
புலிகளுடைய போராட்டம் முடிந்து, அந்த இயக்கம் அழிந்து விட்டது என நாம் பேசிக் கொண்டிருந்தாலும் அந்த இயக்கம் இன்னும் உயிர் வாழ்ந்து கொண்டிருப்பதை ஜெனீவா சென்ற போது அறிய முடிந்தது" என கைத்தொழில் வர்த்தகத் துறை அமைச்சர் ரிச்சார்ட் பதுயுதீன் தெரிவித்தார்.
கிண்ணியா பிரதேச முஸ்லிம்களின் எதிர்நோக்கியுள்ள காணிப் பிரச்சினைகள் தொடர்பாக இன்று கிண்ணியா பொது நூலக கேட்போர் கூடத்தில் நடைபெற்ற கலந்துரையாடலில் கலந்து கொண்டு பேசும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
கிண்ணியா நகர சபைத் தவிசாளர் எம்.எம். ஹில்மி தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் அவர் தொடர்ந்து கருத்துத் தெரிவிக்கையில்,
ஜெனீவா மனித உரிமைப் பேரவையில் நூற்றுக்கும் மேற்பட்ட தமிழ் சகோதரர்கள் வந்து அவர்களின் போராட்டங்களின் நியாயங்களையும் அவர்களுக்கு வழங்கப்பட வேண்டிய உரிமைகள் தொடர்பாகவும் கருத்துக்களை முன்வைத்தனர்.
அந்த மாநாட்டில் பல மொழிகளைப் பேசுகின்ற தமிழ் சகோதரர்களைக் கண்டோம். 15 மொழிகள் பேசுபவர்கள் கூட அங்கு கலந்துகொண்டு தழிழ் இனத்திற்னாக குரல்கொடுத்தார்கள். தமிழ் மக்களை அழைத்து பல்வேறு கூட்டங்களை அந்த பேரவையில் நடாத்தினார்கள்.
தமிழ் ஈழத்துக்காக போராடியது புலிகள் இயக்கம்;. அதேவேளை இந்தியா மூலம் பெற்றுக்கொடுக்க வந்த அதி கூடுதலான அதிகாரங்களைக் கொண்ட வட கிழக்கு இணைந்த மாகாண சபை முறைமை இந்த இரண்டு தீர்வுகளும் ஏதோ ஒருவகையில் பின்னடைந்திருப்பதை நாம் காணக்கூடியதாக இருக்கிறது.
எனினும் அமெரிக்காவும் மேற்கத்தைய நாடுகளும் ஏதோ ஒன்றைப் பெற்றுக்கொடுப்பதற்கு முயற்சி செய்து கொண்டிருப்பதை உங்களுக்கு சொல்லித் தெரிய வேண்டியதில்லை. இந்த வகையில் தமிழ் மக்களின் பிரச்சினை பெரிதாகப் பேசப்படுகின்ற சர்வதேசப் பிரச்சினையாக இன்று மாறியிருக்கிறது. தமிழ் மக்களுக்கு நிரந்தர அரசியல் தீர்வைப் பெற்றுக் கொடுக்க வேண்டும் என்று சர்வதேசம் பேசுகின்ற அளவுக்கு இலங்கைத் தமிழர் பிரச்சினை விஸ்வரூபம் எடுத்திருக்கிறது.
இது எதைச் சொல்கிறது என்றால் ஒரு இனத்தின் உரிமைப் போராட்டம் அழிந்து சென்றாலும் அவர்களின் இழப்புக்களும் தியாகங்களும் அவர்களுக்கு ஒரு தீர்வைப் பெற்றுக் கொடுக்கும் என்ற உண்மை புலப்படுத்துகின்றது என்றார் ..
கருத்துரையிடுக