
வடக்கு, கிழக்கு தமிழரின் தனித்துவமான தாயகம் என்ற கோட்பாட்டை நிராகரிக்கும் வகையில் சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்ச, சிறிலங்காவின் 64 வது சுதந்திர நாள் நிகழ்வில் உரையாற்றியுள்ளார்.
சிறிலங்காவின் எந்தப் பகுதியும் எந்தவொரு இனத்துக்கும் சொந்தமானதல்ல என்றும் அனைத்துப் பகுதிகளும் அனைவருக்கும் சொந்தம் என்றும் அவர் தனது உரையில் குறிப்பிட்டுள்ளார்.
அனுராதபுரவில் இன்று காலை நடந்த இந்த நிகழ்வில் மேலும் உரையாற்றிய சிறிலங்கா அதிபர்,
சுதந்திரம் என்பது இன்று எமது முன்னுள்ள பாரிய பொறுப்பாகும். அதனைக் கட்டிக்காக்க வேண்டிய கடமை எம் அனைவருக்கும் உள்ளது.
யுத்தத்தைக் காரணம் காட்டி சுதந்திரத்தை மறக்கடித்த நிலைமை அன்று இருந்தது.
இன்று யுத்தத்தால் பெருமளவில் பாதிக்கப்பட்ட மண்ணிலிருந்து சுதந்திரத்தைக் கொண்டாடும் அளவுக்கு நாம் வந்துள்ளோம்.
கிராமத்தைப் பாதுகாக்க பதுங்கு குழிகளையும் துப்பாக்கிகளையும் கேட்டிருந்த மக்கள் இன்று அபிவிருத்தி, சுதந்திரம் மற்றும் பரிசுத்தமான நாட்டை வேண்டி நிற்கின்றனர்.
எமக்கு எதிராக வெளிநாடுகளிலுள்ள பயங்கரவாத சக்திகள் பல்வேறு பொய்ப் பரப்புரைகளையும் சதி வலைகளையும் பின்னி வருகின்றன.
இங்குள்ள சிலரும் அவர்களுக்கு உறுதுணையாக இருக்கின்றனர்.
சில நாடுகளில் இடம்பெற்ற பிரிவினைவாதத்தினை சிறிலங்காக்குள்ளும் நடத்துவதற்கு அவர்கள் முயற்சிக்கின்றனர்.
அவர்கள் அனைவருக்கும் நாங்கள் பதிலடி கொடுக்க வேண்டும்.
நாட்டில் சமாதானத்தை நிலைநிறுத்துவது தனியொருவரினால் செய்யக்கூடியது அல்ல.
அதற்கு அனைவரும் ஒத்துழைக்க வேண்டும். இந்த உண்மையை புரிந்துகொள்ளவும் வேண்டும்.
வெளிநாடுகளிலிருந்து உதவிகளைப் பெறுபவர்கள் இவ்விடயம் தொடர்பில் கவனம் செலுத்த வேண்டும்.
நாட்டுக்கும் நாட்டின் அனைத்து இன மக்களுக்கும் பொதுவான நிரந்தரமான சமாதானக் கொள்கையொன்றை ஏற்படுத்த வேண்டும்.
சிறிலங்காவில் எந்தவொரு பிரதேசமும் எந்தவொரு இனத்துக்கு மாத்திரம் சொந்தமானதல்ல. முழுநாடுமே எல்லோருக்கும் எல்லாம் பொதுவானது.
நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கையில் கடந்தகால பிரச்சினைகளுக்கு அனைவரும் பொறுப்பேற்க வேண்டுமெனத் தெரிவித்திருந்தது.
எமது மனசாட்சியின்படி நாம் அனைவரும் அதை ஏற்றுக்கொள்ள வேண்டும்.
கடந்த டிசம்பர் மாதம் 17ம் நாள் இந்த ஆணைக்குழு தனது பரிந்துரைகளை வெளியிட்டது.
அதன் பரிந்துரைகளை ஏற்று குறுகிய காலத்திற்குள். அதாவது கடந்த 6 வார காலங்களாக நாம் அவற்றை நிறைவேற்றியே வருகின்றோம்.
தேசிய இனப்பிரச்சினைக்கு தீர்வு காணும்போது பொதுமக்களின் வாக்குகளால் உருவாக்கப்பட்ட நாடாளுமன்றத்தினை ஒதுக்கி வைத்து விட எம்மால் முடியாது.
நாட்டின் நீதி, சட்டம் அனைத்துக்கும் நாம் அடிபணிவது போன்றே ஜனநாயக சக்தியான நாடாளுமன்றுக்கும் நாம் கட்டுப்பட்டு செயற்பட வேண்டும்.
பொதுமக்களின் வாக்குகளினால் மாத்திரமே ஓர் அரசாங்கத்தினை கவிழ்க்கும் கட்டுப்பாட்டுக்குள் நாம் உள்ளோம். அதை நாம் பாதுகாக்க வேண்டும்.
அந்தவகையில் ஜனநாயக நீரோட்டத்தில் தேசிய பிரச்சினைக்கு தீர்வு காணும் சக்தி நாடாளுமன்ற தெரிவுக்குழுவுக்கு மாத்திரமே உண்டு.
இதில் கலந்துகொண்டு அனைத்து பிரச்சினைகள் குறித்தும் செவிமடுத்து, மக்கள் தேவைகளை கவனத்திற்கொண்டு பிரச்சினைக்கு தீர்வுகாணும் பொறுப்பு அனைத்து கட்சிகளுக்கும் உண்டு.
எனவே அனைத்து கட்சிகளும் இந்த நாடாளுமன்ற தெரிவுக்குழுவில் இடம்பெற்று தேசிய இனப்பிரச்சினைக்கு தீர்வு காண வேண்டும்.,“ என்று அவர் தெரிவித்துள்ளார்.
கருத்துரையிடுக