News Update :
Home » » நீதியமைச்சரின் கருத்து ஏற்றுக்கொள்ள முடியாதது: மனோ கணேசன்

நீதியமைச்சரின் கருத்து ஏற்றுக்கொள்ள முடியாதது: மனோ கணேசன்

Penulis : Antony on புதன், 23 செப்டம்பர், 2009 | AM 2:40

தமிழ் அரசியல் கைதிகளின் உண்ணாவிரதம் அர்த்தமற்றது என்றும், இலங்கையில் அரசியல் கைதிகள் என்று எவரும் கிடையாது என்றும் பிரதி நீதியமைச்சர் புத்திரசிகாமணி தெரிவித்துள்ள கருத்து ஏற்றுக்கொள்ள முடியாதது என்று ஜனநாயக மக்கள் முன்னணி தலைவர் மனோ கணேசன் எம்பி தெரிவித்துள்ளார்.
பிரதி நீதி அமைச்சரின் குறித்த கூற்றுக்குப் பதிலளிக்கையிலேயே மேற்கண்டவாறு தெரிவித்துள்ள பாராளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன் மேலும் தெரிவித்துள்ளதாவது:
சிறைச்சாலைகளில் இன்று உண்ணாவிரதம் இருக்கின்ற தமிழ் தடுப்புக்காவல் கைதிகள் ஆடுகளையும், கோழிகளையும் திருடிய குற்றங்களுக்காகவோ அல்லது போதைவஸ்து குற்றங்களுக்காகவோ கைதானவர்கள் இல்லை என்பதையும், இந்நாட்டின் பேரினவாதம் ஆரம்பித்து வைத்த யுத்தத்துடன் தொடர்புடைய அரசியல் வன்முறையாளர்கள் அல்லது வன்முறைகளுக்கு உதவியவர்கள் என்ற அடிப்படைகளிலேயே கைதாகி சிறைவாசம் அனுபவிக்கின்றவர்கள் என்பதையும் பிரதி நீதியமைச்சர் புத்திரசிகாமணி புரிந்துக்கொள்ளவேண்டும்.
1971, 1989 ஆகிய ஆண்டுகளில் மிக மோசமான வன்முறைகளில் ஈடுபட்டு தென்னிலங்கையை எரித்து பாரிய அழிவுகளை ஏற்படுத்திய ஜேவிபி யினர் இன்று பாராளுமன்றத்தில் அங்கம் வகிக்கின்றார்கள்.
தமிழ் தேசிய போராட்டத்தில் ஆயுதம் ஏந்தி வன்முறைகளில் ஈடுபட்ட திருவாளர்கள் டக்ளஸ் தேவானந்தாவும், விநாயக மூர்த்தி முரளிதரனும் இன்று மத்திய அரசாங்கத்திலே கௌரவ அமைச்சர்களாக இருக்கின்றார்கள்.
அதேபோல் கிழக்கு மாகாண முதலமைச்சராக முன்னாள் போராளி பிள்ளையான் சந்திரகாந்தன் இருக்கின்றார். இவை மகிழ்ச்சிக்குரிய மாற்றங்களாகும்.
இதேபோல் மிகச் சமீபத்தில் விடுதலை புலிகளின் பிரபலஸ்தர்களான தயா மாஸ்டரும், ஜோர்ஜ் மாஸ்டரும் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்கள். இவையும் மகிழ்ச்சிக்குரிய நடவடிக்கைகளாகும்.
ஆனால் புலிகள் இயக்கத்தின் கீழ்மட்ட உறுப்பினர்களாக இருந்தவர்களும், உறுப்பினர்களுக்கு உடுதுணி மற்றும் உணவு கொடுத்து உதவியவர்களும் இன்று வரையிலும் சிறைவாசம் அனுபவிக்கின்றார்கள். ஏன் இந்த பாரபட்சம் என்ற கேள்விகள் இன்று தமிழ் மக்கள் மனங்களிலும், குறிப்பாக இந்த தமிழ் தடுப்புக்காவல் கைதிகளின் குடும்பத்தவர்கள் மனங்களிலும் கொந்தளித்துக்கொண்டிருக்கின்றன.
அவர்கள் சரணடைந்தார்கள், இவர்கள் கைது செய்யப்பட்டார்கள் என்ற வாதங்களை அரசாங்கத்தின் நீதித்துறை அமைச்சர்கள் மிலிந்த மொரகொடவும், புத்திரசிகாமணியும் எடுத்துவைப்பது நியாயமாகாது.
ஜேவிபியினருக்கும், புலிகளின் மேல்மட்டத்தினருக்கும் காட்டப்பட்டுள்ள கவனிப்பு அனைத்து அரசியல் வன்முறை கைதிகளுக்கும் காட்டப்படவேண்டும் என்ற எமது கருத்து இன்று நாடுமுழுக்க வாழ்கின்ற தமிழ் மக்களின் ஏகோபித்த கருத்தாகும்.
