News Update :
Home » » போரை நேரில் கண்ட சிவரூபன்

போரை நேரில் கண்ட சிவரூபன்

Penulis : Antony on புதன், 23 செப்டம்பர், 2009 | PM 1:44


வேறொரு இராணுவக் கூட்டத்தினர் பொதியுணவு கொண்டு வந்தார்கள். இருந்தது மூன்று லட்சம் மக்கள். அவர்கள் கொண்டு வந்ததோ சுமார் 3000 உணவுப் பொதிகள். எப்படி பங்கீடு செய்வதென்று தெரியாமல் நாய்களுக்கு எலும்புத் துண்டுகளை வீசுவது போல் கம்பிவேலிக்கு வெளியே நின்று கொண்டு மக்கள் கூட்டத்தினர் மீது கேவலச் சிரிப்புடன் வீசி எறிந்தார்கள். ஏதோ எறிபந்து விளையாடுவதுபோல் மேலும் மேலும் எள்ளி நகையாடிச் சிரித்துக்கொண்டே எறிந்தார்கள். தமிழரின் இயலாமை அவமானக் களத்தில் அவர்களின் அரை மணி நேர விளையாட்டு முடிந்தபோது, சில வயது போனவர்களும் எட்டுப் பத்து சிறுவர்களும் நெரிசலில் சிக்கி மூச்சடங்கிப் பிணங்களாய் கிடந்தார்கள். கைக்குழந்தையுடன் உணவுப் பொட்டலம் கிடைக்காதா எனச்சென்ற தாய் மூச்சுத் திணறி இறந்து போன குழந்தையுடன் திரும்பியதும், “பசிக்குது, ஒரு பார்சல் குடுங்கோ’ என்று கூவிக் கேட்டுக்கொண்டே நெரிசலில் குரலடங்கிப் போன சிறுவர்களும், தண்ணீராவது தாருங்கோ எனக்கேட்டு மிதியுண்டு மடிந்த முதியவரும் அன்றைய நாள் எமது வரலாறு சந்தித்த பேரவலத்தின் பதிவு செய்யப்படாத சாட்சிகள். வாகனத்தில் ஏற்றுவதற்காக கம்பி வேலிக்குள்ளிருந்து வரிசை பிடிக்கச் சொன்னார்கள். அதற்குள்ளாகவே காட்டிக் கொடுக்கும் சிலரை சிங்களம் விலைக்கு வாங்கியிருந்தது. அந்தக் கேவலப் பிறவிகள் தங்களுக்கு தனிப்பட்ட முறையில் பிடிக்காத, பக்கத்து வீட்டுக்காரர்களையெல்லாம் கூட “புலிகள்’ என்று கை நீட்டிக் காட்ட இராணுவத்தினர் தனியாக அவர்களைப் பிடித்துச் சென்றனர். தமிழன் வீழ்ந்ததும் வீழ்வதும் காட்டிக் கொடுக்கும் எட்டப்பர்களாலென்பது மீண்டும் ஒருமுறை வேதனையோடு அங்கே அரங்கேறிக் கொண்டிருந்தது. எம் தேசியத் தலைவர் அடிக்கடி இரண்டு விஷயங்களைச் சொல்வார். ஒன்று, “”நேர்மையான வர்கள்போல நடிப்பவர்களைவிட நேர்மையானவர் களாக இருப்பவர்களைத்தான் எனக்குப் பிடிக்கும்” என்பது. இன்னொன்று “”எதிரிகளைவிட துரோகி களே ஆபத்தானவர்கள்” என்றும் அவ்வப்போது நினைவுபடுத்துவார். நடைமுறை ஒழுங்குகளில் தமிழ் சமூகம் மீது தலைவர் காட்டிய இறுக்கத்திற்கு காரணமும் இந்த இனத்தின் மோசமான துரோகக் குணங்களை அவர் உள்ளார அறிந்திருந்த காரணத்தினால்தான். அந்த இடத்தில், அந்த கணத்தில் இப்போது சிங்கள ஆமிக்காரனைவிட அடை யாளம் காட்டிக் கொடுத்துக் கொண்டிருந்த எம் இனத்துக் கூலிகள்தான் அதிக அச்சத்தை தந்தார்கள். உடல் சோதனைக்கு ஒவ்வொருவரும் உள்ளாக்கப்பட்டோம். காட்டிக்கொடுக்கும் துரோகக் கூலிகள் நின்ற இடத்தைக் கடந்து உடல் சோதனைக்குப் போனேன். கட்டிய கோவணத்தையும் அவிழ்த்துப்போட்டு பரிசோதித்தார்கள். எனக்குள் கொலைவெறி ஆவேசம். அடக்கிக்கொண்டேன். என்றேனும் எம் தேசியத்தலைவன் மீண்டும் அழைப்பு விடுத்தால், அல்லது தகுதியானதோர் விடுதலை தலைமை எமக்குத் தெரிகின்ற நாளில் அவன் சொல்லும் திசையில் இலக்கு நோக்கி நகர இந்த உயிர் இப்போதைக்கு இருக்கவேண்டுமென்ற வைராக்கியத்தில், வந்த ஆவேசத்தையெல்லாம் அடக்கிக்கொண்டேன். இங்கே