News Update :
Home » » புலம்பெயர் தமிழர் வாழ்வில் வலைத்தளங்கள், வலைப்பூக்களின் பங்கு

புலம்பெயர் தமிழர் வாழ்வில் வலைத்தளங்கள், வலைப்பூக்களின் பங்கு

Penulis : ۞உழவன்۞ on செவ்வாய், 11 ஜூன், 2013 | AM 11:20

ஈழத் தமிழர்கள் தாய்மண்ணைவிட்டு வெளியேறுவதற்கு முதன்மைக் காரணியாக அமைந்தது இலங்கைத் தீவின் அரசியல் சூழலே. பொருள் தேடலை நோக்கிய பெயர்தல் என்பதையும் அரசியல் சிக்கலின் உபவிளைவாகவே பார்க்க வேண்டியிருக்கிறது. 1983ஆம் ஆண்டு நடந்தேறிய இனக்கலவரத்திற்குப் பின்னர் கணிசமான தமிழர்கள் நாட்டைவிட்டு வெளியேற ஆரம்பித்தார்கள். இன்று போர் முடிவுக்குக் கொண்டுவரப்பட்டுவிட்டதாகச் சொல்லப்படும்போதிலும், புலம்பெயர்தல் நின்றபாடில்லை. இந்நிலையில், உலகெங்கிலும் பரந்து வாழும் தமிழர்களை ஒருங்கிணைக்கும் இழையாக வலைத்தளங்களும் வலைப்பூக்களும் தொழிற்படுகின்றன. அவர்களது கருத்துப் பரப்பல் மற்றும் பரிமாற்றம், ஆவணப்படுத்தல் நிகழ் வரலாற்றைப் பதிவுசெய்தல் ஆகியவற்றில் வலைத்தளங்களின் பங்களிப்பு அளப்பரியது.

ஆரம்பத்தில் புகலிடத் தேசங்களில் வாழ்ந்த பெரும்பாலான தமிழர்களைப் பொறுத்தவரை இணையம் ஒரு தொடர்பாடல் கருவியாகவே கருதப்பட்டது. பிறகு வலைத்தளங்கள் அறிமுகமாயின. அவற்றை வடிவமைப்பதற்கும் எழுதுவதற்கும் தொழில்நுட்ப நிபுணர்களாயிருத்தல் அவசியமல்ல என்று உணர்ந்ததும் இணையம் அவர்களது வெளிப்பாட்டுக் களமாயிற்று. ஆரம்ப காலத்தில் உறவுகளையும் தாய்மண்ணையும் நினைந்துருகும் எழுத்துக்களே வலைத்தளங்களில் பதிவாயின. நிலம் பிரியும் துயரத்தை அனுபவித்தறியாதவர்கள் அவற்றின் மீது விமர்சனங்களை அடுக்கினார்கள். இருந்தபோதிலும் குறிப்பிட்ட காலம்வரை, ‘வாழ முடியாத நிலத்தில் எழுத்தால் வாழுந்தன்மை’யே தொடர்ந்திருந்தது. பின்வந்த காலங்களில், புலம்பெயர் தேசங்களின் தனிமை, வேலைப்பளு, மொழி மற்றும் கலாச்சார அந்நியத்தன்மைகளைக் குறித்த எண்ணப் பரிவர்த்தனைகள் தொடர்ந்தன. உதிரி மனிதர்கள் ஒரு கூட்டிணைந்த சமூகமாகத் தம்மை உணரத் தொடங்கினார்கள். கற்பனையில் உருவகிக்கப்பட்ட தூலமற்ற நிலமொன்றில் நின்றபடி பேசத் தொடங்கினார்கள்.
