
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நாளை ஒக்ஸ்போர்ட்டில் நிகழ்த்தவுள்ள உரைக்கு போதுமான மாணவர்களின் வருகையை எதிர்பார்க்க முடியாதுள்ளதாக பல்கலைக்கழக தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஜனாதிபதிக்கு எதிராக லண்டனில் நடைபெறும் ஆர்ப்பாட்டங்கள், நாளை ஒக்ஸ்போர்ட்டிலும் பாரிய எதிர்ப்பு ஆர்ப்பாட்டமொன்று நடைபெறவுள்ள நிலையில் அனாவசியமாக சிக்கல்களில் மாட்டிக் கொள்ள தாம் தயாராக இல்லை என்று இலங்கை மாணவர்கள் பலர் ஏற்பாட்டாளர்களிடம் தெரிவித்துள்ளனர்.
அத்துடன் இன்னும் சிலர் ஜனாதிபதியின் உரையைப் புறக்கணிக்கும் முடிவிலும் உள்ளனர்.
இவ்வாறான நிலையில் ஒக்ஸ்போர்ட்டில் கல்வி பயிலும் நூற்றுக்கும் குறைவான மாணவர்கள் மத்தியில் ஓரிரண்டு மாணவர்களே நாளைய உரையின் போது சமூகமளிப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.
அதன் காரணமாக ஜனாதிபதிக்கு நேரவுள்ள சங்கடத்தைத் தவிர்க்கும் பொருட்டு பிரித்தானியாவில் இருக்கும் இலங்கைச் சிங்களவர் அனைவரையும் மாணவர்கள் போன்று உடையணிந்து நாளை ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்துக்கு வருகை தருமாறு லண்டனிலுள்ள இலங்கைத் தூதரகம் வேண்டுகோள் விடுத்துள்ளது.
அவ்வாறு வருகை தர விரும்புகின்றவர்களுக்கு வருகை தரவும், வீடு திரும்பவும் போக்குவரத்து வசதிகள் வழங்கப்படுமெனவும் உறுதியளிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையே ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மற்றும் லண்டனிலுள்ள இலங்கைத் தூதரகம் என்பவற்றின் வேண்டுகோளின் பேரில் கலகமடக்கும் பொலிசார் உள்பட விசேட படையணிகள் நாளை ஒக்ஸ்போர்ட் வளாகத்தில் பாதுகாப்புக் கடமைகளில் ஈடுபடுத்தப்படும் என்று தெரியவருகின்றது.
ஜனாதிபதிக்கெதிரான விமான நிலைய ஆர்ப்பாட்டத்தின் போது விடுதலைப் புலிகளின் கொடிகள் காட்சிப்படுத்தப்பட்டிருந்ததைச் சுட்டிக்காட்டியுள்ள இலங்கைத் தூதரக அதிகாரிகள், பிரித்தானியாவில் புலிகள் அமைப்பு தடைசெய்யப்பட்டுள்ள நிலையில் அவ்வாறு ஆர்ப்பாட்டம் நடாத்த அனுமதியளிக்கப்பட்டது குறித்து ஆட்சேபத்தையும் தெரிவித்துள்ளனர்.
அத்துடன் புலிகளின் உறுப்பினர்கள் மற்றும் ஆதரவாளர்கள் ஆகியோர் மூலமாக ஜனாதிபதி தரப்பினருக்கு ஏதேனும் ஆபத்துக்கள் நேரலாம் என்று ராஜதந்திர மட்டத்தில் சுட்டிக்காட்டப்பட்டதையடுத்தே நாளைக்கு விசேட பாதுகாப்பு ஏற்பாடுகளை மேற்கொள்ள லண்டன் பொலிசார் இணங்கியுள்ளனர்.
ஆயினும் ஜனாதிபதிக்கெதிரான ஆர்ப்பாட்டத்துக்கு இடையூறு விளைவிக்கப்படாதெனவும் லண்டன் பொலிஸ் தலைமையக தகவல்கள் தெரிவிக்கின்றன.
கருத்துரையிடுக