கொழும்பு, யாழ்ப்பாணம், அநுராதபுரம், மட்டக்களப்பு சிறைச்சாலைகளிலும், பூசா தடுப்பு முகாமிலும் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் கைதிகள் வடக்கையும், கிழக்கையும், மலையகத்தையும், மேற்கையும் சார்ந்த தமிழர்கள் என்பதை அரசாங்கத்திலுள்ள தமிழ் அமைச்சர்கள் புரிந்துக்கொண்டு அவர்களது உடனடி விடுதலைக்கு வழி ஏற்படுத்தவேண்டும்.
உண்ணாவிரதம் அர்த்தமற்றது எனவும், இவர்களது விடுதலையை ஒரே இரவில் சாத்தியமாக்க முடியாது என்றும் பிரதி நீதியமைச்சர் புத்திரசிகாமணி கூறியிருப்பது கண்டனத்திற்குரியதாகும்.
என்னிடம் தெரிவிக்கப்பட்டுள்ள எழுத்து மூலமான தகவல்களின்படி 18, 16, 14, 13, 11, 09 ஆகிய வருடங்களாக நீண்ட சிறைவாசம் அனுபவித்துவரும் தமிழ் கைதிகள் கணிசமாக இருக்கின்றார்கள்.
18 வருடங்களிலே எத்தனை இரவுகள் இருக்கின்றன என்பதை பிரதி நீதியமைச்சர் புத்திரசிகாமணி எண்ணிப்பார்க்கவேண்டும். சிறைக்கைதிகளை தவிர வெறுமனே சந்தேகத்தின் பெயரிலே கைது செய்யப்பட்டு பூசா முகாமிலே தடுத்து வைக்கப்பட்டுள்ள பெருந்தொகை தமிழர்களும் இருக்கின்றார்கள்.
இவர்களுக்குள்ளே ஆண்களும், பெண்களும் இருக்கின்றார்கள். வயோதிபர்களும், நோயாளிகளும் இருக்கின்றார்கள். குழந்தைகளை பிரசவித்த பெண்களும் இருக்கின்றார்கள்.
திருமணமான உடனேயே சிறைப்பிடிக்கப்பட்டு நீண்டகாலம் தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்கள் இருக்கின்றார்கள். சமூகத்திலே உயர்ந்த அந்தஸ்தைகொண்ட படித்தவர்கள் இருக்கின்றார்கள். இந்து, கத்தோலிக்க மதகுருமார்கள் இருக்கின்றார்கள்.
ஜேவிபியினருக்கும், இராணுவத்திலிருந்து தப்பி ஓடியவர்களுக்கும் வழங்கியதைபோல் தமிழ் கைதிகளுக்கும் பொது மன்னிப்பு வழங்குங்கள். இது சாத்தியமாகாவிட்டால் தயா மாஸ்டருக்கும், ஜோர்ஜ் மாஸ்டருக்கும் வழங்கியதைபோல் சட்ட ரீதியான பிணை வழங்குங்கள்.
இதுவும் சாத்தியமில்லாவிட்டால் அடையாளங் காணப்பட்டுள்ள புலி போராளிகளுக்கு வழங்கப்படும் புனருத்தாபன வேலைத்திட்டங்களில் அரசியல் வன்முறை கைதிகளையும் இணைத்துக் கொள்ளுங்கள்.
மேற்கண்ட மூன்று முறைமைகளின் அடிப்படையில் இவர்களுக்கு சிறைகளிலிருந்தும், தடுப்பு முகாம்களிலிருந்தும் விடுதலையை பெற்றுக்கொடுங்கள்.
அரசாங்கத்திலே அமைச்சர்களாக இருக்கும் தமிழ் அரசியல் வாதிகளிடமிருந்து இந்நாட்டிலே வடக்கிலும், கிழக்கிலும், மேற்கிலும், மலையகத்திலும் வாழும் தமிழ் மக்கள் குறைந்தபட்சமாக எதிர்பார்ப்பது இதுதான்.
Share this article :

கருத்துரையிடுக

 
Company Info | Contact Us | Privacy policy | Term of use | Widget | Advertise with Us | Site map
Copyright © 2011. welvom . All Rights Reserved.
Design Template by panjz-online | Support by creating website | Powered by Blogger