News Update :
Home » , , » இந்தியாவின் வெளிவிவகார கொள்கை குறித்த சர்ச்சைகளும், விவாதங்களும்

இந்தியாவின் வெளிவிவகார கொள்கை குறித்த சர்ச்சைகளும், விவாதங்களும்

Penulis : ۞உழவன்۞ on ஞாயிறு, 10 மார்ச், 2013 | முற்பகல் 9:23

இந்தியாவின் வெளிவிவகார கொள்கை குறித்த சர்ச்சைகளும், விவாதங்களும் இப்போது மேலோங்கி வருகின்றன. அதுவும் 24 மணிநேர செய்திச் சனல்களின் ஆதிக்கம் இந்தியாவில் பெருகிவிட்ட நிலையில் இதனை அக்கு வேறு ஆணி வேறாகப் பிரித்து ஆராய்வதற்கு வசதியாகிப் போய்விட்டது. இந்தியாவில் எதிர்க்கட்சிகள் மட்டுமன்றி மத்திய அரசில் அங்கம் வகிக்கும் கட்சிகளும் கூட இந்தியாவின் வெளிவிவகாரக் கொள்கை தவறான வழியில் செல்வதாக குற்றம் சாட்டி வருகின்றன. அதைவிட புதுடில்லியின் தேசிய நலன்களை மையப்படுத்திய ஊடகங்களும், அரசியல் விமர்சகர்களும் கூட இப்போது இந்தியாவின் வெளிவிவகாரக் கொள்கை மீது கேள்வியை எழுப்ப ஆரம்பித்து விட்டனர். இதற்கு முக்கியமான காரணங்களில் ஒன்று இலங்கை விவகாரத்தில் இந்தியா கடைப்பிடித்து வரும் கொள்கைதான். இலங்கை அரசாங்கத்தைக் காப்பாற்றும் வகையில் இந்தியாவின் வெளிவிவகாரக் கொள்கை அமைந்திருப்பது அண்மைக் காலங்களில் கடும் விமர்சனங்களை ஏற்படுத்தியுள்ளது. மன்மோகன் சிங் தலைமையிலான கூட்டணி அரசாங்கம் பதவிக்கு வர முன்னரும் இந்தியாவின் வெளிவிவகாரக் கொள்கை விமர்சனங்களுக்கு அப்பாற்பட்டதாக இருந்திருக்கவில்லை. 1991ற்குப் பின்னர் இலங்கை விவகாரத்தில் அவ்வளவாக தலைபோடாத கொள்கையை கடைப்பிடித்தது இந்தியா. ஆனால் மன்மோகன் சிங் தலைமையிலான அரசாங்கம் பதவிக்கு வந்த பின்னர் அந்த நிலை மாறியது. மெல்ல மெல்ல இலங்கையுடன் நெருங்கிச் சென்று இறுக்கமான உறவை ஏற்படுத்திக் கொண்டது. இலங்கையில் போர் உச்சக்கட்டத்தை நெருங்க நெருங்க இந்த உறவும் பலம் வாய்ந்ததாக மாறியது. இலங்கையுடனான இந்த இறுக்கமான உறவு தமிழர்களின் நலனுக்கு பாதிப்பை ஏற்படுத்திய போதுதான் அது கடும் விமர்சனங்களுக்கு உள்ளாகத் தொடங்கியது. குறிப்பாகப் போரின் போதும் போர் முடிவுக்கு வந்த பின்னரும் இந்தியா கடைப்பிடிக்கும் கொள்கை குழப்பம் நிறைந்த ஒன்றாகவே தெரிகிறது. ஒரு பக்கத்தில் இந்தியாவைச் சுற்றி சீனா முத்துமாலை வியூகத்தை வகுத்துக் கொண்டிருக்கும் நிலையில் இந்தியாவின் குழப்பமான வெளிவிவகாரக் கொள்கை பாதகமான விளைவுகளைத் தோற்றுவிக்கத் தொடங்கியது. இலங்கை, மாலைதீவு, பாகிஸ்தான், பங்களாதேஷ், நேபாளம் என்று இந்தியாவைச் சுற்றியுள்ள நாடுகள் எங்கிலும் தனக்கான தளத்தை இந்தியாவினால் உருவாக்கிக் கொள்ள முடியாத நிலை ஒன்று உருவாகியுள்ளது. இலங்கை விவகாரத்தில் சீனாவின் தலையீடுகளை தடுக்கவோ, தவிர்க்கவோ முடியாத கட்டத்திற்கு இந்தியா சென்றுவிட்டது. இந்தியாவின் சொல்லைக் கேட்கின்ற நிலையில் இலங்கை இல்லை என்பது பல விடயங்களில் தெளிவாகவே உணர்த்தப்பட்டுள்ளது. அதில் முக்கியமானது போர் முடிவுக்கு வந்தவுடன் தமிழர் பிரச்சினைக்கு