News Update :
Home » » அமெரிக்கா கொண்டு வந்த தீர்மானம் மூலம் இலங்கைக்குப் பாதிப்பு

அமெரிக்கா கொண்டு வந்த தீர்மானம் மூலம் இலங்கைக்குப் பாதிப்பு

Penulis : Antony on வியாழன், 5 ஏப்ரல், 2012 | AM 1:27


ஜெனிவாவில் ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் அமெரிக்கா கொண்டு வந்த தீர்மானம் மூலம் இலங்கைக்குப் பாதிப்பு ஏற்பட்டுள்ளது என்பதை ஏற்றுக் கொள்வதாக இலங்கை வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார்.
இலங்கை நாடாளுமன்றத்தில் நடைபெற்ற- ஜெனிவா தீர்மானம் குறித்த இரண்டு நாள் விவாதத்திற்குப் பதிலளித்துப் பேசிய போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

ஜெனிவா தீர்மானத்துக்கு இந்தியா அதற்கு ஆதரவு வழங்கியதாலும், பாதிப்புக்கள் ஏற்பட்டன. அதனையும் நாங்கள் ஏற்றுக் கொள்கிறோம்.

எமக்கு எதிராக தீர்மானம் கொண்டு வந்தார்கள் என்பதற்காகவும், எமக்கு எதிரான தீர்மானத்துக்கு ஆதரவாக வாக்களித்தார்கள் என்பதற்காகவும் இந்தியாவுடனும், அமெரிக்காவுடனும் நாம் பகைமை பாராட்டவில்லை. அவர்களும் எம்மோடு பகைமை பாராட்டவில்லை.

இதேவேளை அமெக்க இராஜாங்க செயலாளரை சந்திப்பதற்கு எனக்கு எந்தவிதமான தயக்கமும் இல்லை. அவர் எனக்கு அனுப்பிவைத்துள்ள அழைப்பு கடிதத்தின் பிரகாரம் மே மாதம் 18 ஆம் திகதி அமெரிக்கா சென்று அவரை சந்திப்பதென தீர்மானித்திருக்கிறேன்.

எம்மைப் பொறுத்தவரை உள்ளக விடயங்கள் தொடர்பில் முதலில் உள்நாட்டுக்கே அதிகாரங்கள் வழங்கப்பட வேண்டும். நடைமுறையில் இருக்கின்ற பிரச்சினைகளை தீர்ப்பதற்கு அரசாங்கத்தினால் மாத்திரமே முடியாது. அனைத்து தரப்பினரதும் ஒத்துழைப்புக்கள் மிக மிக அவசியமானதாகும்.

மேற்படி பிரேரணை அமெரிக்காவினால் கொண்டுவரப்பட்டமைக்கு தாமே மூல காரணம் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தெரிவித்திருக்கின்றது. இதன் மூலம் கூட்டமைப்பின் நிலைப்பாட்டினை புரிந்து கொள்ள முடிகின்றது.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பானது ஐக்கிய அமெரிக்காவை ஒரு கருவியாக பாவித்திருக்கின்றது. அங்கு அவ்வாறு நடந்து கொண்டு பிரேரணை கொண்டு வரப்பட்டமைக்கு அரசாங்கமே பொறுப்பு எனக் கூறுவதை நாம் ஏற்றுக்கொள்ள தயார் இல்லை.

இலங்கைக்கு எதிரான தீர்மானம் கொண்டு வரப்பட்டதை அடிப்படையாகக் கொண்டு நாம் தூதரகங்களை மூடிவிடப் போவதாக தெரிவிக்கப்பட்ட கருத்துக்கள் உண்மைக்குப் புறம்பானவை. அவ்வாறு செய்வது புத்திசாலித்தனமானது அல்ல.

எமது இராஜதந்திர உறவுகளில் எந்தவித பாதிப்புகளும் இல்லை. ஆனால், எமது வளங்களுக்கு ஏற்றவகையில் சில இடங்களில் தூதரகங்களை மூடி சில இடங்களில் புதியவற்றைத் திறக்கவுள்ளோம்.

துருக்கியில் உள்ள தூதரக பணியகத்தை முழுமையான தூதரகமாக தரமுயர்த்தவுள்ளோம். நைஜீரியா, அசர்பைஜான், சீசெல்ஸ், மொரிசியஸ் ஆகிய நாடுகளில் புதிய தூதரகங்களை அமைப்பதற்கு இலங்கை முடிவு செய்துள்ளது.

