News Update :
Home » » போராட்டம் புலம்பெயர் தமிழரிடம்

போராட்டம் புலம்பெயர் தமிழரிடம்

Penulis : Antony on செவ்வாய், 22 செப்டம்பர், 2009 | PM 3:07

தமிழ்மக்களின் விடிவுக்கான புதிய போராட்டம் எவ்வாறெல்லாம் அமையவேண்டும் என்பது தொடர்ச்சியாக விமர்சனத்துக்கு உட்பட்டுவரும் இக்காலகட்டத்தில்,முப்பது வருடங்களாக கட்டியெழுப்பப்பட்ட ஈழவிடுதலைப்போராட்டத்திற்கு புதிய முலாம் என்ற பெயரில் பல எதிர்வினைகள் மக்கள் மத்தியில் பரப்பிவிடப்படுகின்றன.பன்னெடுங்காலமாக ஒரு இறுக்கமான - கட்டுக்கோப்பான - கட்டமைப்பிற்குள் தமது போராட்டத்தை முன்னெடுத்துவந்த தமிழ்மக்கள், இன்று அந்த கட்டுக்கோப்பும் இறுக்கமும் இல்லை என்று உணரத்தலைப்பட்டு இப்படியான பல்வேறு சில்லறை சிந்தனைகளாலும் ஆட்கொள்ளப்படும் அபாயம் நிலவ ஆரம்பித்திருக்கிறது.இந்த இடத்தில் ஈழத்தமிர் விவகாரம் இன்று மூன்று முனையில் கையாளப்பட்டுவருவதை காணலாம். அதாவது1) ஈழத்தமிழரின் விடுதலைப்போராட்ட வடிவத்தில் இன்று பாரிய பின்னடைவு ஏற்பட்டிருக்கிறது. தாயகத்தில் அதற்கு ஒரு வெற்றிடம் ஏற்பட்டிருக்கிறது. தமிழ்மக்களின் உரிமைகளை பெற்றுக்கொள்வதற்கு நேருக்கு நேர் சரிக்கு சமன் நின்று பேரம் பேசும் வலுவை, தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பு கண்டிருக்கும் பின்னடைவின் பின்னணியில், தமிழ் மக்கள் இழந்திருக்கிறார்கள். இவ்வாறான ஒரு காலகட்டத்தில் புலம்பெயர்ந்து வாழும் தமிழ் சமூகம்தான் தமது தாயக உறவுகளுக்கு விடிவினைப்பெறுக்கொடுக்கும் மிகப்பெரிய சக்தியாக வியாபித்திருக்கிறது. இந்த யதார்த்தத்தை சர்வதேசமே இன்று ஏற்றுக்கொண்டிருக்கிறது.ஆனால், இந்த பலம்பொருந்திய புலம்பெயர்வாழ் தமிழர் சமூகத்தின் மத்தியில் பிளவினை ஏற்படுத்தவேண்டும் என்றும் விடுதலைப்புலிகளுக்கு மீள உயிர்கொடுக்கும் வேலைகளில் ஈடுபட்டுவரும் புலம்பெயர்ந்துவாழும் தமிழ் அமைப்புகளின் பிரதிநிதிகளை கைதுசெய்யவேண்டும் என்றும் புலம்பெயர்ந்துவாழும் தமிழ்மக்களை தனது ஏக எதிரிகளாக நோக்கிவருகிறது சிறிலங்கா அரசு.2) இவை இவ்வாறு இருந்துகொண்டிருக்க, தாயகத்தில் தொடர்ந்தும் தனது அரசியல் பணிகளை முன்னெடுத்தவாறு தமிழ்மக்களின் உரிமைகளுக்காக சிறிலங்கா அரசுடன் பேச்சுக்களை நடத்தி அல்லல்படும் அந்த மக்களை அவலத்திலிருந்து வெளியே கொண்டுவருவதற்கு தமிழ் தேசிய கூட்டமைப்பு தம்மால் இயன்ற முயற்சிகளை மேற்கொண்டுவருகிறது.3) மறுபுறத்தில், தமிழ்மக்களின் அரசியல்வாழ்வுக்கு தீர்வு பெற்றுத்தருவதாக அனுசரணை வழங்க முன்வந்த சர்வதேச சமூகம் இன்றைய நிலையில் ஒரு தீர்வினை நிச்சயம் பெற்றுக்கொடுத்தேயாக வேண்டிய கட்டாய சூழ்நிலைக்குள் விடுதலைப்புலிகளால் தள்ளப்பட்டுள்ளார்கள். அந்தவகையில், சர்வதேச சமூகம் முதற்கட்டமாக மனிதாபிமான விவகாரம் என்ற விடயத்தின் ஊடாக சிறிலங்கா விவகாரத்திற்குள் நுழைந்து தற்போது தனது முயற்சிகளை மேற்கொண்டுவருகிறது.