தொடர்ந்த தசாப்தங்களில் ஈழ அரசியல் குறித்த உரையாடலானது வலைத்தளங்களின் பிரதான பேசுபொருளாயிருந்தது. நிலத்தின் நீட்சியாகப் போராட்டத்தின் மீதான சார்பு-எதிர் நிலைகளை அவை பிரதிபலித்தன. எல்லாத் தளங்களும் சாரமுள்ள உரையாடல்களை நிகழ்த்தியதாகச் சொல்வதற்கில்லை. ஆழமற்ற, மேலோட்டமான, கவன ஈர்ப்புத் தளங்களும் நிறைந்திருந்தன. தத்தம் நிலைப்பாடுகளைக் கெட்டியாகப் பிடித்தபடி நிகழ்த்தப்பட்ட காரசாரமான விவாதங்களில் தனிப்பட்ட தாக்குதல்களையும் அவதூறுகளையும் காண முடிந்தது. அதேசமயம், விவாதங்களைக் கருத்து மறுவுருவாக்கத்தின் கருவியாக அல்லாமல் சுயபரி சோதனைக்குத் தூண்டுதலாக எடுத்துக்கொண்டவர்கள் முன்னோக்கி நகர்ந்தனர். அதேசமயம் அரசியல் சரி, பிழைகளில் நின்று குழம்பவும் தொடர்விவாதங்கள் புகுத்திய சலிப்பால் பொதுவெளியினின்று விலகவும் வலைத்தளங்கள் தூண்டின என்பதையும் குறிப்பிட்டே ஆக வேண்டும்.
‘இறுதிப் போர்’ என்று குறிப்பிடப்படும் மே 2009இல் வலைத்தளங்கள் துயரத்தின் வடிகால்களாக உரு மாறின. போர் உக்கிரம்கொண்டிருந்த வன்னிமண்ணிலிருந்து சர்வதேசச் செஞ்சிலுவைச் சங்கம் போன்ற தொண்டு நிறுவனங்கள் வெளியேற்றப்பட்டதையடுத்து, வெளியுலகிலிருந்து அந்த நிலம் முற்றிலுமாகத் துண்டிக்கப்பட்டது. அரிதிலும் அரிதான தொலைபேசி அழைப்புகள் மூலமாகவும் சில செய்தித்தளங்கள் மூலமாகவும் மட்டுமே அங்கே என்ன நடந்துகொண்டிருந்தது என்பதை அறிந்துகொள்ள முடிந்தது. குறிப்பாகச் செய்தி வலைத்தளங்களைப் பார்த்துவிட்டு உறங்கப் போய், காலையில் அவற்றில் கண் விழித்தெழுவதாகவே புலம்பெயர் தமிழர்களது நாட்கள் கழிந்தன. அந்நாட்களில் பெரும்பாலானவர்களது சார்பு-எதிர் நிலைகள் பின்தள்ளப்பட்டு, மனிதாபிமானமே உள்நின்று இயக்குவதாயிற்று. சிலர் மட்டும் விடுதலைப்புலிகளின் வீழ்ச்சியை எதிர்நோக்கியவர்களாகக் காத்திருந்தார்கள். அந்தக் குறிப்பிட்ட காலகட்டத்தில் புலம்பெயர்ந்த தேசங்களில் வாழ்ந்த இளைஞர்களது சமூக அக்கறையை வெளிக்கொணர்ந்து, இனப்படு கொலைக்குப் பலியாகிக்கொண்டிருந்த மக்களுக்காகத் தெருவில் இறங்கிப் போராட ஆற்றுப்படுத்தியதில் வலைத்தளங்களின் பங்கு முக்கியமானது.
பிறகு, என்ன நடந்ததென்பதை நாமறிவோம்; உலகமும் அறியும். இனக் கபளீகரத்தை மறைக்க இலங்கை அரசால் எடுக்கப்பட்ட எத்தனங்கள் வியர்த்தமாகிப்போக, அவ்வரசு மீண்டும் மீண்டும் தன்னெஞ் சறியப் பொய்யுரைத்துக்கொண்டேயிருக்கிறது. பிராந்திய, ஏகாதிபத்திய நலன்களுக்கு அமைவுறவே குற்றமும் தண்டனையும் தீர்மானிக்கப்படும் என்பதை உணர்ந்திருந்தும், தளர்வுறாது, ‘இலங்கை அரசு போர்க் குற்றவாளியே’ என்று நிரூபிப்பதை ஒரு வரலாற்றுக் கடமையாகக் கருதிப் புலம்பெயர் தமிழர்கள் செயலாற்றிவருகின்றனர். அவ்வாறான உணர்வாளர்கள், செயற்பாட்டாளர்களை ஒருங்கிணைப்பதிலும் புதிய தகவல்கள், நிலைப்பாடுகளை அறியத்தருவதிலும் ‘இனப்படுகொலைக்கு எதிரான தமிழர் அமைப்பு’ போன்ற வலைத்தளங்கள் பெரும்பங்காற்றிவருகின்றன. இவ்விடயத்தில் ‘சானல் 4’, ‘அல் ஜஸீரா’ போன்ற வெளிநாட்டுச் செய்தி ஊடகங்களின் பங்களிப்பும் குறிப்பிடத்தகுந்ததே.
