இன அடிப்படையில் அதிகாரத்தை பகிரக்கூடாது.தேரர்
Penulis : Antony on புதன், 10 நவம்பர், 2010 | 2:53 PM
எதிர்காலத்தில் எக்காரணத்தைக் கொண்டும் இன அடிப்படையில் அதிகாரத்தை பகிரக்கூடாது. ஏனெனில் வடக்கு கிழக்கில் இன நெருக்கடி எதுவும் காணப்படவில்லை. அவ்வாறான பிரச்சினை ஒன்றை மக்கள் உருவாக்க வில்லை. மாறாக, தமிழ் அரசியல்வாதிகளும் சில சிங்கள அரசியல்வாதிகளும் உருவாக்கிய பிரச்சினையே கடந்த 30 வருடங்களாக நிலவியது. அதனை ஜனாதிபதி முடித்து விட்டார். யாரும் எத்தனை மொழியையும் கற்கலாம், ஆனால் நாட்டில் உள்ள அனைவரும் சிங்கள மொழியைக் கற்பது அவசியமாகும் என்று ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகர் பெங்கவே நாலக்க தேரர் தெரிவித்துள்ளார்.
கொழும்பில் அமைந்துள்ள லக்ஷ்மன் கதிர்காமர் சர்வதேச கற்கைகளுக்கான நிலையத்தில் நடைபெற்ற கற்றுக்கொண்ட பாடங்களும் அனுபவங்களும் தொடர்பான தேசிய நல்லிணக்க ஆணைக்குழுவின் விசாரணை அமர்வில் கலந்து கொண்டு சாட்சியமளிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
கற்றுக்கொண்ட பாடங்களும் அனுபவங்களும் தொடர்பான தேசிய நல்லிணக்க ஆணைக்குழுவின் விசாரணை அமர்வு அதன் தலைவர் முன்னாள் சட்டமா அதிபர் சி.ஆர்.டி. சில்வா தலைமையில் நேற்று முன்தினம்; நடைபெற்றது.
பெங்கவ நாலக்க தேரர் அங்கு தொடர்ந்து சாட்சியமளிக்கையில், கடந்த முப்பது வருடங்களாக நாட்டில் பாரிய பயங்கரவாத பிரச்சினை நிலவியது. அந்தப் பயங்கரவாதப் பிரச்சினையை ஜனாதிபதி தீர்த்து வைத்தார். எதிர்காலத்தில் எக்காரணத்தைக்கொண்டும் இன அடிப்படையில் அதிகாரத்தை பகிரக்கூடாது. தமிழ் பிரதேசம், சிங்கள பிரதேசம் என்றும் இருக்க முடியாது. யாரும் எங்கும் வாழக்கூடிய, தொழில் புரியக்கூடிய, கல்வி கற்கக்கூடிய சூழல் இருக்க வேண்டும்.
ஒரு நாட்டினுடைய கலாசாரம் மிகவும் முக்கியமானது. எமது நாட்டின் கலாசாரம் பௌத்தத்தின் அடிப்படையில் வந்தது. எனவே சுற்றுலாத்துறை மற்றும் முதலீட்டு விடயங்களில் எமது நாட்டின் பௌத்தம் மற்றும் கலாசாரம் பாதிக்கப்படக்கூடாது.
எனவே பௌத்த மதத்தை பாதுகாக்க செயற்பட வேண்டும். மேலும் நாட்டின் நலன்கருதியும் பொருளாதார மற்றும் கலாசார விடயங்களுக்காகவும் அனைவரும் சிங்கள மொழியை கற்கவேண்டும். யாரும் வேண்டுமானால் எத்தனை மொழியையும் கற்கலாம். ஆனால் சிங்கள மொழியை அனைவரும் கற்க வேண்டும். இது அவசிய மாகும்.
நான் யுத்த காலத்தில் அடிக்கடி வடக்கு பிரதேசங்களுக்கு சென்று பொது மக்களுடனும் படையினருடனும் உரையாடி வந்துள்ளேன். கடந்த 24 வருடங்களாக நான் இவ்வாறு செயற்பட்டு வந்துள்ளேன். எனவே என்னிடம் அதிகமானளவு அனுபவங்கள் உள்ளன. அதாவது வடக்கு கிழக்கில் தமிழ் சிங்கள மற்றும் முஸ்லிம் மக்களுடன் நான் இணைந்து செயற்பட்டு வந்துள்ளேன்.