எழுத முடியாத ஒரு கெட்ட வார்த் தையை மட்டும் பம்பலாய் வாயில் முணுமுணுத் தேன். சோதனையெல்லாம் முடிந்து ஒருவழியாய் பேருந்தில் ஏறியபோது மே௧8 முற்பகல் ஆகியிருந்தது. முல்லைத்தீவிலிருந்து வவுனியா செட்டிக்குளம் வதை முகாம் நோக்கி பேருந்து புறப்பட்டது. எங்கு கொண்டுபோகிறார்களோ, என்னவெல்லாம் நடக்கப் போகிறதோவென்ற பதற்றம். பேருந்தின் பின்கதவு அடைக்கப்பட்டு முன் கதவில் இரண்டு ராணுவத் தினர் சுடும் நிலை யில் கொடூர முக பாவத்தோடு எம்மை அவதானித்துக்கொண்டிருந்தனர். நூற்றுக்கணக்கான பேருந்துகள் ஓமந்தை சோதனைச் சாவடிக்குமுன் நின்று நகர்ந்தன. 2006 வரை இந்த சோதனைச் சாவடி புலிகளின் கட்டுப்பாட்டில் இருந்தது. புலிகள் தமது குடிவரவு (ஈம்மிக்ரடிஒன்) மற்றும் சுங்கம் (Cஉச்டொம்ச்)பிரிவினரை உருவாக்கி முதலில் அமர்த்திய இடம் இது. இன்றோ எல்லாம் சூன்யமாகிப்போன உணர்வு உயிரைப் பிழிந்தது. இன அழித்தலின் அடுத்த கட்டம் ஓமந்தையில் ஆரம்பித்தது. “”புலியாக இருந்தவர்கள் அனைவரும் தனியாகப் பதியவும்”, “”ஒருநாள் பயிற்சி எடுத் திருந்தாலும் தனியாகப் பதியவேண் டும்”, “”எல்லைப்படை பயிற்சி எடுத்தவர் களும் பதியவேண்டும்”, “”எங்களுக்கு எல்லாம் தெரியும், பொய் சொல்லி பதிவு செய்தால் தப்பிக்க முடியாது -மரணம்தான்” என்றெல்லாம் அறிவித்துக்கொண்டிருந்தார்கள். பதிவு செய்துவிட்டவர்களெல்லாம் ஒருபுறமாய் கூடி கதைத்துக்கொண்டிருந்தபோதுதான் அங்கிருந்த தொலைக்காட்சிப் பெட்டியில் எம் தலைவன் வீரமரணம் செய்துவிட்டான் என்ற செய்தியைக் காட்டினார்கள். என் சுவாசம் நின்றது. இதய நாடிகள் ஒடுங்கின. என்னையு மறியாது கண்களில் நீர். பின்னோக்கி நினைவுகள் ஓடின. 1989-ம் ஆண்டு என்று நினைக்கிறேன். இந்தியப்படைகள் எம் தலைவனை சுற்றி வளைத்து “சதுரங்கம் 1,2,3 (ஓபெரடிஒன் Cகெcக்மடெ) என பெயரிட்டு நின்றபோது மணலாற்றுக் காட்டில் நிலை தடுமாறாது, அருகில் போராளிகள் கொள்கலன்களில் உயர்ரக பெட்ரோல் சுமந்துகொண்டே சண்டையிட்ட அந்த நாட்கள் நினைவுக்கு வந்தன. “உயிரற்ற என் உடலோ, சாம்பலோகூட அந்நியப் படைகளிடம் கிடைக்கக்கூடாது’ என்று உடன்நின்ற போராளிகளுக்கு உத்தரவிட்டுத்தான் சண்டை புரிந்துகொண்டிருந்தார் எம் தலைவன். போர்க்களத்தில் தன்னையே கொடையாக்கும் அக்கினியாய் நின்றுகொண்டுதான் அன்று எம்மை வழிநடத்தினார் அவர். உன்னிப்பாக தொலைக்காட்சியில் காட்டப்பட்ட உடலையும் தலையையும் பார்த்தேன். நிச்சயமாக முகமும் தலையும் எம் தலைவனுடையதல்ல என்பது தெரிந்தது. முற்றுகை வளையத்திற்குள் சிக்கியிருந்தாலும்கூட எம் தலைவன் எதிரிக்கு நெருப்பாய், புயல்காற்றாய் தான் இருப்பார். சர்வதேசமே, ஐ.நா.சபையே, தமிழுலகே… எப்போது வேண்டுமானாலும் என்னைக் கூப்பிடுங்கள். நான் இன்னும் உயிரோடுதான் இருக்கிறேன். இன அழித்தலுக்கு சாட்சி சொல்ல வருகிறேன். (சிவரூபன் வருவான்.)
Share this article :

கருத்துரையிடுக

 
Company Info | Contact Us | Privacy policy | Term of use | Widget | Advertise with Us | Site map
Copyright © 2011. welvom . All Rights Reserved.
Design Template by panjz-online | Support by creating website | Powered by Blogger