புலம்பெயர்வாழ் தமிழ்மக்கள் - சர்வதேச சமூகம் - சிறிலங்கா அரசு - தமிழ்த்தேசிய கூட்டமைப்பு ஆகியவை இன்றைய கால கட்டத்தில் முக்கிய பங்காளிகளாக தமிழர் விவகாரத்தில் பார்க்கப்படுகின்றன.இந்தமாதிரியாக சூழ்நிலையில், சிறிலங்காவில் சிங்கள சிறைகளில் அகப்பட்டுள்ள மூன்றுலட்சம் மக்களை மீட்கவேண்டும். சரணடைந்த போராளிகளை மீட்கவேண்டும். சரி. இவர்களை மீட்கவேண்டுமாயின் சிறிலங்கா அரசுடன் ஏதோ ஒரு வகையில் ஏதோ ஒரு தரப்பு பேச்சு நடத்தவேண்டும். அதற்குரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளவேண்டும். அதனை மேற்கொள்வதற்கு சிறிலங்காவை தளமாக கொண்டு இயங்கும் ஒரு தரப்பே மிக சரியான தெரிவாக இருக்கமுடியும்.ஆனால், சிறிலங்கா அரசு தமிழ்மக்களுக்கு எதிரான ஆக்கிரமிப்பு போரில் மேற்கொண்டு மனித உரிமை மீறல்களையோ போர்குற்றங்களையோ அரசியல் தீர்வு ஒன்றை விரைவாக தமிழர்களுக்கு வழங்கவேண்டும் என்ற அதீதமான அழுத்தத்தை - தற்போது சிறிலங்காவில் காணப்படும் சூழ்நிலையில் - அங்கிருந்தவாறு எந்த ஒருதரப்பும் வழங்கமுடியாது. குறிப்பிட்ட அழுத்தத்தை சர்வதேசத்தின் ஊடாக வழங்கினால் மாத்திரமே அதற்கு பலன் கிடைக்கும் என்பது அடுத்தவிடயம்.ஆகவே, அந்த விடயத்தை சிறிலங்காவை தளமாக கொண்டு இயங்கும் தமிழர் சார்பான தரப்பு மேற்கொள்வது என்பது நடைமுறைக்கு சாத்தியமானது அல்ல. சிறிலங்கா அரசுக்கு அழுத்தத்தை மேற்கொள்ளும்வகையிலான புலம்பெயர்ந்துவாழும் தமிழ்மக்களின் அரசியல் கட்டமைப்பாக உருவாக்கப்பட்டுள்ள நாடு கடந்த தமிழீழ அரசு திட்டம் சிறிலங்கா அரசுக்கு கடும் சீற்றத்தை ஏற்படுத்தியுள்ள இந்நிலையில், அதனை ஆதரித்து சிறிலங்காவிலிருந்து எந்த தரப்பும் குரல் கொடுப்பது தற்கொலை செய்துகொள்வதற்கு சமம்.ஆகவே, இந்த ஒரு ஒழுங்கு சிக்கலை இலகுவாக தீர்ப்பதற்கான வாய்பாடு மிகச்சுலபமான ஒன்றேயாகும். அதாவது, சிறிலங்கா அரசுடன் களத்திலே நின்று தமிழர் தரப்பு நியாயப்பாடுகளை எடுத்துக்கூறி தொடர்ந்தும் அதனுடன் பேச்சுக்களை நடத்தி உள்நாட்டில் ஒரு தொடர்ச்சியான அழுத்தத்தை கொடுப்பதற்கு - நடைபெற்று முடிந்த தேர்தல்கள் மூலமும் தமது பலத்தை நிரூபித்துள்ள - தமிழ்த்தேசிய கூட்டமைப்பு தனது முயற்சிகளை மேற்கொள்ள -தமிழ்மக்களின் நியாயமான கோரிக்கைகளை தொடர்ந்தும் சர்வதேச அளவில் எடுத்துக்கூறி தமது உறவுகளுக்கு விரைவில் ஒரு விடிவை ஏற்படுத்திக்கொடுப்பதற்கு சர்வதேச சமூகத்தின் ஊடாக புலம்பெயர்ந்து வாழும் தமிழ்மக்கள் சிறிலங்கா