எனது அனுபவங்களின் ஊடாக நான் ஒரு விடயத்தை புரிந்துகொண்டேன். அதாவது வடக்கு கிழக்கு மக்களிடையே இனப்பிரச்சினை நிலவவில்லை. காரணம் நான் வடக்குக்கு செல்லும் போதேல்லாம் அப்பகுதி மக்கள் என்னை கௌரவமாகவே நடத்தினர். திருகோணமலைக்கு ஒரு முறை நான் சென்றிருந்தபோது சைவ ஹோட்டல் ஒன்றுக்கு உணவு உட்கொள்ள சென்றிருந்தேன். சாதாரணமாக சைவ ஹோட்டல்களில் உணவுப் பரிமாறப்படும் விதம் வித்தியாசமானது. அதாவது உணவு உண்பவரே இலையை அகற்ற வேண்டும். ஆனால் என் னை அவ்வாறு நடத்தாமல் குறித்த ஹோட்டலின் ஊழியர்கள் கௌரவித்தனர்.
மேலும் அக்காலத்தில் திருகோணமலை மாவட்ட செயலாளராக இருந்த சந்திரதாச ஒரு விடயத்தை என்னிடம் கூறியிருந்தார். அதாவது அப்பிரதேச மக்கள் சிங்களவர் ஒருவர் பிரதேச செயலாளராக வருவதையே விரும்புவதாக என்னிடம் கூறியிருந்தார்.
மேலும் மட்டக்களப்பு மக்கள் ஒரு தடவை என்னுடன் உரையாடும்போது தங்களுக்கு சிங்களவர் ஒருவரை வேட்பாளராக நிறுத்துமாறு கோயிருந்தனர். தாங்கள் அவரை வெற்றிபெற வைப்பதாகவும் தெரிவித்திருந்தனர்.
யாழ்ப்பாணத்தில் பொன்னாலை பிரதேசத்துக்கு ஒருமுறை நான் சென்றிருந்தேன். அங்கு தமிழ் அதிகாரிகள் சிலர் இருந்தனர். அவர்களுக்கு சிங்களம் தெரிந்திருக்காது என்று கருதி நான் அவர்களுடன் ஆங்கிலத்தில் உரையாடினேன். ஆனால் அவர்கள் என்னுடன் சிங்களத்தில் உரையாடினர். அப்போது அவர்களிடம் நான் ஒரு கேள்வியை கேட்டேன். அதாவது யுத்தம் காரணமாக பாதிக்கப்பட்டுள்ள நீங்கள் எந்த அரசியல் கட்சியை விரும்புகின்றீர்கள் என கேட்டேன். அதற்கு அவர்கள் தாங்கள் எந்தக் கட் சியையும் விரும்பவில்லை என்று குறிப்பிட்டனர். மாறாக தம்டன் சிங்கள இராணுவத்தினர் இருந்தால் போதுமானது என்று குறிப்பிட்டனர். அதற்கு சில காரணங்களையும் கூறினர். அதாவது இராணுவம் தங்களுடன் இருக்கும்போது தமது சிறுவர்கள் பாதுகாக்கப்படுவார்கள் என்றும் உணவு இல்லாத போது உணவளிப்பார்கள் என்றும் குறிப்பிட்டனர்.
அத்துடன் சாதாரண மக்கள் ஒருபோதும் தனிநாட்டைக் கோரவில்லை. எனவே இந்தப் பிரச்சினைக்கு இரண்டு தரப்பினர் பொறுப்புக்கூற வேண்டும். தமிழ் அரசியல்வாதிகளும் சில சிங்கள அரசியல்வாதிகளும் பொறுப்புக்கூற வேண்டும். சிறுபான்மை என்ற வசனத்தை சிலர் பிரயோகிக்கின்றனர். இந்த வசனம் உருவாக்கப்பட்டுள்ளது. மைனோரிட்டி என்ற ஆங்கில வார்த்தைக்கு சிறுபான்மையினர் என்று அர்த்தம் வராது. இடதுசாரி கட்சிகளே தங்கள் அரசியலுக்காக இந்த சிறுபான்மை என்ற எண்ணக்கருவை உருவாக்கி வந்தனர். எனவே எமது நாட்டில் இனப்பிரச்சினை இல்லை என்பதனை உலகுக்கு வெளிக்காட்ட வேண்டும். தற் போது பயங்கரவாதம் முடிந்துவிட்டது.
எனவே இந்த ஆணைக்குழுவின் பரிந்துரையானது இதற்கு பின்னர் ஒரு பிரச்சினை வராமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.
யாழ். ரயில் நிலையத்தில் தங்கியுள்ள சிங்கள மக்கள் தொடர்பில் நான் இராணுவத்தின் ஊடாக தகவல்களை பெற்றேன். அதாவது அந்த மக்களை அங்கு குடியேற்றலாம் என்ற எண்ணத்தில்தான் யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் இருப்பதாக அவர்கள் என்னிடம் தெரிவித்தனர். அத்துடன் அங்குள்ள சிங்கள வர்த்தகர்கள் இந்த மக்களுக்கு உதவிகளை வழங்கி வருகின்றனர்.
