
வடக்கில் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட படையினர் நிலை நிறுத்தப்பட்டுள்ளதாகவும், 1990 ம் ஆண்டளவில் இருந்த நிலைக்கு இராணுவம் பின்தள்ளப்படவேண்டும் எனவும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் அப்பாத்துரை விநாயகமூர்த்தி தெரிவித்துள்ளார்.
வடக்கில் அதி உயர் பாதுகாப்பு வலயங்கள் எந்தவிதமான சட்ட பின்னணியும் இன்றி நிர்ணயிக்கப்பட்டுள்ளதாகவும், பிரதேச மக்களினால் பிரவேசிக்க முடியாத வகையில் அதி உயர் பாதுகாப்பு வலயங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இராணுவ ஆட்சியிலிருந்து விடுதலையும் இயல்பு நிலையுமே இன்று தமிழ் மக்களின் அத்தியாவசிய தேவையாகி உள்ளன என வலியுறுத்திய அவர் 1990ஆம் ஆண்டளவில் இருந்த நிலைக்கு இராணுவம் பின்தள்ளப்படவேண்டும் எனவும் வேண்டுகோள் விடுத்தார்.
நேற்று நாடாளுமன்றத்தில் இரண்டாவது நாளாக நடைபெற்ற வரவு செலவுத்திட்ட உரை மீதான விவாதத்தில் உரையாற்றும்போதே விநாயகமூர்த்தி இந்தக் கோரிக்கையை முன்வைத்தார்.
தொடர்ந்து உரையாற்றிய விநாயகமூர்த்தி எம்.பி. மேலும் கூறியவை வருமாறு:
அண்மையில் யாழ்.மாவட்ட அரச அதிபர் இமெல்டா சுகுமார் ஜேர்மனியிலிருந்து வருகை தந்திருந்த பிரதிநிதிகளுடனான சந்திப்பொன்றில் யாழ்ப்பாணத்தில் உயர்பாதுகாப்பு வலயமென்று ஏதும் இல்லையென்றும் கண்ணிவெடி அகற்றப்பட வேண்டிய இடங்களே காணப்படுகின்றன என்றும் கூறியிருந்ததை இங்கு நான் வன்மையாகக் கண்டிக்கின்றேன்.
அரச உயர் பதவியில் இருக்கும் ஒரு தமிழ்ப் பெண்மணி இவ்வாறு அப்பட்டமாகப் பொய் கூறிவரும் துர்ப்பாக்கிய நிலையையிட்டு நான் மிகவும் மனம் வருந்துகின்றேன்.
இனிமேலாவது அவர் வாயைத் திறக்குமுன்பு சரியான தகவல்களைத் தெரிந்துகொள்ள வேண்டும். ஒருவருடைய சொந்த இடத்தில் சென்று மீளக்குடியமர விடாது மறுப்பது அவருடைய அடிப்படை உரிமையை மீறும் செயலாகும்.
அத்துடன், அண்மையில் 350 சிங்களக் குடும்பத்தினர் யாழ்ப்பாணத்துக்குச் சென்று யாழ். ரயில் நிலையத்தில் தங்கியிருந்தனர் என்ற செய்திபற்றிக் குறிப்பிட விரும்புகின்றேன். பின்னர் அவர்கள் நாவற்குழிக்குச் சென்று அங்கு தற்காலிக கூடாரங்களை அமைத்து தங்கியிருக்கிறார்கள்.
அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா இது தொடர்பில் சில விசாரணைகளை நடத்தியிருந்ததும் அதன்போது இவர்கள் யாழ்ப்பாணத்தில் முன்னர் குடியிருந்ததாகவோ அல்லது யாழ்ப்பாணத்தில் இருந்து துரத்தப்பட்டவர்களோ அல்லர் என்பது தெரிய வந்துள்ளது.
எங்களுக்கிடையில் கலகத்தை உண்டுபண்ண முனையும் சில குழுக்களே இவர்களை யாழ்ப்பாணத்துக்கு அனுப்பி பிரச்சினைகளை உருவாக்குகின்றன. உண்மையில் அவர்கள் யாழ்ப்பாணத்தில் இருந்து துரத்தப்பட்டவர்களாயின் அவர்கள் அங்கு மீளக்குடியேற்றப்படல் வேண்டும். ஆனால் இவர்கள் அவ்வாறானவர்கள் அல்லர்.
போர் முடிவடைந்து ஒன்றரை வருடங்கள் கடந்துள்ள நிலையில் மக்களின் வாழ்க்கைத் தரம் உயர்த்தப்படவில்லை என சுட்டிக்காட்டியுள்ள அவர் பொருட்கள் சேவைகளின் விலை ஏற்றத்தினால் மக்களின் கொள்வனவு இயலளவு வீழ்ச்சியடைந்து செல்வதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
பாதுகாப்பு செலவுகளுக்காக அதிகளவு நிதி ஒதுக்கீடு செய்யப்படுவதாகவும், போர் நிறைவடைந்துள்ள சந்தர்ப்பத்தில் அதிகளவு நிதியை ஒதுக்கீடு செய்ய வேண்டிய அவசியமில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
கருத்துரையிடுக