வெள்ளைக்கொடி விவகாரம் தொடர்பாக கொழும்பு மேல் நீதிமன்றத்தில் விசாரணை
Penulis : Antony on புதன், 10 நவம்பர், 2010 | 3:11 PM
அரசாங்கத்திடமிருந்து எதிர்ப்புகள் வரலாமென எண்ணியதாலேயே வெள்ளைக் கொடி விவகாரம் தொடர்பாகப் பாதுகாப்புச் செயலாளரிடம் உறுதிப்படுத்திக் கொள்வதற்காக இறுதிவரை காத்திருந்ததாக பிரெட்றிகா ஜான்ஸ் நீதிமன்றத்தில் நேற்றுத் தெரிவித்தார். வெள்ளைக்கொடி விவகாரம் தொடர்பாக கொழும்பு மேல் நீதிமன்றத்தில் நடைபெற்ற விசாரணையின்போது பிரதிவாதியின் சட்டத்தரணியான நளின் லத்துவஹெட்டியினால் தொடுக்கப்பட்ட கேள்வியொன்றுக்குப் பதிலளிக்கையில் அவர் இ\வ்வாறு கூறினார்
நேற்று இவ்வழக்கு 11 ஆவது நாளாக மேல்நீதிமன்றத்தின் மூவரங்கிய நீதிபதிகள் குழாம் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. கேள்விகளுக்குப் பதிலளித்த பிரெட்றிகா ஜான்ஸ், வெள்ளைக்கொடி விவகாரம் தொடர்பில் பலதரப்பினரிடமும் தாம் உறுதிப்படுத்திக்கொள்ள முயற்சித்தபோதிலும் அது கைகூடவில்லையெனக் குறிப்பிட்டார். 2009 ஆம் ஆண்டு டிசம்பர் 8 ஆம் திகதி அதனை உறுதிப்படுத்திக்கொள்வதற்காகப் பாதுகாப்புச் செயலாளருடன் தொடர்புகொண்டதாகக் குற்றப்புலனாய்வுத் திணைக்களத்திற்கு வழங்கிய வாக்குமூலத்தில் குறிப்பிடப்பட்டிருப்பின் அது தவறானதாகும் எனவும் அவர் கூறினார்.
தாம் டிசம்பர் மாதம் 11 ஆம் திகதியே பாதுகாப்புச் செயலாளரைத் தொடர்புகொள்ள முயற்சித்ததாக பிரெட்றிகா ஜான்ஸ் தெரிவித்தார். நீதிமன்றத்தில் சாட்சியமளிக்கையில் தெரிவித்தவை அனைத்தும் தாம் அறிந்தவையே என்றும் எந்தச் சந்தர்ப்பத்திலும் உண்மைக்குப் புறம்பான கருத்துகளைத் தெரிவிக்கவில்லையெனவும் அவர் சுட்டிக்காட்டினார். ஆங்கிலச் செய்திப் பத்திரிகை ஒன்றில் இந்த வழக்குத் தொடர்பான செய்தி, பிழையாகப் பிரசுரிக்கப்பட்டிருந்ததாகக் கூறிய சாட்சியாளர் பிரெட்றிகா ஜான்ஸ் அதனைச் சீர் செய்வதற்கு நீதிமன்றத்தின் சாட்சிப்பதிவுகளின் பிரதிகளைச் சட்டத்தரணிகள் நிறுவனமொன்றினூடாகப் பெற்றுக்கொண்டதாகக் குறிப்பிட்டார்.
நீதிமன்றம் குறித்த பிரதிகளை எவருக்கும் விநியோகிக்கவில்லை என்பதை அறிவீர்களா எனக் கேட்டபோது தாம் அது தொடர்பாக அறிந்திருக்கவில்லையெனச் சாட்சியாளர் கூறினார். குறித்த சட்டத்தரணிகள் நிறுவனத்தினால் வழங்கப்பட்ட பிரதிகள் எவ்வாறு கிடைத்தன என்பது தொடர்பிலும் தாம் அறிந்திருக்கவில்லையெனவும் அவர் கூறினார். சம்பந்தப்பட்ட சட்டத்தரணிகள் நிறுவனத்தினால் வழங்கப்பட்ட பற்றுச்சீட்டு ஒன்றைச் சாட்சியாளர் நீதிமன்றத்தில் சமர்ப்பித்ததுடன் அதற்காகத் தாம் இரண்டாயிரம் ரூபாவைச் செலுத்தியதாகவும் குறிப்பிட்டார்.
இந்தச் சந்தர்ப்பத்தில் முறைப்பாட்டை நெறிப்படுத்தும் பிரதி சொலிசிட்டர் நாயகம் வசந்த பண்டார குறித்த பிரதிகள் அவருக்குக் கிடைத்தவிதம் தொடர்பில் நீதிமன்றத்தினால் விசாரணையொன்று நடத்தப்படுமாயின் அதற்குத் தாம் எதிர்ப்புத் தெரிவிக்கப்போவதில்லை எனத் தெரிவித்தார். வழக்கு விசாரணை இன்றைய தினத்திற்கு ஒத்திவைக்கப்பட்டது
Related posts:
If you enjoyed this article just click here, or subscribe to receive more great content just like it.
லேபிள்கள்:
ஈழம்
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துரையிடுக