
விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரனின் தந்தை திருவேங்கடம் வேலுப்பிள்ளை. கடந்த ஆண்டு விடுதலைப்புலிகளுக்கும், சிங்கள ராணுவத்துக்கும் உச்சக்கட்ட சண்டை நடந்தபோது இவர் தன் மனைவியுடன் வீட்டை விட்டு வெளியேறும் நிலை ஏற்பட்டது. பொதுமக்களோடு சேர்ந்து அவர் தடுப்பு முகாமில் தஞ்சம் அடைந்தார்.பிரபாகரனின் தாய், தந்தையை அடையாளம் கண்டு கொண்டு சிங்கள ராணுவத்தினர் அவர்களை மட்டும் தனியாக பிரித்தனர். பிறகு அவர்களை கொழும்புக்கு அழைத்து சென்று பயங்கரவாத தடுப்புப்பிரிவில் தங்க வைத்தனர்.அவர்களை நல்ல முறையில் கவனித்துக்கொள்வதாக சிங்கள அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. அவர்களை மீட்க பிரபாகரனின் தங்கை முயற்சி செய்தார். ஆனால் அதற்கு வெற்றி கிடைக்கவில்லை.கடந்த 7 மாதமாக வேலுப்பிள்ளையும், அவரது மனைவியும் கொழும்பு பயங்கரவாத முகாமிலேயே வைக்கப்பட்டிருந்தனர். அவர்களை பற்றிய எந்த தகவலையும் சிங்கள அரசு வெளியிடவில்லை.இந்த நிலையில் வேலுப்பிள்ளை திடீரென மரணம் அடைந்தார். அவருக்கு வயது 86. அவரது மரணம் இயற்கையான மரணம் என்று ராணுவத் தரப்பில் தகவல் வெளியிடப்பட்டுள்ளது.பிரபாகரனின் தாய் என்ன ஆனா அவர் எப்படி இருக்கிறார எங்கு இருக்கிறார்ப என்பது போன்ற எந்த தகவல்களும் தெரியவில்லை.பிரபாகரனின் தந்தை வேலுப்பிள்ளை 1980 களில் ஈழத்தில் கடும் சண்டை நடந்த போது தமிழ்நாட்டுக்கு வந்தார். நீண்ட ஆண்டுகள் திருச்சி மாவட்டத்தில் தங்கி இருந்தார்.நார்வே தூதுக்குழு மூலம் இலங்கையில் போர் நிறுத்தம் ஏற்பட்டதும் அவர் மீண்டும் ஈழம் சென்றார். அங்கு பிரபாகரனுடன் தங்கி இருந்தார். கடந்த மே மாதம் உச்சக்கட்ட போர் ஏற்பட்டபோது அவர் பிரபாகரனிடம் இருந்து பிரிந்தார்.வேலுப்பிள்ளை சிங்கள அரசு ஊழியராக 39 ஆண்டுகள் பணியாற்றி உள்ளார். 1943-ம் ஆண்டு இலங்கை ரெயில்வேயில் அவர் கிளார்க் ஆக பணியில் சேர்ந்தார்.பிறகு பதவி உயர்வு பெற்று வேறு பல துறைகளுக்கு மாற்றப்பட்டார். 1982-ம் ஆண்டு அவர் நில ஒப்படைப்புத்துறையில் அதிகாரியாக பணியாற்றி ஓய்வு பெற்றார்.பிரபாகரனின் தந்தை மறைவுக்கு உலகம் முழுவதும் வாழும் ஈழத்தமிழர்கள் கண்ணீர் அஞ்சலி செலுத்தி வருகிறார்கள்.
கருத்துரையிடுக