
பாகிஸ்தானில் 43 பயங்கரவாத முகாம்கள் செயல்பட்டு வருகின்றன. அவற்றை நிரந்தரமாக மூடுவதற்கு உதவ வேண்டும்' என அமெரிக்காவிடம், இந்தியா வலியுறுத்தியுள்ளதாக விக்கிலீக்ஸ் பரபரப்பு தகவல் வெளியிட்டுள்ளது. விக்கிலீக்ஸ் வெளியிட்டதாக பிரிட்டனிலிருந்து வெளிவரும், "கார்டியன்' பத்திரிகையில் செய்தி ஒன்று பிரசுரமாகியுள்ளது. அதில் கூறியிருப்பதாவது:இந்தியா - அமெரிக்கா இடையிலான உயர்மட்ட பேச்சுவார்த்தை கடந்த ஆண்டு ஜூனில் நடந்தது.
இந்தக் கூட்டத்தில், அமெரிக்க தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஜிம் ஜோன்ஸ், இந்திய ராணுவ அமைச்சர் ஏ.கே.அந்தோணி மற்றும் அப்போதைய ராணுவ தளபதி தீபக் கபூர் ஆகியோர் பங்கேற்றனர்.கூட்டத்தில் பேசிய ராணுவ தளபதி தீபக் கபூர்," கடந்த 2008ம் ஆண்டு மும்பைத் தாக்குலுக்கு பின், பாகிஸ்தானிலுள்ள பயங்கரவாத முகாம்களில், அந்நாட்டு ராணுவம் அதிரடி சோதனை நடத்தியது. ஆனால், சோதனை நடத்தப்பட்ட பின்னும் அங்கு ஏராளமான பயங்கரவாத முகாம்கள் செயல்படுகின்றன. பாக்.,கில் தற்போது 43 பயங்கரவாத முகாம்கள் செயல்படுகின்றன.
இதில், 22 முகாம்கள் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ளன. இவற்றை நிரந்தரமாக மூடுவதற்கு சில உதவிகள் தேவைப்படுகின்றன. இந்த விவகாரத்தில் அமெரிக்கா தலையிட்டு பயங்கரவாத முகாம்களை மூட உதவி செய்ய வேண்டும்' என்றார்.இதையடுத்து பேசிய அமெரிக்க தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஜிம் ஜோன்ஸ்," பயங்கரவாத முகாம்கள் பிரச்னை குறித்து பாகிஸ்தான் அரசின் கவனத்துக்கு எடுத்துச் செல்லப்படும். இப்பிரச்னை குறித்து பாகிஸ்தான் ராணுவத்துடன் பேச்சுவார்த்தை நடத்த இந்திய ராணுவம் முயற்சி மேற்கொள்ள வேண்டும்' என்றார்.
அப்போது, இடைமறித்த ராணுவ அமைச்சர் ஏ.கே.அந்தோணி, "மும்பைத் தாக்குதல் சதிகாரர்கள் மீது பாகிஸ்தான் அரசு நடவடிக்கை எடுக்கும் வரை அந்நாட்டுடன் எந்த பேச்சுவார்த்தையும் நடத்த இயலாது' என்று திட்டவட்டமாக கூறினார்.இவ்வாறு செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
home



Home
கருத்துரையிடுக