மேலும், அந்தரவெளியில் இயங்கும் ஆவணக் காப்பகங்களாக வலைத்தளங்களைச் சொல்லலாம். தமிழர்களது மனங்களில் மாறா வடுவாக நிலைத்துவிட்ட யாழ்ப்பாண நூலக எரிப்பிற்குப் பிறகு, அச்சுப் பிரதிகளின் அமரத்துவத்தில் அவநம்பிக்கை வந்துவிட்டது. சிறிது சிறிதாக ஆக்கிரமிப்பாளர்களால் விழுங்கப்பட்டுக்கொண்டிருக்கும் ஒரு தேசத்தின் அறிவுக்கருவூலமாக இணையதளங்களே இயங்கிக்கொண்டிருக்கின்றன. அதற்கு மிகச் சிறந்த உதாரணமாக ‘நூலகம்’ (noolaham.org) இணையதளத்தைக் குறிப்பிடலாம். காலகாலமாக இலங்கை வாழ் பேரினவாதிகளால் மேற்கொள்ளப்பட்டுவரும் வரலாற்றுத் திரிபுபடுத்தல்கள், தகிடுதத்தங்களிலிருந்து ஈழத்தமிழர் வரலாறு தப்பிப் பிழைத்திருக்கவும் வரலாற்றை உள்ளது உள்ளபடியே எதிர்காலச் சந்ததிக்காகச் சேமித்துவைக்கவும் இணைய ஆவணக் காப்பகங்கள் பேருதவிபுரிகின்றன.
இலக்கியத்தை வெகுசனமயப்படுத்தியதில் வலைத்தளங்களின் பங்கு முக்கியமானது. ஈழத்தில் வாழ்ந்த காலங்களில் சாதாரணர்களுக்கும் எழுத்தாளர்களுக்குமான இடைவெளி பெரிதாக இருந்தது. இதையொரு குற்றமாகச் சொல்லவில்லை. அன்றைய நிலைமை அப்படித்தான் இருந்தது. இணையப் பயன்பாடு அந்த இடைவெளியைக் குறுக்கியது. அச்சுப் பிரதிகள் வாசகர்களைச் சென்றடைவது தூரங்களால் தாமதமாகும் நிலையில், அந்த இடத்தை வலைத்தளங்கள் உடனடியாக நிரப்புகின்றன.
புகலிடத் தேசங்களிலும் தமிழகத்திலும் ஈழத்திலும் வாழும் எழுத்தாளர்கள், வாசகர்கள் ஆகியோருக்கு இடையிலான முக்கோணத் தொடர்பாடலை வலைத் தளங்கள் சாத்தியப்படுத்தியிருக்கின்றன. வெளிவரும் படைப்புகள் குறித்த அறிமுகங்களையும் கருத்துப் பரிமாற்றங்களையும் அவை இலகுவாக்கின. புலம்பெயர் வாழ்வின் ஓட்டத்தில் படைப்புகளைத் தேடிப் பிடித்துப் படிக்கப் பொழுதோ பொறுமையோ இல்லாத நிலையில் தமிழ்மணம், தமிழ்வெளி, தேன்கூடு போன்ற வலைத்திரட்டிகள் பதிவுகளைத் திரட்டித் தத்தம் தளங்களில் வழங்கி உதவின. தனித்தனியாக இருந்த எழுத்தாளர்களும் பதிவர்களும் சமூக வலையிழையால் பிணைக்கப்பட்டவராயினர்.
