News Update :
Home » » வடக்கும், கிழக்கும் - பிரிவும், இணைவும்

வடக்கும், கிழக்கும் - பிரிவும், இணைவும்

Penulis : ۞உழவன்۞ on ஞாயிறு, 16 ஜூன், 2013 | AM 5:12

பிரிவும் இணைவும் உலகில் பொதுவானதொரு நடப்பு இயல்பு. இது இரண்டு மனிதர்களுக்கு இடையில், இரண்டு குடும்பங்களுக்கு இடையில் தொடங்கி நாடுகள் வரைக்கும் பொருந்தக் கூடியதொன்று தான்.

உலக வரலாற்றை எடுத்துக் கொண்டால் ஏராளமான இணைவுகளும் பிரிவுகளும் நடந்தேறியுள்ளன.
போர்களும், படைபல ஆதிக்கமும், சமாதான உடன்பாடுகளும் இத்தகைய பிரிவுகளுக்கும், இணைவுகளுக்கும் காரணமாகியுள்ளன.
வல்லமை பெற்றவர்கள் பல நாடுகளைப் பிடித்து தம்வசப்படுத்திக் கொண்டனர். அவற்றை தமது நாட்டுடன் இணைத்தனர்.
அதுபோலவே அரசுகளுடன் முரண்பட்டுக் கொண்டவர்கள் தனியாகப் பிரிந்தும் போயினர்.
உலக வரலாற்று நியதிப்படி நாடுகளின் பிராந்தியங்களின் பிரிவோ, இணைவோ நிரந்தரமானது அல்ல.
சிற்றரசுகள் பலவற்றை ஒன்றிணைத்து பல நாடுகளை உருவாக்கியவர்கள் பிரித்தானியர்கள் தான்.
அவர்கள் தமது ஆதிக்கத்தின் கீழ் இருந்த நாடுகளை சுலபமாக நிர்வகிப்பதற்காக ஒரே அரசின் கீழ் கொண்டு வந்தனர்.
மேற்கே ஈரானுக்கும், கிழக்கே பர்மாவுக்கும் இடைப்பட்ட வடக்கே சீனாவுக்கும் தெற்கே பாக்கு நீரிணைக்கும் இடைப்பட்ட பெரும் பிரதேசத்தில் இருந்த ஏராளமான சிறிய அரசுகளை ஒன்றிணைத்து இந்தியப் பெருநாட்டை உருவாக்கியவர்கள் பிரித்தானியர்கள் தான்.
இலங்கையிலும் கோட்டை, கண்டி, யாழ்ப்பாணம் என்றிருந்த அரசுகளை ஒரே நாடாக உருவாக்கியவர்களும் அவர்களே.
இதுபோலத் தான் உலகில் ஏராளமான நாடுகளை அவர்கள் ஒன்றிணைத்து வலிமை கொள்ள வைத்தனர்.
அதேவேளை, இரண்டாவது உலகப் போரின் பின்னர் பிரித்தானிய முடியாட்சியின் ஆதிக்கம் குறையத் தொடங்கிய போது புதிய நாடுகள் பிறக்கும் யுகம் ஒன்று உருவாகியது.
இந்தியா என்ற நாடு பாகிஸ் தான் பிரிவினையுடன் இரண்டாகியது.
பின்னர் பங்களா தேஷ் பிரிவினையுடன் பாகிஸ்தான் இரண்டாகப் பிரிந்து கொண்டன.
வேறும் பல நாடுகள் இவ்வாறு பிரிந்து 15 பிராந்தியங்களும் நாடுகளும் ஒன்றிணைந்து சோவியத் யூனியன் என்ற மிகப் பெரிய வல்லரசாக உருவானது.
அதேவழியில் கிழக்கு ஐரோப்பாவில் பல நாடுகள் ஒன்றிணைந்தன.
அவை எல்லாம் அமைதி வழியில் ஒன்றிணைந்ததாகவும் கூற முடியாது.
பலவந்தமாக ஒன்றிணைக்கப்பட்டதாகவும் கூற முடியாது.
1990களின் தொடக்கத்தில் சோவியத் ஒன்றியத்தில் ஏற்பட்ட மாற்றம் கிட்டத்தட்ட எல்லா சோஷலிஸ கட்டமைப்புகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தியது.
சோவியத் ஒன்றியத்தில் இருந்து பல்வேறு நாடுகள் பிரிந்து தனிநாடுகளாகின.
உக்ரேன், கஸகஸ்தான், தஜிகிஸ்தான் போன்றனவெல்லாம் தனிநாடுகளானது இவ்வாறு தான்.
அதுபோலவே யூகோஸ்லாவியா, செக்கோஸ்லாவாக்கியா போன்ற நாடுகளும் உடைந்து புதிய நாடுகள் உருவாகின.
எரித்ரியா, தென்சூடான் பிரிவினைகள் வரைக்கும் இந்த புதிய நாடுகளின் உருவாக்கம் தொடர்ந்தது.
அதேவேளை இன்னொரு பக்கத்தில் ஐரோப்பிய நாடுகள் ஒன்றிணைந்து தனி நாடாளுமன்றம் பொது நாணயத்தை உருவாக்குகின்ற அளவுக்கும் சென்றன.
பிரிந்து போன சோவியத் குடியரசுகள் மீண்டும் தமது தேவை கருதி ஒருங்கிணைந்து செயற்படுவதற்காக சுதந்திர நாடுகளின் கொமன்வெல்த் என்ற ஒரு அமைப்பை உருவாக்கின.
இந்த வரலாறு உலக நாடுகளின் பிரிவும் இணைவும் தவிர்க்க முடியாத ஒன்று என்ற உண்மையை எடுத்துக் காட்டுகிறது.
