
ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவுக்கு எதிரான வழக்கு அமெரிக்க நீதிமன்றத்தால் தள்ளுபடி செய்யப்பட்டதற்கு எதிராக, கொலம்பியா மாவட்ட மேல்முறையீட்டு நீதிமன்றத்தில் முறையிடப்பட்டுள்ளது.
படையினரால் கொல்லப்பட்டவர்களின் குடும்பத்தினரான காசிப்பிளை மனோகரன், கலைச்செல்வன், ஜெயக்குமார் ஐயாத்துரை ஆகியோரின் சார்பில், சட்டவாளர் புரூஸ் பெயன் - ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவுக்கு எதிராக கொலம்பியா மாவட்ட நீதிமன்றத்தில் நட்ட ஈடு வழக்குத் தொடுத்திருந்தார்.
ஆனால், ஜனாதிபதி மகிந்தவுக்கு இராஜதந்திர விலக்குரிமை உள்ளதாக அமெரிக்க இராஜாங்கத் திணைக்களம் பரிந்துரைத்ததன் அடிப்படையில், இந்த வழக்கை தம்மால் விசாரிக்க முடியாதிருப்பதாக கூறி, கொலம்பியா மாவட்ட நீதிபதி கொலீன் கொல்லர் கொட்டெலி கடந்த பெப்ரவரி 29ம் நாள் தள்ளுபடி செய்திருந்தார்.
எனினும் 30 நாட்களுக்குள் தீர்ப்புக் குறித்து மேல்முறையீடு செய்யும் வாய்ப்பின் அடிப்படையில், கொலம்பியா மாவட்ட நீதிமன்றத்தில் இந்த வழக்குத் தள்ளுபடி செய்யப்பட்டதற்கு எதிராக கொலம்பியா மேல்முறையீட்டு நீதிமன்றத்தில் சட்டவாளர் புரூஸ் பெய்ன் கடந்த 29ஆம் திகதி மேல்முறையீடு செய்துள்ளார்.
இந்த மேல்முறையீட்டு வழக்கை மூன்று நீதிபதிகளைக் கொண்ட அமர்வு மன்றம் விசாரிக்கும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
கருத்துரையிடுக