தாய்நிலம்மீதான ஏக்கம் தீராதது. ஆனாலும் புலம்பெயர் வாழ்வு வழங்கியிருக்கும் சாதகங்களையும் ஒரேயடியாக மறுப்பதற்கில்லை. அது இணையம் வழியாக அறிவின் சாளரங்களைத் திறந்துவிட்டது. மறுவளமாக, புலம்பெயர் வாழ்வின் நடைமுறைச் சிக்கல்கள் வாசிப்புப் பழக்கத்தைக் கணிசமான அளவு குறைத்துவிட்டிருப்பதை அவதானிக்க முடிகிறது. வாழும் நிலங்களின் பண்பாட்டுத் தாக்கங்கள் இளைஞர்களிடத்தில் அதிகமாகச் செல்வாக்கு செலுத்துகின்றன. ‘தாய்நிலம்’ என்ற சொல், புலம் பெயர்ந்து சென்ற முதல் தலைமுறையினரிடத்தில் ஏற்படுத்தும் அதிர்வலையை இன்றைய இளைஞர்களிடத்தில் ஏற்படுத்துகிறதா என்றால், ‘குறைவு’ என்பதே பதிலாக இருக்கும். தமிழ் அவர்களது வீட்டுமொழியாக மட்டுமே (சில வீடுகளில் அவ்விதமும் இல்லை) புழங்கும் காரணத்தால், வாசிப்புப் பழக்கம் உடையவர்கள்கூட ஆங்கிலத்தையே தேர்ந்தெடுக்கிறார்கள். ஆகவே இன்றைய தலைமுறையினரிடம் தமிழ் வலைத்தளங்களின் வாசிப்புத் தாக்கம் குறைவாகவே இருக்கிறது. முகநூல் போன்ற சமூக வலைத்தளங்களில் இடம் பெறும் மேம்போக்கான உரையாடல்களில் அவர்கள் பெரிதும் கவனஞ் செலுத்துகிறார்கள்.
ஆனால் விரல் மடித்து எடுத்து எண்ணிவிடத்தக்க இளைஞர்கள் சில அரசியல், சமூகம் மற்றும் அறிவார்த்த தளங்களில் ஆழ்ந்த வாசிப்பு உடையவர்களாக, சமூக அக்கறையுடையவர்களாக, பொதுவெளியில் தெளிவான கருத்துகளை முன்வைப்பவர்களாக இருப்பதை அவதானிக்க முடிகிறது. அவர்களுடைய இணையதளங்களில், முகநூல் பக்கங்களில் உலக இலக்கியங்களைப் பற்றியும் மானுடச் சமுதாயத்தை மாற்றியமைத்த கோட்பாடுகளைப் பற்றியும் ஆரோக்கியமான உரையாடல்கள் நிகழ்கின்றன. குறைந்தளவிலேயானாலும், எண்பதுகளுக்கு முன்னர் ஈழத்தில் நிலவிய சூழலின் மெல்லிய கீற்றொளி படர்வதான ஒரு தோற்றம் திருப்தி அளிக்கிறது. சர்வவல்லமை பொருந்திய பேரினவாத அரசுக்குச் சார்பான கருத்துகளையன்றி வேறெதையும் உதிர்க்க அனுமதிக்கப்படாத ‘ஊடகச் சுதந்திரம்’ நிலவும் மண்ணில், ஈழத்தவர் குரலற்றவர்களாக ஒடுக்கப்பட்டிருக்கிறார்கள். அங்கு அதிகாரத்திற்கு எதிரான குரல்கள் யாவும் தொண்டைக்குள் அவிந்துபோகவே விதிக்கப்பட்டிருக்கிறது. அத்தகையோருக்காக, எதிர்காலத்தில், உலக அரங்குகளில் பேசவல்ல குரல்களாக மேற்குறித்தவர்கள் நம்பிக்கை தருகிறார்கள்.
உலகெங்கிலும் பல்லாயிரம் மைல் இடைவெளிகளில் சிதறிக்கிடக்கும் இலட்சக்கணக்கான மனிதர்களைக் கண்டங்களையும் நதிகளையும் மலைகளையும் எல்லைகளையும் கடந்து ஒரு தேசமாக இணைத்துப் புண்ணியங்கட்டிக்கொண்டிருக்கிறது கணினித்திரை.
பின்குறிப்பு: எழுதும் வசதி கருதி, ‘வலைத்தளம்’ என்னும் சொல் பிரயோகிக்கப்பட்டிருக்கிறது. அது வலைப்பூக்களையும் உள்ளடக்கியே (வித்தியாசங்கள் உண்டு எனும் புரிதலுடன்) சொல்லப்பட்டிருக்கிறது. http://www.kalachuvadu.com/issue-145/page61.asp
Share this article :

கருத்துரையிடுக

 
Company Info | Contact Us | Privacy policy | Term of use | Widget | Advertise with Us | Site map
Copyright © 2011. welvom . All Rights Reserved.
Design Template by panjz-online | Support by creating website | Powered by Blogger