
அதேபோன்று இலங்கை ஜனாதிபதி யாழ்ப்பாணம் வரும்போது அவரது மனம் மகிழும் வகையில் அவருக்கு "கட்டவுட்" வைக்கவும் தீர்மானிக்கப்பட்டது. (யார் தீர்மானித்தார்கள் என்பது புரியாததாகவே இருக்கிறது).
ஜனாதிபதியின் வருகை திடீர் எனத் திட்டமிடப்பட்டதாலோ அல்லது சுதந்திரக் கட்சியின் அமைப்பாளரான அங்கஜனுக்கு 9ஆம் திகதி திருமணம் என்பதாலோ தெரியாது சுதந்திரக் கட்சியினர் இம்முறை இந்தக் "கட்டவுட்" வைப்பதில் மும்முரம் காட்டியதாகத் தெரியவில்லை. கடந்த முறை மஹிந்த யாழ்ப்பாணம் வந்தபோது "கட்டவுட்" வைப்பதில் ஆர்வம் காட்டிய அமைச்சர் டக்ளஸின் ஆதரவாளர்களும் இம்முறை அதில் ஆர்வம் காட்டவில்லை.
ஆனால், கடந்த வாரத்தில் யாழ்ப்பாணத்தில் மஹிந்த ராஜபக்ஷ பயணம் செய்யும் பாதைகளில் திடீரென "கட்டவுட்"கள் முளைத்தன. வேறு எந்த அரசியல் பிரமுகரது படங்களையும் தாங்கியிராத இந்தக் "கட்டவுட்"கள் ஆர்வத்தைத் தூண்டின.
விசாரித்ததில் சில தனியார் நிறுவனங்களிடம் இலங்கை ஜனாதிபதிக்குக் "கட்டவுட்" மற்றும் "பானர்" வைப்பதற்காகப் பணம் திரட்டப்பட்டதாகத் தெரியவந்தது. வேறு சில நிறுவனங்கள் "கட்டவுட்" மற்றும் "பானர்" களைத் தாமே செய்து வழங்கியுமிருந்தன. ஆனால், திவிநெகும என்ற திட்டத்தின் கீழ் வைக்கப்பட்ட விளம்பர "கட்டவுட்" பெரிதாக மூலையில் வெள்ளைத் தாமரைப் பூவுடன் காணப்பட்ட இந்த "கட்டவுட்" யாரால் வைக்கப்பட்டது என்ற விவரம் அதில் தெரிவிக்கப்பட்டிருக்கவில்லை.
இது ஆவலை இன்னும் தூண்ட, கிளற ஆரம்பிதோம். கிணறு வெட்ட பூதம் கிளம்பிய கதையாக சுமார் 30 லட்சம் ரூபா பணத்தில் மிகச் சாதாரணமாகத் தில்லுமுல்லு இடம்பெற்றமை தெரியவந்தது.
கட்டவுட் தில்லுமுல்லு
வைக்கப்பட்டுள்ள "கட்டவுட்"களில் இரு வகையானவை கொழும்பில் உள்ள நிறுவனம் ஒன்றினால் தயாரிக்கப்பட்டு இங்கு கொண்டு வந்து பொருத்தப்பட்டுள்ளன. யாழ்ப்பாணத்தில் செய்து பொருத்தப்பட்டால் ஏற்படக்கூடிய செலவிலும் பார்க்க 4 மடங்கு பணம் இதற்காகச் செலவிடப்பட்டுள்ளது என்பது எமது விசாரணைகளில் இருந்து தெரியவந்தது.
6' * 8' அளவிலான, மஹிந்த ராஜபக்ஷவின் தனிப் படம் போட்டு "நீடுழி வாழ்க'' என்று எழுதப்பட்ட "கட்டவுட்" ஒன்றை யாழ்ப்பாணத்தில் செய்வதற்கு அதிகபட்சமாக 20,000 ரூபா செலவாகும் என "உதயன்" எடுத்த கேள்வி கோரலில் இருந்து தெரிகிறது. ஆனால், கொழும்பிலிருந்து தருவிக்கப்பட்ட இந்த "கட்டவுட்"களுக்கு அதைப்போல நான்கு மடங்குக்கு மேற்பட்ட பணம் செலவிடப்படுகிறது என்பதை எம்மால் ஆதாரத்துடன் நிரூபிக்க முடியும்.
