News Update :
Home » » எந்த ஆட்சியில் அதிகளவு கொலை, கொள்ளைகள்: அதிமுக சவால்

எந்த ஆட்சியில் அதிகளவு கொலை, கொள்ளைகள்: அதிமுக சவால்

Penulis : Antony on வியாழன், 11 நவம்பர், 2010 | பிற்பகல் 2:06

எந்த ஆட்சியில் அதிகளவு கொலை, கொள்ளைகள் நடந்துள்ளன என்பது பற்றி நாள் முழுவதும் விவாதிக்க தயாரா என, தி.மு.க.,வும் அ.தி.மு.க.,வும் சட்டசபையில் சவால் விட்டன.
காங்கிரஸ் முன்னாள் எம்.எல்.ஏ., பலராமன் தாக்கப்பட்டது பற்றிய கவன ஈர்ப்பு தீர்மானத்தின் மீது சட்டசபையில் நடந்த விவாதம் வருமாறு:


ஜெயகுமார் - அ.தி.மு.க: ஒரு ஆட்சிக்கு இரண்டு கடமைகள் உண்டு. ஒன்று, சட்டத்தின் ஆட்சியை நிறுவி, மக்களின் உயிருக்கும், பாதுகாப்புக்கும் உத்தரவாதம் அளிப்பது.மற்றொன்று, மக்களின் அத்தியாவசிய தேவைகளை, அடிப் படை வசதிகளை ஏற்படுத்தித் தருவது. இந்த இரண்டுமே, கடந்த நான்கரை ஆண்டுகளில் முற்றிலுமாக செயல்படுத்தப்படவில்லை.


அமைச்சர் ஆற்காடு வீராசாமி: கவன ஈர்ப்பு தீர்மானத்தை கொடுத்த போது எழுதியிருந்ததை படித்துவிட்டு உட்கார வேண்டும். ஆனால், இங்கு விவாதமே நடத்தப்படுகிறது.


செங்கோட்டையன் - அ.தி.மு.க: இதற்கு முன்மாதிரியாக அனைவரும் திகழ வேண்டும். காங்கிரஸ் கட்சிக்கு மட்டும் அதிகம் பேச வாய்ப்பளிக்கலாமா?


சபாநாயகர்: அனைவருக்கும் இது பொருந்தும்.


அமைச்சர் துரைமுருகன்: இன்று முதல் ஒரு முடிவுக்கு வரலாம். என்ன கொடுத்தார்களோ அதை பின்பற்றி கூறினால் போதும். அனைவரும் பிரசங்கம் பண்ண முடியாது. விதிகளின் படி தான் நாங்கள் நடந்து கொள்கிறோம்.


ஜெயகுமார்: தமிழகத்தின் தலை நகரான சென்னை, கடந்த நான்கரை ஆண்டுகளில் கொலை நகரமாக மாறியுள்ளது. இந்திய சராசரி குற்ற புள்ளி விவரங்களை பார்த்தால், தமிழகத்தில் நாள் ஒன்றுக்கு மூன்று கொலை, நான்கு கொள்ளை சம்பவங்கள் நடக்கின்றன.


அமைச்சர் பரிதி இளம்வழுதி: ஒரு பிரச்னை பற்றி கவனஈர்ப்பு தீர்மானம் கொண்டு வரப்பட்டுள்ளது. இதன் மீது விளக்கம் அளிக்க துணை முதல்வர் தயாராக உள்ளார். பலராமன் தாக்குதல் பற்றி சபையின் கவனத்தை ஈர்த்துள்ளனர். எனவே, நேரடியாக இதற்கு துணை முதல்வரை பதிலளிக்க அழைக்கலாம்.


சபாநாயகர்: விஷயத்தை நேரடியாக பேசுங்கள். அதைவிட்டுவிட்டு நான் அப்படி இருந்தேன்... இப்ப இப்படி ஆயிட்டேன் என்பது மாதிரி பேசாதீர்கள்.


ஜெயகுமார்: இந்த ஆட்சியில் குழந்தைகள் கடத்தல், எம்.எல்.ஏ., மீது தாக்குதல், தி.மு.க., மாவட்டச் செயலர் பூண்டி கலைவாணன் கொலை என்று ஏராளமாக நடந்துள்ளன.


துணை முதல்வர் ஸ்டாலின்: கொடுத்த பிரச்னை மீது பேசுவதை விட்டுவிட்டு, வேறு ஏதோ பேசுகிறார். அனைத்துக்கும் பதிலளிக்க தயார். அவர்களது ஆட்சியில் நடந்த கொலை, கொள்ளை, கடத்தல் பட்டியல் தயாராக உள்ளது. தி.மு.க., மாவட்டச் செயலர் கொலை பற்றி பேசியதால், இதை பேச வேண்டியதாயிற்று. அ.தி.மு.க., ஆட்சியில் ப.சிதம்பரம், தூத்துக்குடி ரமேஷ், ஐ.ஏ.எஸ்., அதிகாரி சந்திரலேகா தாக்கப்பட்டது போன்ற சம்பவங்கள் பற்றி பேச எனக்கு நேரம் ஒதுக்க வேண்டும்.


ஜெயகுமார்: இவை பற்றி பேச ஒரு நாள் விவாதத்தை வைத்துக் கொள்ளுங்கள். நான்கரை ஆண்டுகளில் இந்தியாவிலேயே சராசரியாக நடந்த கொலை, கொள்ளை பட்டியலையும், ஜெயலலிதாவின் 10 ஆண்டுகளில் தமிழகம் அமைதி பூங்காவாக திகழ்ந்ததையும் பற்றி பேச தயார். எந்த நாள் என்று முடிவு செய்யுங்கள். நான்கரை ஆண்டுகளில் நீதிபதி கள், வக்கீல்கள், போலீஸ் அதிகாரி கள் கூட தாக்கப்பட்டுள்ளனர்.


அமைச்சர் பொன்முடி: அவரது சவாலுக்கு பதில் சொல்லி தான் இங்கு வந்து உட்கார்ந்துள்ளோம். போலீஸ் துறைக்கான மானியக் கோரிக்கையில் பேச வேண்டியதை இங்கு பேசுகிறார்.


ஜெயகுமார்: வன்முறையாளர்கள், சமூக விரோதிகளை ஆட்சியாளர்கள் இரும்புகரம் கொண்டு ஒடுக்க வேண்டும். அ.தி.மு.க., ஆட்சியில் இரும்புக்கரம் காட்டப்பட்டது. இன்றைய ஆட்சியில் அவர்கள் மீது கரும்புகரம் காட்டுவதால் தான் இந்த நிலை உள்ளது.
Share this article :

கருத்துரையிடுக

 
Company Info | Contact Us | Privacy policy | Term of use | Widget | Advertise with Us | Site map
Copyright © 2011. welvom . All Rights Reserved.
Design Template by panjz-online | Support by creating website | Powered by Blogger