
சிறிலங்காப் படையினரால் தமிழர்கள் சுட்டுப்படுகொலை செய்யப்படும் காட்சியை உள்ளடக்கிய சனல் 4 தொலைக்காட்சி ஒளிபரப்பிய காணொலியின் மூலப்பிரதி என்று கூறி சிறலங்கா பாதுகாப்பு அமைச்சு காணொலிப்பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளது.
சிறிலங்காவில் நேற்றிரவு சுவர்ணவாகினி தொலைக்காட்சியில் இந்தக் காணொலிப் பதிவு ஒளிபரப்பப்பட்டது.
இந்தக் காணொலி சீருடை அணிந்தவர்கள் தமிழில் உரையாடிக் கொண்டு ஆண்களையும் பெண்களையும் சுட்டுக்கொல்வது போன்ற காட்சியை உள்ளடக்கியுள்ளது.
சனல் 4 வெளியிட்ட உண்மையான காணொலிப் பதிவில் சீருடை அணிந்த சிறிலங்காப் படையினர் சிங்களத்தில் உரையாடிக் கொண்டே ஆண்களையும் பெண்களையும் சுட்டுக்கொல்வது பதிவாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.
இதுதொடர்பாக கருத்து வெளியிட்டுள்ள சிறிலங்கா இராணுரவப் பேச்சாளர் மேஜர் ஜெனரல் உபய மெடவெல, இதுவே மூலப்பிரதி என்றும் சிறிலங்கா பாதுகாப்பு அமைச்சு இதனை பிரித்தானியாவில் இருந்து பெற்றுக் கொண்டதாகவும் கூறியுள்ளார்.
சனல் 4 வெளியிட்ட ஆவணப்படம் போலியானது என்று கூறிவரும் சிறிலங்கா அரசாங்கம் இதுதொடர்பான குற்றச்சாட்டுகளை அடியோடு நிராகரித்துள்ளது.
சனல்4 ஆவணப்படம் அனைத்துக ரீதியாக சிறிலங்காவுக்கு பெரும் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ள நிலையிலேயே போலியானதொரு காணொலிப் பதிவை வெளியிட்டு குழப்பம் ஏற்படுத்த முனைவதாக கருதப்படுகிறது.
நேற்றிரவு சுவர்ணவாகினி தொலைக்காட்சிக்கு இந்தக் காணொலியை வழங்கியுள்ள சிறிலங்கா பாதுகாப்பு அமைச்சு, அரச ஊடகங்களிலோ அல்லது பாதுகாப்பு அமைச்சின் அதிகாரபூர்வ இணையத்தளத்திலோ இதுவரை அந்தக் காணொலியை வெளியிடவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.
சிறிலங்கா அரசாங்கம் சனல் 4 காணொலிப் பதிவு போலியானது திருத்தம் செய்யப்பட்டது என்று கூறினாலும், அது உண்மையானதே என்று அனைத்துலக வல்லுனர்கள் உறுதி செய்திருப்பதாக சனல் 4 தொலைக்காட்சியும் ஐ.நாவின் உயரதிகாரிகளும் கூறியிருப்பது குறிப்பிடத்தக்கது.
கருத்துரையிடுக