புதிய உலக ஒழுங்கிற்கமைய தூதரகங்களை மீளமைக்க வேண்டியுள்ளது.

எமக்கு நிதி கட்டுப்பாடுகள் உள்ளன. உலகில் 193 நாடுகள் உள்ளன. இவற்றில் 46 நாடுகளில் மாத்திரமே எமக்கு தூதரகங்கள் உள்ளன. எமது தேவைக்கிணங்க நாம் இவற்றை மீளமைக்க வேண்டும்.

அசர்பைஜானில் இலங்கையின் நீலக்கற்களுக்கு நல்ல கேள்வி இருப்பதை அங்கு சென்ற போது உணர்ந்து கொண்டேன்.

இந்து சமுத்திரத்தின் தெற்கிலுள்ள மொரிசியஸ், சீசெல்ஸ் ஆகிய நாடுகளுடன் மீன்பிடித்துறை அபிவிருத்திக்காக தொடர்புகளை விருத்தி செய்வது அவசியம்.

சில நாடுகளில் பல தசாப்தங்களுக்கு முன்னர் தூதரகங்களைத் திறந்தோம். தற்போது அவற்றின் அரசியல், பூகோள முக்கியத்தும் குறைந்து விட்டது.

சில நாடுகளில் எமது தேயிலைத் துறைக்காக தூதரகங்களை திறந்தோம். இன்று வரி கொள்கை காரணமாக அந்த நாடுகளில் எமது தேயிலை வர்த்தகம் வீழ்ச்சியடைந்து விட்டது.

அத்துடன் சில நாடுகள் அரசியல் ரீதியில் முக்கியமானவையல்ல. அல்லது முன்பிருந்த அரசியல் முக்கியத்துவம் குறைந்து விட்டது.

அனைத்துலக சமூகம் இலங்கை போன்ற நாடுகளுக்கு அழுத்தங்களைக் கொண்டு வருவதற்கு முன்னர் அந்த நாட்டுக்கே உரிய தீர்வுகளை, முன்னெடுப்புக்களை செய்வதற்கான சந்தர்ப்பங்களை வழங்க வேண்டும்.

ஜெனிவாவுக்குச் சென்ற எமது குழுவினர் ஒருவருக்கு ஒருவர் முரண்பட்டுக் கொண்டதாகவும், ஒற்றுமையின்றிச் செயற்பட்டதாகவும் சிலர் குற்றம்சாட்டினர்.

ஆனால் ஒவ்வொருவரும் ஒற்றுமையுடன் தனித்தனியே நிகழ்ச்சி நிரல்களைத் தயாரித்து அதற்கேற்ற விதத்தில் இலங்கைக்கு ஆதரவு திரட்ட முற்பட்டனர்.

ஜெனிவா சென்ற அரசகுழுவுக்குத் தலைமையேற்றிருந்த அமைச்சர் மகிந்த சமரசிங்க விவாதத்தில் பங்கேற்க ஏன் வரவில்லை என்று சிலர் கேள்வி எழுப்பியிருந்தனர்.

அவர் அதிகாரபூர்வ பயணமாக உகண்டா சென்றுள்ளார். அதனால் தான் அவர் வரவில்லை.

நல்லிணக்க ஆணைக்குழுவின் எல்லா பரிந்துரைகளையும் நடைமுறைப்படுத்த முடியாது.

அறிக்கையில் கூறப்பட்டுள்ள 169 பரிந்துரைகளில் நடைமுறைப்படுத்தக் கூடாதவையும் உள்ளன. எவற்றை நடைமுறைப்படுத்துவதென்று இலங்கை அரசே தீர்மானிக்கும்.

உலகில் எந்த நாட்டிலுமே ஆணைக்குழுக்களின் எல்லாப் பரிந்துரைகளையும் நடைமுறைப்படுத்திய வரலாறு இல்லை.“
என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.
Share this article :

கருத்துரையிடுக

 
Company Info | Contact Us | Privacy policy | Term of use | Widget | Advertise with Us | Site map
Copyright © 2011. welvom . All Rights Reserved.
Design Template by panjz-online | Support by creating website | Powered by Blogger