ஆனால் இலங்கையைப் பொறுத்தவரையில், இணைவுக்கும் தயாராக இல்லாத பிரிவுக்கும் தயாராக இல்லாத ஒரு விசித்திரமான நாடாகவே உள்ளது.
பிரித்தானியர்களால் மூன்று அரசுகளாக இருந்த நாட்டை ஒன்றிணைத்தே இலங்கை என்ற அரசு உருவாக்கப்பட்டது.
இந்த வரலாற்று உண்மையை இப்போதைய பெரும்பாலான சிங்களத் தலைமைகள் தமது வசதிக்கேற்ப மறந்து போயுள்ளன.
இப்போது இலங்கைத் தீவில் இருந்து ஒரு பகுதியை பிரிந்து போக விடவும் ஆட்சியாளர்கள் தயாராக இல்லை.
அதேவேளை, இலங்கைத்தீவின் இரு பிரதேசங்கள் ஒன்றிணைந்து கொள்வதை அனுமதிக்கவும் அவர்கள் தயாராக இல்லை.
தமிழர்கள் தனிநாடு கோரிப் போராடிய போது அதனை ஒடுக்குவதற்கு மேற்கொண்ட கொடூரமான யுத்தம் இலங்கைத்தீவைப் பிரிக்க விடமாட்டோம் என்ற சிங்களத் தலைமைகளின் திடசங்கற்பத்தை எடுத்துக் காட்டியது.
இப்போது இரண்டு மாகாணங்களான வடக்கும் கிழக்கும் இணைவதைத் தடுப்பதற்காக புதிய சட்டத் திருத்தங்களைக் கொண்டு வரும் முயற்சியில் அரசாங்கம் இறங்கியுள்ளது.
வடக்கு, கிழக்கு மாகாணங்கள் இணைந்து கொள்வதை தமது அச்சுறுத்தலாகப் பார்க்கிறது அரசாங்கம்.
இநதளவுக்கும் இரு மாகாணங்களின் இணைவுக்கு அனுமதி கொடுக்கின்ற அதிகாரம் ஜனாதிபதியின் கையில் தான் உள்ளது.
ஆனாலும் வடக்கும் கிழக்கும் ஒருபோதும் இணைய முடியாமல் தடுக்கின்ற முயற்சியில் அரசாங்கம் இறங்கியுள்ளது.
ஒன்பது மாகாணங்களும் ஒன்றிணைந்து விட்டால் புதிய நாடு உருவாகி விடும் என்று அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல தெரிவித்துள்ளார்.
ஒரே நாட்டிற்குள் எதற்காக மாகாணசபைகள் ஒன்றிணைய வேண்டும் என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
ஆனால் பிரித்தானியர்கள் இவ்வாறு எதற்காக மூன்று அரசுகளை ஒன்றிணைக்க வேண்டும் என்று சிந்தித்திருந்தால் இன்றைக்கும் இலங்கை என்ற ஒரே நாடு உருவாகியிருக்க முடியாது.
நாடுகள், பிராந்தியங்களின் பிரிவுகளையும் இணைவுகளையும் பல்வேறு பொதுப் பண்புகள் தான் தீர்மானிக்கின்றன.
மொழி, இனம், வளம், நிர்வாக வசதி என்பனவற்றுக்கும் அப்பால் ஆட்சிமுறையின் தன்மையும் அதில் ஒன்று.
இன, மத, மொழி ரீதியாக பாரபட்சமற்றதும், நியாயமானதும், சமத்துவமானதுமான ஆட்சிமுறை ஒன்று நிறுவப்பட்டால் பிரிவினைகள் தவிர்க்கப்படும்.
அதேவேளை இரு பிராந்தியங்கள் பொதுவான ஒரு செயற்திட்டங்களின் கீழ் செயற்பட இணைங்கும் போது அந்த இணைவு தவிர்க்கப்பட முடியாததே.
வடக்கும், கிழக்கும் பல்வேறு பொதுத் தன்மைகளுடன் இயங்கும் போது அவை பிரிந்திருப்பதில் நியாயம் இல்லை.
ஆனால் இந்த ஒன்றிணைவை அரசாங்கமும் சிங்களத் தேசியவாத சக்திகளும் பிரிவினையை ஏற்படுத்தும் என்று அர்த்தம் கொள்கின்றன. அச்சம் கொள்கின்றன.
இந்த தவறான புரிதலின்  காரணமாகவே வடக்கையும் கிழக்கையும் அச்சுறுத்தலாகப் பார்க்கின்ற நிலை காணப்படுகிறது.
இந்த நிலை மாறப் போவதும் இல்லை. அவ்வாறு மாறுவதற்கு சிங்களத் தேசியவாதத்தை தட்டியெழுப்பி அதில் அரசியல் நலன்பெறும் சக்திகள் இடமளிக்கப் போவதும் இல்லை.
இதனால் வடக்கு கிழக்கு இணைப்பு என்பது வரலாற்று ரீதியான பிரச்சினையாகவே நீளப்போகிறது.
ஹரிகரன்
Share this article :

கருத்துரையிடுக

 
Company Info | Contact Us | Privacy policy | Term of use | Widget | Advertise with Us | Site map
Copyright © 2011. welvom . All Rights Reserved.
Design Template by panjz-online | Support by creating website | Powered by Blogger