வரலாற்றை மனதிற்கொண்டே நாட்டை நாம் கட்டியெழுப்ப வேண்டும். வரலாறு என்ற விடயத்தை சிங்கள தமிழ் முஸ்லிம் என அனைத்து மாணவர்களுக்கும் பொதுவாகவே கற்பிக்க வேண்டும். வேறு வேறு வரலாறுகள் கற்பிக்கப்பட முடியாது.
மேலும் தற்போது எமது நாட்டில் மேற்கத்தேய கல்வி முறைமையே காணப்படுகின்றது. அதனை விடுத்து தேசிய முக்கியத்துவம் வாய்ந்த கல்வி முறைமை அவசியமாகும். யுத்தம் நடைபெற்ற காலத்தில் எனக்கு புலனாய்வு தகவல் ஒன்று கிடைத்தது. எவ்வாறு? என்று என்னிடம் கேட்க வேண்டாம். நான் கூறமாட்டேன். அந்த தகவலின்படி நிக்கவெரட்டிய பகுதியில் ஒருவர் கைத்துப்பாக்கி ஒன்றை தயாரித்திருந்தார். ஆனால் அவரை பொலிஸார் கைது செய்து விளக்க மறியலில் வைத்துவிட்டனர். ஆனால் அவர் உற்பத்தி செய்த கைத்துப்பாக்கியை அரசாங்கம் வெளிநாடுகளில் இருந்து கொள்வனவு செய்கின்றது. எனவே அந்த நபரை வைத்து கைத்துப்பாக்கி உற்பத்தி செய்யும் திட்டம் ஒன்றை ஆரம்பித்திருக்கலாம். எனவே எமது தேசிய கல்வி முறைக்கு முக்கியத்துவம் அவசியம்.
எமது அரசியலமைப்பும் உண்மையில் நாம் உருவாக்கியதல்ல. அதில் வெளித்தாக்கங்கள் உள்ளன. அத்துடன் எமது சட்டக்கட்டமைப்பும் ரோம் கட்டமைப்புடன் தொடர்புபட்டது. எனவே எமது நாட்டுக்கே உரியதான அரசியலமைப்பையும் சட்டக்கட்டமைப்பையும் உருவாக்குவது அவசியமாகும். சட்டத்தை முழுமையாக மாற்ற முடியாவிட்டாலும் முடிந்தளவு முயற்சிக்கலாம்.
நாட்டில் 30 வருடங்களாக நிலவிய பயங்கரவாதப் பிரச்சினையை ஜனாதிபதி தீர்த்து வைத்தார். ஆனால் இன்று சிலர் பொருள் விலை பற்றி பேசிக் கொண்டிருக்கின்றனர். இவை அர்த்தமற்றவையாகும். ஒரு காலத்தில் வடக்கு கிழக்கு மக்கள் எந்தளவு அச்சத்துடன் வாழ்ந்தனர் என்று எனக்கு தெரியும். இரவு நேரங்களை காடுகளிலேயே கழித்தனர். காடுகளில் இருக்கும்போது குழந்தைகள் அழுதால் சத்தம் வெளியில் வராமல் இருக்க பிள்ளையின் கழுத்தை பிடிக்கும் நிலைமையே காணப்பட்டது. புலிகளுக்கு அச்சமடைந்தே இவ்வாறு இருந்தனர். யுத்தம் முடிந்த பின்னர் நான் வடக்கு பகுதிக்கு விஜயம் செய்தேன். அங்கு மக்கள் மகிழ்ச்சியாக உள்ளனர். பிள்ளைகள் விளையாடுகின்றனர். பார்ப்பதற்கு மகிழ்ச்சியாகவுள்ளது.
எனவே நாட்டு மக்களின் மரண பயத்தை நீக்கியவர் ஜனாதிபதியாவார். இந்த பிரச்சினையை 1977களிலேயே தீர்த்திருக்க முடியும். ஆனால் முயற்சிக்கவில்லை. ஜனாதிபதியின் சிறந்த அரசியல் தலைமைத்துவத்தின் காரணமாகவே இந்த பயங்கரவாதப் பிரச்சினைக்கு முடிவு கிடைத்தது. எனவே இந்த நாட்டை அபிவிருத்தி செய்ய சட்டத் துறையினர், மருத்துவர்கள், மாணவர்கள், ஆசியர்கள் என அனைவரும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும். ஜனாதிபதியின் ஆலோசகர் என்ற வகையில் இதனை கூறவில்லை. நாட்டை அபிவிருத்தி செய்யவேண்டும் என்று விரும்புகின்றவன் என்ற அடிப்படையில் கூறுகின்றேன் என்றார்.
Related posts:
If you enjoyed this article just click here, or subscribe to receive more great content just like it.
லேபிள்கள்:
இலங்கை
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துரையிடுக