மோசடியின் அளவு
அதாவது ஒரு "கட்டவுட்" செய்வதற்கு சுமார் 60,000 ரூபா மேலதிகமாகச் செலவிடப்படுகிறது. இதுபோன்று 25 "கட்டவுட்" கள் செய்யப்பட்டுள்ளன. அதனடிப்படையில் 15 லட்சம் ரூபா நிதி மேலதிகமாகச் செலவிடப்படுகிறது.
உள்ளூரில் மிகக் குறைந்த செலவில் இத்தகைய வேறு "கட்டவுட்" கள் செய்யப்பட்டுள்ள நிலையில் ஏன் இவ்வளவு அநியாயச் செலவில் கொழும்பு நிறுவனத்துக்கு அந்த ஒப்பந்தம் வழங்கப்பட்டது?
மேலும் சில கட்டவுட்
இந்தக் கேள்விக்கு விடை காண்பதற்கு முன்னர்...
இந்தக் "கட்டவுட்"களைச் செய்தது எஸ்.என்.கே. ஹோல்டிங்ஸ் என்ற கொழும்பிலுள்ள தனியார் நிறுவனம் ஒன்றே. இதே நிறுவனம் 10' * 6' என்ற அளவிலான "திவிநெகும" கட்டவுட்களையும் ஜனாதிபதி மஹிந்த மற்றும் அமைச்சர் பஸில் ராஜபக்ஷ ஆகியோரின் படங்களுடன் நகரில் நிறுவியுள்ளது.
இந்த அளவிலான "கட்டவுட்"களை யாழ்ப்பாணத்தில் செய்வதாயின் அதிக பட்சமாக 25,000 ரூபாவாகும் என உதயன் பெற்ற கேள்விக் கட்டளைகள் காட்டுகின்றன. ஆனால், அதே "கட்டவுட்"களும் சுமார் மூன்றரை மடங்கு அதிக பணம் கொடுத்தே செய்யப்பட்டுள்ளன. இதன் அடிப்படையிலும் சுமார் 15 லட்சம் ரூபா மேலதிகமாகச் செலவிடப்பட்டுள்ளது.
யார் கொடுத்த காசு
இந்த "கட்டவுட்"களுக்கான ஒரு தொகுதி பணம் வடமாகாண விவசாய அமைச்சின் ஊடாக வழங்கப்பட்டுள்ளது. விவசாய அமைச்சின் செயலாளரைத் தொடர்பு கொண்டு கேட்டபோது, "நிவிநெகும" திட்டத்தின் கீழ் ஒதுக்கப்பட்ட நிதியில் இருந்து அந்தத் திட்டம் தொடர்பான "கட்டவுட்"கள் செய்யப்பட்டன என்றும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்காக அவை செய்யப்படவில்லை என்றும் உதயனுக்குத் தெரிவித்தார்.
இந்த திட்டம் மற்றும் நிதிக் கொடுப்பனவுகள் குறித்து வடக்கு மாகாண பிரதம செயலருடன் தொடர்புகொண்டு கேட்டபோது, ஜனாதிபதியின் பயணம் பற்றிய ஏற்பாடுகள் மத்திய அரசைச் சேர்ந்தவை என்ற காரணத்தால் அது குறித்துத் தமக்கு ஒன்றும் தெரியாது என்று கூறினார்.
ஜனாதிபதியின் "கட்டவுட்"கள் தொடர்பாக தனக்குத் தெரிந்தவரை மாகாண அமைச்சுக்கள் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றும் அவற்றுக்காக நிதிப் பரிமாறல்கள் செய்யவில்லை என்றும் அவர் மேலும் கூறினார். ஆளுநரின் செயலாளர் மற்றும் வடமாகாண திறைசேரிச் செயலர் ஆகியோரைத் தொடர்பு கொள்ள எடுக்கப்பட்ட முயற்சிகள் சாத்தியப்படாததால் அவர்களின் கருத்துக்களை அறியமுடியவில்லை
சூத்திரதாரி யார்?
