News Update :
Home » » வெளியில் வீரம் பேசிக்கொண்டு, அரசாங்கம் பின் கதவால் அமெரிக்காவிடம் சமரசம்

வெளியில் வீரம் பேசிக்கொண்டு, அரசாங்கம் பின் கதவால் அமெரிக்காவிடம் சமரசம்

Penulis : ۞உழவன்۞ on புதன், 13 மார்ச், 2013 | முற்பகல் 3:00

அமெரிக்க, இந்திய எதிர்ப்பு வீரக்கதைகளை சிங்கள மக்கள் மத்தியில் பேசிக்கொண்டு, அரசாங்கம் பின் கதவால் அமெரிக்காவிடம் சமரசம் பேசுகிறது. இந்த பின்கதவு சமரச வேலைகளுக்காக இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்யப்பட்டவர்தான் சுப்பிரமணிய சுவாமி. கொழும்பு, டெல்லி, வாஷிங்டன் என இலங்கை அரசாங்கத்தின் தூதுவராக பணியாற்றும் சுப்ரமணிய சுவாமிக்கு அரசாங்கம் இலங்கை குடியுரிமை வழங்கலாம் என ஜனநாயக மக்கள் முன்னணி தலைவர் மனோ கணேசன் தெரிவித்தார். அதிகாரத்தை பகிர்ந்து ஐக்கியப்படுத்தும் இயக்கம் கொழும்பில் இன்று நடத்திய ஊடகவியலாளர் மாநாட்டில் மனோ கணேசன் மேலும் கூறியதாவது, ஜெனீவா 2012ம் வருடத்தை போல் இந்த வருடமும் நமது நாட்டுக்கு எதிரான தீர்மானத்தை கொண்டு வருவதற்கு அமெரிக்காவும், இந்தியாவும் சண்டித்தனம் செய்கின்றன என அமைச்சர் விமல் வீரவன்சவின் கட்சி ஊடக பேச்சாளர் கூ றுகிறார். இப்படி கூறும் இந்த மனிதரை எனக்கு தெரியும். பத்து வருடங்களுக்கு முன்னர் நான் மேல் மாகாணசபையில் இருந்தபோது அங்கு ஜேவீபியின் சார்பாக இருந்து, நாட்டில் தொழிலாளர் வர்க்க ஆட்சியை கொண்டுவருவோம் என்று வீராவேசத்துடன் பேசியவர்தான் இவர். இன்று இந்த இனவாத அரசாங்கத்தில் இருந்துகொண்டு மீண்டும் வீராவேசம் பேசுகிறார். இதையே அரசாங்க அமைச்சர்களும் கூறுகிறார்கள். இப்படி கூறும் இந்த அரசாங்கம்தான் இந்திய அரசியல்வாதி சுப்பிரமணிய சுவாமியை பயன்படுத்தி அமெரிக்க அரசாங்கத்துடன் பின் கதவால் சமரசம் பேசுகிறது. தீர்மான வாசகங்களை மாற்றி அமைக்கும்படி கெஞ்சுகிறது. இதற்கு இந்திய மத்திய அரசின் ஆசீர்வாதமும் உண்டு. மென்மையான வாசகங்களுடன் தீர்மானம் கொண்டுவரப்பட்டால், அது இலங்கை அரசுக்கு மாத்திரம் அல்ல, இந்திய அரசுக்கும் சாதகமாக அமையும். இதற்கு இன்று சுப்ரமணிய சுவாமியை இலங்கை, இந்திய அரசாங்கங்கள் பயன்படுத்துகின்றன. மூத்தோர் சபை மூத்தோர் சபை சார்பாக நோபல் பரிசு பெற்ற தென்னாபிரிக்க பேராயர் டெஸ்மண்ட் டுட்டு இலங்கை அரசாங்கத்தின் மனித உரிமை இலட்சணத்தை புட்டு வைத்துள்ளார். அவரும், முன்னாள் அயர்லாந்து