வதற்கான வாய்ப்பு இருப்பதாகவும், உளவுத்தகவல்களை அடிப்படையாகக் கொண்டு என்னை எச்சரித்த இந்திய அதிகாரிகள், பொன்சேகாவின் அதிகாரங்களை உடனடியாக மட்டுப்படுத்துமாறு ஆலோசனை வழங்கினர்.

அதன் பிரகாரம் செயற்பட்டே நான் சரத் பொன்சேகாவின் அதிகாரங்களைக் குறைப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டேன்.

இராணுவத்தின் அறுபதாவது ஆண்டு நிறைவுக் கொண்டாட்டத்திற்கு தலைமை தாங்கி விட்டு, 2009ம் ஆண்டின் டிசம்பர் மாதம் 17ம் திகதி தனது பிறந்த நாளுடன் இராணுவ சேவையிலிருந்து ஓய்வு பெற சரத் பொன்சேகா தீர்மானித்திருந்தார். அதன் பின் பதவி நீடிப்பு தொடர்பில் கோரிக்கை முன்வைப்பதில்லை என்று அவர் என்னிடம் தெரிவித்திருந்தார்.

முரட்டுத்தனமானதும், தன்னிச்சையானதுமான போக்குகளைக் கொண்டிருந்த போதும், சரத் பொன்சேகாவின் ஆற்றல் மற்றும் அறிவு என்பவற்றுக்கு அருகில் நெருங்கவும் முடியாத நிலையிலேயே ஏனைய அதிகாரிகள் இருக்கின்றனர். வெளிநாட்டு அழுத்தங்கள் கடுமையாகிக் கொண்டிருக்கும் இவ்வாறான சந்தர்ப்பத்தில் அவரது விலகல் எனக்குப் பெரும் இழப்பாகவே இருக்கின்றது என்றவாறு கடந்த கால சம்பவங்கள் தொடர்பில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ கவலையுடன் அசைபோட்டுள்ளார்.

சரத் பொன்சேகா தொடர்பில் ஜனாதிபதி இந்தளவுக்கு இறங்கி வரக் காரணம் அரசியல்வாதிகள் சிலர் சரத் பொன்சேகா விடயத்தில் மேற்கொண்ட தலையீடுகள்தான் என்றவாறாக ஜனாதிபதிக்கு நெருக்கமான வட்டாரங்களிலிருந்து தெரிய வருகின்றது.
Share this article :

கருத்துரையிடுக

 
Company Info | Contact Us | Privacy policy | Term of use | Widget | Advertise with Us | Site map
Copyright © 2011. welvom . All Rights Reserved.
Design Template by panjz-online | Support by creating website | Powered by Blogger