அவரது இந்தப் பதில் ஆர்வத்தைத் இன்னும் தூண்டியதால் இந்த வியாபார ஒப்பந்தத்தின் பின்னணியில் என்ன நடந்தது என்பதை நாம் துருவினோம். கிடைத்த தகவல்கள் அதிர்ச்சி அளித்தன.
இந்தக் "கட்டவுட்"களுக்கான பணத்தை வடமாகாண விவசாய அமைச்சின் ஊடாகக் கொடுப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டாலும் அது தொடர்பான கேள்வி கோரல்களை அமைச்சு வெளியிட்டிருக்கவில்லை என்பதும் அமைச்சின் செயலருக்கு முகவரியிடப்பட்டு அந்தக் கேள்வி கோரல்கள் அனுப்பி வைக்கப்பட்டன என்றும் உதயனுக்கு உறுதியாகத் தெரியவந்தது.
இது பொது நிதிக் கொடுக்கல் வாங்கல்களுக்கான அரசின் விதி முறைகளுக்கு மாறானது என்பதை மாவட்டத்திலுள்ள அரச உயர் அதிகாரிகள் உதயனுக்கு உறுதிப்படுத்தினார்கள்.
எல்லாம் தில்லுமுல்லு
எஸ்.என்.கே. நிறுவனத்தை தொடர்பு கொண்டு இவ்வாறான "கட்அவுட்"கள் செய்ய வேண்டியிருப்பதால் அவற்றுக்கான கேள்வி கோரல்கள் தேவை என்று கேட்டோம். முதலில் எம்முடன் நன்றாகவும் நட்பாகவும் பேசிய நிறுவனப் பிரதிநிதி, "நாங்கள்தான் வடக்கில் அதிகம் அரசின் வேலைகள் எல்லாம் செய்கிறோம். உங்களுக்கும் சிறப்பாகச் செய்து தரலாம். நீங்கள் வேறு இடங்களில் கேட்கத் தேவையில்லை நாங்களே மூன்று கேள்வி கோரல்களை அனுப்பி வைக்கிறோம். எங்களிடம் அத்தகைய நிறுவனங்கள் இருக்கின்றன'' என்றார்.
சரி எனக்கூறி எமது "பக்ஸ்" இலக்கத்தைக் கொடுத்து அவற்றை அனுப்பி வைக்கும்படி நாம் கோரினோம். ஆனால், சிறிது நேரத்தில் தொலைபேசிக்கு அழைப்பை ஏற்படுத்திய அவர் "நீங்கள் மீடியாவைச் சேர்ந்தவர்களா?'' என்று கேட்டார். "ஆம்!'' என்றதும் திட்ட ஆரம்பித்தார். பின்னர் ஒருபோதும் எமக்கு "பக்ஸ்" வரவேயில்லை.
பின்னணி யார்?
"பக்ஸ்" எண்ணை வைத்து இது உதயன் பத்திரிகை என்பதையும் இவர்களுக்கு "பக்ஸ்" அனுப்புவது ஆபத்தானது என்பதையும் அவ்வளவு விரைவாக அந்த நிறுவனம் எப்படி அறிந்து கொண்டது என்பதை கிளறத் தொடங்கினோம். அப்போது மேலும் சில விவரங்கள் கிடைத்தன.
வடமாகாண விவசாயத் திணைக்களத்தில் பணியாற்றும் ஊழியர் ஒருவருக்கும் இந்த விவகாரங்களுக்கும் இடையிலான தொடர்பு அப்போதான் அம்பலமானது.
அவர், அனுராதபுரத்தில் நீண்டகாலம் வாழ்ந்த ஒருவர். நன்றாகச் சிங்களம் பேசக்கூடியவர். எழுதுவினைஞராக உள்ளார்.
வடமாகாண ஆளுநர் அலுவலகத்தில் இருந்து அவருக்கு வழங்கப்பட்ட நெறிப்படுத்தல்களின் அடிப்படையிலேயே இந்த ஒப்பந்த விவகாரம் நகர்த்தப்பட்டுள்ளது.
வடமகாண ஆளுநர் அலுவலகத்தில் உள்ள சிங்களம் மட்டும் பேசக்கூடிய, சிவில் சேவையைச் சேராத அதிகாரி ஒருவரே இந்த எழுதுவினைஞரை நெறிப்படுத்துகிறார்.