ஜனாதிபதி மேரி ரொபின்சனும் இலங்கை அரசாங்கத்தின் மனித உரிமை நடைமுறைகள் பற்றி தீவிர கருத்துகளை தெரிவித்துள்ளார்கள். அபிவிருத்தி பற்றி பேசும் அரசாங்கம், மனித உரிமை விவகாரம் தொடர்பில் கடந்த ஐநா மனித உரிமை கூட்டத்திற்கும் தற்போதைய கூட்டத்திற்கும் இடையில் எந்தவித மனித உரிமை அபிவிருத்தியையும் காணவில்லை என இவர்கள் சொல்லியுள்ளார்கள். அதுமட்டும் அல்லாமல், இலங்கையில் நடக்கவுள்ள பொதுநலவாய மாநாட்டை அடுத்து வழமையான சம்பிரதாயத்தின் அடிப்படையில் பொதுநலவாய சம்மேளனத்தின் தலைமை பொறுப்பை இலங்கைக்கு வழங்க முடியுமா என கேள்வி எழுப்பியுள்ளார்கள். உண்மையில் இது இலங்கை அரசாங்கத்துக்கு வழங்கப்பட்டுள்ள எச்சரிக்கை. அரசாங்கத்தின் தலைவலி தொல்லை இன்னும் சில நாட்களில் முடிவடைய உள்ள ஐநா மனித உரிமை கூட்டத்தொடருடன் முடிவுக்கு வரப்போவதில்லை என்ற முன்னறிவித்தலை இந்த மூத்தோர் சபையினரின் கூற்று அறிவிக்கின்றது. ஐநா மனித உரிமை காய்ச்சல் முடிந்தவுடன், பொதுநலவாய காய்ச்சல் ஆரம்பித்துவிடும் என்பதுதான் இந்த எச்சரிக்கை. கிளிநொச்சி ஊர்வலம் கடந்தவாரம் கொழும்புக்கு வர இருந்த காணமல் போன உறவுகளின் குடும்ப உறுப்பினர்களை அரசாங்கம் தடுத்து நிறுத்தியது. கொழும்பிலும், வவுனியாவிலும் நாம் நடத்த இருந்த ஊர்வலங்களுக்கு ஆயிரம் கட்டுப்பாடுகளை அரசாங்கம் விதித்தது. நேற்று இதே அரசாங்கம் கிளிநொச்சியில் பவந்தமாக தமிழ் மக்களை வரவழைத்து அரசு சார்பு ஊர்வலத்தை நடத்தியுள்ளது. கடந்த ஜெனீவா கூட்டத்தின் போது கொழும்பில் பெரும் ஆரவாரம் ஏற்பட்டது. சுவர்களில் சுவரொட்டிகளும், தெருக்களில் ஊர்வல கோஷங்களும் உலக நாடுகளை திட்டி தீர்த்தன. இன்று கொழும்பில் சூடு இருக்கிறது. ஆனால் ஆரவாரம் இல்லை. அதனாலோ, என்னவோ கிளிநொச்சியில் சொல்லொனா துன்பங்களின் மத்தியில் வாழும் மக்களை பிடித்து வந்து பலவந்தமாக அரசாங்கத்தை பாராட்டி, அமெரிக்காவை திட்டி ஊர்வலம் நடத்தியுள்ளார்கள். இதை யார் நம்ப போகிறார்கள்? இத்தகைய பலவந்த ஊர்வலங்களை நடத்த இந்த அரசாங்கத்துக்கு வெட்கம் இல்லையா என கேட்க விரும்புகிறேன்.
Share this article :

கருத்துரையிடுக

 
Company Info | Contact Us | Privacy policy | Term of use | Widget | Advertise with Us | Site map
Copyright © 2011. welvom . All Rights Reserved.
Design Template by panjz-online | Support by creating website | Powered by Blogger