News Update :
Home » » ரோகித மீது தயான் ஜயதிலக்க மறைமுகத் தாக்குதல்

ரோகித மீது தயான் ஜயதிலக்க மறைமுகத் தாக்குதல்

Penulis : Antony on புதன், 23 செப்டம்பர், 2009 | AM 2:05

தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிரான போரை முன்நின்று நடத்தியவர்களைப் போல சிறிலங்காவின் வெளிநாட்டு உறவுகளைக் கையாள்பவர்களும் தகுதியானவர்களாக இருக்கவேண்டும் என ஐக்கிய நாடுகள் சபைக்கான சிறிலங்காவின் முன்னாள் நிரந்தர உறுப்பினர் தயான் ஜயதிலக்க தெரிவித்தார்.
தற்போதைய வெளிவிவகார அமைச்சர் ரோகித போகல்லாகமவை அந்தப் பதவியிலிருந்து மாற்ற வேண்டும் என்பதையே இவ்வாறு மறைமுகமான வார்த்தைகளில் தயான் ஜயதிலக்க குறிப்பிட்டிருக்கின்றார் என இராஜதந்திர வட்டாரங்கள் கருதுகின்றன. கொழும்பிலிருந்து வெளிவரும் 'டெய்லி மிரர்' நாளேட்டுக்கு அளித்துள்ள பேட்டியொன்றில், "எமது படைத்துறை வெற்றியைப் பலப்படுத்துவதற்குத் தேவையாகவுள்ள வெளிநாட்டுப் போரை நடத்தக்கூடிய தகுதியைக் கொண்டுள்ளவர்கள் எம்மிடம் உள்ளார்களா என்பதை நாமே பார்த்துக்கொள்ள வேண்டும்" எனவும் அவர் தெரிவித்தார். போரில் வெற்றியைப் பெற்றுக்கொள்வதற்கு சிறந்த ஆளுமையைக் கொண்டுள்ளவர்களை பயன்படுத்தியதைப்போல அதேபோன்ற சிறப்பான தகுதியைக் கொண்டுள்ளவர்களை அனைத்துலக உறவுகள் தொடர்பான சிறிலங்காவின் போருக்கும் பயன்படுத்த வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டார். "இது ஒரு தனிப்பட்ட விடயமல்ல. இது கொள்கை ரீதியானது. இந்த போரை நாம் நடத்தியபோது எம்மிடம் இருந்தவர்களில் சிறப்பானவர்களை நாம் கொண்டிருந்தோம். முன்னைய அரச தலைவர்கள் எவருமே செய்யாத நிலையில் தற்போதைய அரச தலைவர் முப்படைகளின் தளபதி என்ற முறையில் செயல் ஈடுபாடுடைய பாத்திரம் ஒன்றை வகித்தார். பாதுகாப்புச் செயலாளரும் அரச தலைவருக்கும் முன்னாள் தரைப்படைத் தளபதி சரத் பொன்சேகாவுக்கும் இடையில் இணைப்பை ஏற்படுத்துபவராக சிறப்பான பணியைப் புரிந்துள்ளார்" எனவும் தயான் ஜயதிலக்க தெரிவித்தார். "ஆற்றல் மிக்கவர்களைக் கொண்டுள்ள தொழில்சார் திறமை மிக்க படையினர் ஒன்று எம்மிடம் உள்ளது. மிகவும் பலம்வாய்ந்த எதிரியை வெற்றிபெற்றதன் மூலமாக அதுதான் இன்று உலகின் சிறப்பான சண்டையிடும் படைப்பிரிவு என என்னால் சொல்ல முடியும். இந்தப் பணியைச் செய்வதற்காக நாம் மிகவும் சிறப்பானவர்களைத் தெரிவு செய்திருந்தோம்" எனவும் தயான் ஜயதிலக்க சுட்டிக்காட்டினார். தற்போதைய அமைச்சரவையில் ஆற்றல் மிக்க அமைச்சர்கள் பலர் இருப்பதை தன்னால் அறிந்துகொள்ளக் கூடியதாக இருப்பதாகவும் அவர் தெரிவித்தார். "இந்த இலக்கை நோக்கிய செயற்பாடுகளை முன்னெடுப்பதற்குப் பொருத்தமானவர்கள் அமைச்சரவையில் இருக்கின்றார்கள். சரத் அமுனுகம மற்றும் பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ் போன்றவர்கள் சிறப்பான வெளிவிவகார அமைச்சர்களாகச் செயற்படக் கூடியவர்கள்" எனத் தெரிவித்த தயான் ஜயதிலக்க, இவர்களில் ஒருவரை வெளிவிவகார அமைச்சராக நியமிப்பதன் மூலம் சிறிலங்காவின் வெளிவிவகாரப் பிரச்சினைக்கு நாளைக்கே தீர்வைக்காண முடியும்" எனவும் தெரிவித்தார். எதிர்காலத்தில் அரசியலில் பிரவேசிக்கும் உத்தேசமோ அல்லது வெளிவிவகார அமைச்சுப் பொறுப்பை ஏற்றுக்கொள்ளும் எண்ணமோ தனக்கு இல்லை எனத் தெரிவித்த தயான், வெளிவிவகார அமைச்சர் பதவியை சிறப்பாகச் செய்யக்கூடிய பலர் அமைச்சரவையில் தற்போதிருப்பதாகவும் தெரிவித்தார்.
Share this article :

கருத்துரையிடுக

 
Company Info | Contact Us | Privacy policy | Term of use | Widget | Advertise with Us | Site map
Copyright © 2011. welvom . All Rights Reserved.
Design Template by panjz-online | Support by creating website | Powered by Blogger