இவர் மூலமாக அனுப்பப்பட்ட கேள்வி கோரல்களில் எஸ்.என்.கே. கோல்டிங்ஸ் நிறுவனத்தின் கோரலை ஏற்குமாறு உயரதிகாரிகளுக்கு கட்டளையிடப்பட்டுள்ளது.
ஆளுநர் அலுவலகத்தில் இருந்து வந்த நெறிப்படுத்தல் என்பதால் அதனைச் சிரமேற்கொண்டு அதிகாரிகளும் நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர். இப்போது கேள்வி ஏதும் வந்துவிடக்கூடாது என்பதற்காக அலுவலகக் கோவைக்கான பணிகள் வழக்கமான முறைமைக்குத் தலைகீழாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன என்பதையும் உதயன் உறுதிப்படுத்தியிருக்கிறது.
ஆளுநர் அலுவலகத்தில் இருந்து ஒரு இளநிலை அலுவலர் மூலம் நெறிப்படுத்தல்கள் வழங்கப்படுவது குறித்து அமைச்சில் யாரும் கேள்வி கேட்பதில்லை. கேட்டு வேலைக்கு ஏன் வேட்டு வைக்க வேண்டும் என்று அவர்கள் அஞ்சுகிறார்கள்.
அவர்கள் என்னவாவது செய்துவிட்டுப் போகட்டும். அது பற்றிக் கவலையில்லை. அது அவர்களின் பதவி நிலைகள் பற்றிய பிரச்சினை. எங்களின் கேள்விகள் எல்லாம் அமைச்சுக்கள் ஊடாக மக்களின் அபிவிருத்திக்கு என ஒதுக்கப்படும் நிதியை இப்படித் தில்லுமுல்லு செய்து கட்சி அரசியலுக்குப் பயன்படுத்துவதைக் கட்டுப்படுத்தாமல் இந்த அதிகாரிகள் என்ன செய்து கொண்டிருக்கிறார்கள் என்பதுதான்? அப்படியானால் இந்த ஊழலில் இவர்களுக்கும் தொடர்பு இருக்கிறது என்பதுதானே அர்த்தம்?
நடவடிக்கை எடுப்பாரா ஜனாதிபதி
இப்படிப்பட்ட ஒரு சின்ன "கட்டவுட்" வைக்கும் திட்டத்தின் மூலமே மக்கள் பணத்தில் சுமார் 30 லட்சம் ரூபா தில்லுமுல்லுகள் மூலம் வெளியேற்றப்பட்டால் இங்கு மக்களுக்கு என்ன போய்ச் சேரும்?
இலங்கை நாட்டின் ஜனாதிபதியின் வருகையை ஒட்டியே இத்தனை தில்லுமுல்லுகள் என்றால் பெரிய திட்டங்களில் பெருமளவு நிதிகையாளப்படும் திட்டங்களில் எவ்வளவு தில்லுமுல்லுகள், மோசடிகள், ஊழல்கள் நடக்கக்கூடும்?
இதைத் தடுக்க இன்று யாழ்ப்பாணம் வரும் மஹிந்த ராஜபக்ஷ நடவடிக்கை எடுப்பாரா? இந்தக் "கட்டவுட்" விடயத்தில் உண்மையில் நடந்தது என்ன என்பதை மக்கள் அறிய விசாரணைக் குழு ஒன்றை அவர் நியமிப்பாரா? இப்படி மக்கள் பணத்தைச் சூறையாடும் பெருச்சாளிகளை பொதுத் துறை நிறுவனங்களில் இருந்து வெளியேற்ற நடவடிக்கை எடுப்பாரா? அத்தகைய பெருச்சாளிகள் தன்னுடன் கூடவே இருக்கவேண்டும் என்று விடாப்பிடியாக நிற்கும் அரசின் உயர் மட்டங்களின் நோக்கங்கள் குறித்து ஆராய்வாரா? இந்தத் தில்லுமுல்லில் தொடர்புபட்டிருந்தவர்கள் இதன் மூலம் எவ்வளவு லாபமடைந்தார்கள் என்பது வெளிப்படுத்தப்படுமா?
கருத்துரையிடுக