மட்டக்களப்பு நகரில் மிகவும் பிரசித்தி பெற்றதும் சுமார் அறுவது வருடங்களுக்கு முன்னர் அமைக்கப்பட்டதுமான அகிம்சைவாதி மகாத்மா காந்தியின் சிலை மற்றும் சாரணியத்தின் தந்தை பேடன் பவல் ஆகியோரின் சிலைகள் இனந்தெரியாத நபர்களினால் உடைக்கப்பட்டுள்ளன.
நேற்று வியாழக்கிழமை இரவுக்கு பின்னர் இந்த சிலைகள் உடைக்கப்பட்டுள்ளதாகபொலிஸார் தெரிவித்தனர்.
மட்டக்களப்பின் கடந்த காலங்களில் அகிம்சை போராட்டங்களின் முக்கிய இடமாக திகழ்ந்து வந்ததுடன் மகாத்மா காந்தியின் அகிம்சை போராட்டத்தை கௌரவிக்கும் வகையிலும் இந்த சிலை நிறுவப்பட்டிருந்தது.
அத்துடன் பேடன் பவலின் நூற்றாண்டு விழாவின் நிகழ்வுகள் தம்புள்ளையில் இடம்பெற்று வருகையில் அதுவும் உடைக்கப்பட்டுள்ளது.
இரு சிலைகளினதும் தலைப்பகுதிகள் சேதமாக்கப்பட்டுள்ளதுடன் சம்பவ இடத்துக்கு வருகை தந்த மட்டக்களப்பு பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுவருகின்றனர்.
சம்பவத்தினை தொடர்ந்து பதற்ற நிலையை தணிப்பதற்காக குறித்த பகுதியில் பொலிஸ்மற்றும் படையினரின் பாதுகாப்பும் அதிகரிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை சம்பவ இடத்துக்கு சென்ற மட்டக்களப்பு மாவட்ட தமிழ் தேசிய கூட்டமைப்புபாராளுமன்ற உறுப்பினர் பொன்.செல்வராசா,கிழக்கு மாகாணசபை உறுப்பினர்களான பூ.பிரசாந்தன், இரா.துரைரெட்னம், தமிழ் தேசிய கூட்டமைப்பின் மட்டக்களப்பு நகர அமைப்பாளர் பிரசன்னா இந்திரகுமார் உட்பட்டோர் சம்பவம் தொடர்பில் பார்வையிட்டதுடன் சிலை உடைப்பு கடும் கண்டனமும் தெரிவித்தனர்.
சிலை சேதமாக்கப்பட்ட பகுதிக்கு வருகைதந்த மட்டக்களப்பு மாவட்ட பொலிஸ் அத்தியட்சர் லால் செனவிரட்ன குறித்த பகுதியை பார்வையிட்டதுடன் விசாரணையையும் மேற்கொண்டார்.
இந்த சம்பவம் தொடர்பில் துரித விசாரணையை மேற்கொள்ளுமாறும் பொலிஸாருக்கு பணிப்புரை விடுத்தனர்.
இதேவேளை மட்டக்களப்பு நகரில் உள்ள ஆனைப்பந்தி விபுலானந்தா மகளிர் கல்லூரியில் உள்ள சுவாமி விபுலானந்தர் சிலையும் மட்டக்களப்பு கல்வி வலயத்தில் உள்ள புலவர்மணி பெரியதம்பிப்பிள்ளையின் சிலைகளும் சேதமாக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பிலான விசாரணைகளை மட்டக்களப்பு பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
கருத்துரையிடுக