நிரந்தர அரசியல் தீர்வு காணப்படும் என்று கொடுக்கப்பட்ட வாக்குறுதி. அது இன்றுவரை இலங்கை அரசாங்கத்தினால் கண்டுகொள்ளப்படவேயில்லை. அது மட்டுமன்றி 13வது திருத்தத்தை முழுமையாக நடைமுறைப்படுத்துமாறு இந்தியா வலியுறுத்தி வருகின்ற போதிலும் அதை இலங்கை ஏற்றுக் கொள்வதாகவே இல்லை. இந்தநிலையை இந்தியா இலங்கையில் மட்டும் எதிர்கொள்ளவில்லை. மாலைதீவு அரசும் கூட சீனாவின் அரவணைப்புகளுக்குச் செல்லத் தொடங்கிய பின்னர் இந்தியாவை அவ்வளவாக மதிப்பதில்லை. அண்மையில் முன்னாள ஜனாதிபதி நஜீத்தை கைது செய்யப் போவதில்லை என்று இந்தியாவுக்கு கொடுத்த வாக்குறுதியை மீறியே அவரைக் கைது செய்தது மாலைதீவு அரசாங்கம். நஜீத் இந்தியா சார்பாளர். சீனத் தலையீட்டை விரும்பாதவர். ஆனால் தற்போதைய மாலைதீவு அரசு அதற்கு நோ் எதிர்மாறானது. கடந்த காலங்களில் மாலைதீவின் பாதுகாவலனாக இருந்த இந்தியா இப்போது அந்த இடத்தை இழந்து நிற்பதற்கும் இந்திய வெளிவிவகாரக் கொள்கையின் தவறே காரணம் என்று குற்றம் சாட்டப்படுகிறது. இன்னொரு பக்கத்தில் பாகிஸ்தான் இந்தியாவின் எதிரி நாடாக இருந்த போதிலும் சீனாவுடனான அதன் நெருக்கம் தொடர்ந்து வலுத்துக் கொண்டு வருவது இந்தியாவுக்கு மட்டுமன்றி அமெரிக்காவுக்கும் கூட எரிச்சலை ஏற்படுத்தியுள்ளது. பாகிஸ்தானின் குவதார் துறைமுகத்தை சீனா தனது கட்டுப்பாட்டில் எடுத்துக் கொண்டுள்ளதன் மூலம் அரபிக் கடலுக்கான நுழைவாயிலில் கால் பதித்துள்ளது. இது இந்தியாவின் சர்வதேசக் கடற்போக்குவரத்து மட்டுமன்றி பாதுகாப்புக்கும் அச்சுறுத்தலாக கருதப்படுகிறது. இதையிட்டு இந்தியா அதிகமாகவே கவலை கொண்டுள்ளது. இந்தக் குவதார் துறைமுகத்தின் மூலம் தலையைச் சுற்றி மூக்கைத் தொடும் வகையிலான தனது கடல் வழிப் பாதைச் சிக்கலுக்கு தீர்வு காண்பதற்கு முனைகிறது சீனா. அதேவேளை பங்களாதேஷின் சிட்டகொம் துறைமுகம் சீனாவின் ஆதிக்கத்துக்குள் வந்துள்ளது. இந்தியாவுக்கும் பாகிஸ்தானிடம் இருந்து பங்காளதேஷ் தனிநாடாகப் பிரிப்பதற்கு இந்தியா தனது படைகளை அனுப்பி பாகிஸ்தானுடன் ஒரு போரையே நடத்தியது. ஆனால் அதே பங்களாதேஷ் இந்தியாவுக்கு அருகில் உள்ள தனது துறைமுகத்தை சீனாவுக்கு கொடுக்கிறது. நேபாளத்தின் அண்மைய மாற்றங்களும் கூட இந்தியாவை பெரிதும் ஆட்டம் காண வைத்துவிட்டது. இதுவரை நேபாளத்துடன் எந்தத் தூதரக உறவையும் கொண்டிராத சீனா அண்மையில் திடீரென தூதரக உறவை ஏற்படுத்தப் போவதாக அறிவித்தது. இதனால் நேபாளப் பிரதமரைக் கடந்த ஜனவரி மாதம் நடந்த குடியரசு தின விழாவுக்கு விருந்தினராக அழைத்துப் பேசியது. பின்னர் நேபாள வெளிவிவகார அமைச்சரையும் புதுடில்லி அழைத்துப் பேசியுள்ளது. ஆனாலும் இந்தியாவுக்குச் சாதகமான நிலை இன்னமும் உறுதிப்படுத்தப்படவில்லை. இலங்கையில் சீனாவின் ஆதிக்கம் அதன் அசுர வளர்ச்சியைப் பற்றி சொல்லித் தெரிய வேண்டியதில்லை. இந்தியா தன்னைச் சுற்றி இருந்து வந்த நட்பு வலயத்தை இழந்து வருவதுடன் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலை எதிர்கொள்ளக்கூடிய நிலையையும் எதிர்கொண்டுள்ளது. இது இந்திய வெளிவிவகாரக் கொள்கையின் தவறான அணுகுமுறையினால் ஏற்பட்ட விளைவு என்கின்றன இந்தியாவின் எதிர்க்கட்சிகள். இந்திரா காந்தி காலத்து வெளிவிவகாரக் கொள்கையை சுட்டிக்காட்டி விமர்சிக்கும் போக்கு புதுடில்லியில் வளர்ந்துள்ளது. அதுவும் இலங்கை விவகாரத்தில் இந்தியாவின் தற்'பேதைய அணுகுமுறை இந்திய வெளிவிவகாரக் கொள்கை பற்றிய விமர்சனங்களை இன்னும் அதிகரிக்கச் செய்துள்ளது. இலங்கை ஒரு இறைமையுள்ள நாடு என்றும் அதன் உள்விவகாரங்களில் இந்தியா தலையிட முடியாது என்றும் இந்தியா நழுவிக் கொள்ளப் பார்க்கிறது. திரும்பத் திரும்ப சல்மான் குர்ஷத் அதை வலியுறுத்தி வருவது எதிர்க்கட்சிகளுக்கு கடும் எரிச்சலை ஏற்படுத்தியுள்ளது. இலங்கையைக் காப்பாற்றவே இந்தியா இந்த வாதத்தை முன்வைத்து தப்பிக்கப் பார்க்கிறது. தானும் தலையிடத் தயாரில்லாத இந்தியா வேறு எவரையும் தலையிடவும் அனுமதிப்பதில்லை என்பதிலும் உறுதியாக உள்ளது. இலங்கை இறைமையுள்ள நாடு ஒன்றின் உள் விவகாரங்களில் தலையிடுவதில்லை என்ற கொள்கையை இந்தியா கடைப்பிடிப்பது உண்மையானால் பங்களாதேஷ் விவகாரத்தில் தலையிட்டிருக்க முடியாது. இலங்கைக்கு தனது படைகளை அனுப்பியிருக்க முடியாது. இதுபோன்ற சம்பவங்களையெல்லாம் மறைத்துக் கொண்டே இந்தியா இப்போது தனது நிலையைப் பாதுகாக்க முற்படுகிறது. ஆனால் வல்லரசாகும் கனவுடன் இருக்கும் இந்தியா, ஐநாவின் நிரந்தர உறுப்பினர் பதவிக்கு குறிவைத்துள்ள இந்தியா, பிராந்திய வல்லரசு என்று கூறிக் கொள்ளும் இந்தியா, தனது கண்ணுக்கு முன்னே உள்ள பிரச்சினைழைய கண்டும் காணாமலும் போக முடியாது என்கின்றனர் மனித உரிமையாளர்கள். இது இந்தியாவின் ஊடகங்களிலும், விமர்சகர்களினாலும் அண்மையில் அதிகம் அலசப்படும் முக்கிய விவகாரமாகியுள்ளது. இலங்கையுடன் மட்டுமன்றி தனது அயல்நாடுகளுடனும் உறவுகளை மேலும் வலுப்படுத்திக் கொள்வதற்கு இந்தியா தனது வெளிவிவகாரக் கொள்கையை மாற்றிக் கொள்ள வேண்டும் என்ற கருத்து வலுப்பெற்றுக் கொண்டு வருகிறது. இது இந்தளவுக்கு கண்டுகொள்ளப்படும் என்ற கேள்வி நிறையவே உள்ளது. மன்மோகன் சிங் தலைமையிலான அரசின் ஆயுள் தேய்ந்து போகத் தொடங்கியுள்ள நிலையிலும், அடுத்த தோ்தலுக்கான நாட்கள் எண்ணப்பட்டுக் கொண்டிருக்கின்ற நிலையிலும் எழுந்துள்ள இந்தச் சர்ச்சைக்கு ஒருவேளை அடுத்த அரசாங்கத்தின் பதவிக் காலத்தில் சாதகமான முடிவு கிடைக்கக்கூடும். அந்த மாற்றம் இந்தியாவுக்கு மட்டுமன்றி தமிழர்களுக்கும் சாதகமானதாக அமைவதற்கான வாய்ப்புகளை நிராகரிக்க முடியாது. ஹரிகரன்
Share this article :

கருத்துரையிடுக

 
Company Info | Contact Us | Privacy policy | Term of use | Widget | Advertise with Us | Site map
Copyright © 2011. welvom . All Rights Reserved.
Design Template by panjz-online | Support by creating website | Powered by Blogger