
இது தொடர்பாக பிரான்ஸ் தமிழீழ மக்கள் பேரவை விடுத்துள்ள செய்தியில் குறிப்பிட்டுள்ளதாவது:
தாயகத்தின் விடுதலைக்கான போராட்டத்தினால் நாம் புலம்பெயர் நாடுகளுக்கு வரவேண்டிய சூழ்நிலைகள் ஏற்பட்டதும், காலப்போக்கில் நாம் வாழும் நாடுகளின் அரசுகள் எமது இனத்திற்கு சனநாயக உரிமைகளை பேணி தனது நாட்டின் குடியுரிமையையும் வழங்கியதும், எந்த கட்சி ஆட்சிக்கு வந்தாலும் அன்று முதல் இன்று வரை எம்மை அரவணைத்து, ஆதரித்து வருவது எமது இனத்திற்கு ஒரு ஆறுதலே. ஆனாலும் குடியுரிமை பெற்றுக்கொண்டவர்கள், நாட்டின் தேர்தல்கள் முலம் அந்தந்த நாட்டின் தலைவர்களை, பாராளுமன்ற, நாடாளுமன்ற, நகரசபை உறுப்பினர்களை, தொண்டர்களை தெரிந்தெடுக்கும் தலையாய பொறுப்பும் உள்ளது என்பதையும் எவரும் மறந்துவிடலாகாது.
இன்று உலகம் முழுவதும் வாழ்ந்து வரும் தமிழ்மக்கள் ஒவ்வொருவருடைய வாக்குகளும் மிகவும் பெறுமதி மிக்கதாகவே எங்கும் பார்க்கப்படுகின்றது. எமது தாயகத்தில் எமது இனத்திற்கு ஏற்பட்டிருக்கும் நிலைமை மாற்றமடையவும், கொடுமை செய்த கொடியவர்களை கூண்டில் நிறுத்தவும், புலம்பெயர்ந்த எமது மக்களின் சனநாயக உரிமைகள் கிடைக்கவும், பேணிப்பாதுகாக்கப்படவும் குடியுரிமை பெற்ற எமது மக்களின் தேர்தல் வாக்குகள் இன்றியமையாததாகவே உள்ளது.
பிரான்சு வாழ் தமிழீழ மக்களே நீங்கள் பலர் பிரெஞ்சுக்குடியுரிமை பெற்றுள்ள போதும் தேர்தலில் வாக்களிக்கும் உரிமையை செய்யாது நிற்பதாக அறியப்படுகின்றது. பலர் குடியுரிமை பெற்றுவிட்டோம் தானே என்று வாழாதிருக்காமல் குடியுரிமை தந்த நாட்டின் தேர்தலில் பங்கு கொண்டு பங்களிக்கும் பங்காளராகுங்கள்.
எதிர் வரும் மே மாதம் நடைபெறவுள்ள தேர்தலில் நீங்கள் வாக்களிக்க வேண்டுமாயின் எதிர்வரும் 2010 டிசெம்பர் 24ம் திகதிக்கு முன்பாக சென்று உங்கள் பிரதேசத்திற்குரிய மாநகரசபையில் ‘‘ தேர்தல் வாக்குப்பதிவு ” என்கின்ற பகுதிக்கு சென்று உங்கள் பதிவுகளை மேற்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
இதற்கான தேவையானவைகள்:-
1. உங்களுக்கு வழங்கப்பட்ட பிரஜாவுரிமை அட்டை
2. கடவுச்சீட்டு போன்றவை போதுமானவை
எமது இனத்திற்கிழைக்கப்பட்ட கொடுமைகளுக்கு நீதிகிடைக்கவும், எமது நியாயமான எதிர்பார்ப்புக்களை அடைந்திடவும், சனநாயக அரசியல் ரீதியான போராட்டத்திற்கும் எங்கள் வாக்குகள் ஒவ்வொன்றும் வலிமை தருவதோடல்லாமல், அரசியலில் பேரம்பேசும் சக்தியாகவும் உள்ளது என்பதை உணர்ந்திடுவோம்.
நாம் தாமதிக்கும் ஒவ்வொரு விடயமும், காலமும் எமது எதிர்காலத்தையும், எமது சந்ததியின் நலனையும் பாதிக்கும் என்பதையும் கவனத்திற்கொள்வோம்.
நன்றி
தமிழீழ மக்கள் பேரவை – பிரான்ஸ்
கருத்துரையிடுக