அரசுக்கு வெளி அழுத்தத்தை பிரயோகிக்க -ஈழ விடுதலைப்போராட்டத்தின் புதிரான புதிய பாதை என வர்ணிக்கப்படுவது மிகச்சுலபமான ஒரு களத்தை ஏற்படுத்தி தருகிறது. இந்த பாதையில் பயணம் செய்வதற்கு இலட்சியப்பற்றும் கொள்கைப்பிடிப்பும் வழுவாத இலக்கும் இருந்தால் போதுமானது. இதனை வெளியில் பறைசாற்றித்தான் செயலில் இறங்கவேண்டும் என்ற நோக்குடன், சிறிலங்கா அரசு தனது ஏக எதிரியாக பார்க்கும் புலம்பெயர்வாழ் தமிழர் தரப்பு தமிழ்க்கூட்டமைப்புடன் இணைந்து செயற்பட முயற்சித்து, களத்திலே பணிபுரியும் கூட்டமைப்பினருக்கும் ஆபத்தை ஏற்படுத்தி, அதன் ஊடாக அங்கு தமிழ்மக்களுக்காக ஒலிக்கும் அந்த ஒரு குரலையும் அடங்குவதற்கு இன்னொரு தமிழர் தரப்பே உடந்தையாகிவிடக்கூடாது.களத்தில் நின்று அரசியல் நடத்தும் கூட்டமைப்பினருக்கு எத்தனையோ நடைமுறைச்சிக்கல்கள் இருக்கின்றன. சிங்கத்தின் குகைக்குள் நின்றுகொண்டு அதன் பிடரி மயிரை பிடித்து உலுப்புவது போன்ற மரணப்போராட்டத்தை நடத்திக்கொண்டு தமிழ்மக்களின் விடிவுக்காக போராடுபவர்கள் அவர்கள். அவர்கள் சிங்கள தேசத்திடம் தமது கொள்கைகளை அடகுவைத்துவிட்டு, கேட்பார் யாருமில்லை என்ற மமதையில் நாற்காலி கனவுகளில் மயங்கி கிடக்கவில்லை. பதவி மற்றும் பணத்துக்காக இனத்தின் இலட்சியத்தை விற்கவில்லை. மூன்று உறுப்பினர்களை காவுகொடுத்தும் ஒரு உறுப்பினர் சிறைவாசம் அனுபவிக்கவும் தமிழ்த்தேசிய கூட்டமைப்பு இன்றும் தனது கொள்கை தவறாத அரசியல் பாதையில் தமிழ்மக்களின் விடுதலைக்காக போராடிவருகிறது.இன்றைய நிலையில், ஈழத்தமிழன் ஒவ்வொருவனுக்கும் தனது இலக்கு எது என்பது தெரியும்.அவ்வாறான அரசியல் புரிதல் நிலையை மிகத்தெளிவாக ஏற்படுத்தி,அடுத்த கட்டப்போராட்டத்தை தொடர்ச்சியாக மேற்கொள்ள கூடிய பலமாக அடித்தளத்தையிட்டு,சுலபமாக காரியத்தையே புலம்பெயர்ந்துவாழும் தமிழ் சமூகத்திடம் ஒப்படைத்துள்ளார்கள் விடுதலைப்புலிகள். இதில் குழப்பம் தேவையில்லை.இந்த அரசியல் சதுரங்கத்தை நேர்த்தியாக ஆடுவதற்கு தெளிவான பார்வையும் தொடர்ச்சியான முயற்சியும் உறுதியான முடிவுகளுமே பெரும் பக்கபலமாக அமையப்போகின்றன. அதனையே தற்போது, ஈழத்தமிழினம் எதிர்பார்த்து நிற்கிறது.இதற்குரிய சரியான அரசியல் அணிவகுப்பில் இணைந்து புலம்பெயர்வாழ் சமூகம் பரஸ்பர புரிதலுடன் தனது பயணத்தை மேற்கொள்கிறது. மிகுதியை களத்தில் பார்ப்போம்.
Share this article :

கருத்துரையிடுக

 
Company Info | Contact Us | Privacy policy | Term of use | Widget | Advertise with Us | Site map
Copyright © 2011. welvom . All Rights Reserved.
Design Template by panjz-online | Support by creating website | Powered by Blogger