News Update :
Home » » பச்சிளங் குழந்தையை சப்பாத்துக் கால்களால் தாக்கிய கொடியவர்கள் பற்றி அறிந்திருக்க வாய்ப்பில்லை. - ஐ.நா. மன்றுக்கு ஈழமகன் அனுப்பிய கண்ணீர்மடல்

பச்சிளங் குழந்தையை சப்பாத்துக் கால்களால் தாக்கிய கொடியவர்கள் பற்றி அறிந்திருக்க வாய்ப்பில்லை. - ஐ.நா. மன்றுக்கு ஈழமகன் அனுப்பிய கண்ணீர்மடல்

Penulis : Antony on செவ்வாய், 21 டிசம்பர், 2010 | முற்பகல் 9:37

1958ல் பிறந்த எனது தாயாரான குழந்தையை பிறந்த அன்று சிங்கள இனவாத இராணுவம் வைத்தியசாலையில் வைத்து சப்பாத்துக் காலால் தாக்கியது. போர்க்குற்ற தொடர்பான விசாரணைகளை மேற்கொள்ள ஐ.நா சபையால் நியமிக்கப்பட்டிருக்கும் நிபுணர் குழுவுக்கு ஈழமகன் ஒருவர் நீதிகேட்டு அனுப்பிய மடலில் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
இலங்கையில் நடந்த மோதலின் இறுதிப்பகுதியில் இடம்பெற்றதாகக் குற்றம் சாட்டப்படும் சர்வதேச மனித உரிமைகள், மனிதாபிமானச் சட்ட மீறல்கள் என்பவைக்கான பொறுப்புப் பற்றிய விடயங்கள் குறித்து ஐ.நா.செயலாளர் நாயகம் பான் கீ மூன் அவர்களுக்கு ஆலோசனை கூறுவதற்காக அமைக்கப்பட்டிருக்கும் நிபுணர் குழுவில் இடம்பெற்றிருக்கும் பெரு மதிப்பிற்குரிய யஸ்மின் சூகா, மார்சுகி டருஸ்மன், ஸ்ரிவன் ரற்னர் எல்லோருக்கும் என் வணக்கங்கள்.

நான் இலங்கையின் வடபகுதி யாழ்ப்பாணத்தைப் பிறப்பிடமாகக் கொண்டவன். இலங்கையில் உயிராபத்து ஏற்பட்டிருந்த நிலையில் புலம்பெயர் நாடொன்றில் அகதியாக வந்து வசித்து வருகின்றேன்.

திருமதி சூகா அவர்களே! தென்னாபிரிக்காவின் உண்மை, நல்லிணக்க ஆணைக்குழுவில் உறுப்பினராகப் பணிபுரிந்த உங்கள் நேர்மையையும் உண்மைத் தன்மையையும் நம்புகின்றேன்

திரு.மார்சுகி அவர்களே! இந்தோனேசியக் குடியரசின் சட்டவாளர் நாயகமாக கடமையாற்றிய உங்கள் தகுதியையும், இந்தோனேசியாவின் தேசிய மனித உரிமை ஆணைக்குழுவின் உறுப்பினராக இருந்த உங்கள் அனுபவத்தையும், ஐ.நா.வின் இரு உண்மைகாண் செயற்பாட்டிலும் பங்குபற்றிய உங்கள் உண்மைத் தன்மையையும் நம்புகின்றேன்.

பேராசிரியர் ஸ்ரிவன் ரட்னர் அவர்களே! மிசிகன் பல்கலைக்கழக சட்டப்பள்ளியில் சட்டத்துறைப் பேராசிரியராக இருக்கும் உங்கள் வழிகாட்டலை மதிக்கின்றேன்.

தாங்கள் ஐ.நா செயலாளர் நாயகத்திற்கு ஆலோசனை வழங்குவதற்காக அமைக்கப்பட் குழு மட்டுமே என்பதை நான் நன்கு அறிவேன். இக்குழு இலங்கையைக் கட்டுப்படுத்தாது. இந்தக் குழுவினர் இலங்கைக்குள் நுழைவதற்கு இலங்கை அரசு அனுமதி மறுத்துள்ளது என்பதையும் அறிவேன்.

இருந்தாலும் தமிழ்மக்களாகிய எங்களுக்கு முதன் முதலாக கிடைத்திருக்கும் இத்தகைய ஒரு சந்தர்ப்பத்தையிட்டு மிகவும் ஆறுதலடைகின்றேன். எனக்குள் புதைந்திருக்கும் உண்மைகளையும் உள்ளக்குமுறலையும் தங்களுக்கு எப்படியும் முழுமையாக தெரிவித்துவிட வேண்டும் என்ற அவாவில் எங்கு தொடங்குவது எதில் முடிப்பது என்று தெரியாமல் எழுத முற்படுகின்றேன். இதில் தங்களிற்கு ஏதும் சிரமம் இருந்தால் பொறுத்துக்கொள்ளவும்.

தாங்கள் வழங்கியிருக்கும் இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி இலங்கை இராணுவம் போர்க்குற்றம் புரிந்திருக்கின்றது என்பதை என்னால் முடிந்த அளவு தங்களுக்கு உறுதிப்படுத்த முற்படுகின்றேன். இலங்கை அரச இயந்திரம் மீது பல தசாப்தங்ளாக நம்பிக்கை இழந்திருக்கும் தமிழர்களாகிய நாம் ஒரு பக்கச்சார்பற்ற சர்வதேச விசாரணையைக் கோரி நிற்கின்றோம்.
அத்துடன் தாங்கள் நீதிக்காக வழங்கியிருக்கும் இச்சந்தர்ப்பத்தை பல தசாப்தங்களாக எங்கள் மனங்களிலும் உடல்களிலும் தேசத்திலும் பதியப்பட்டிருக்கும் ஆழமான காயங்களை ஐ.நா சபைக்கு ஆத்மார்த்தமாக தெரிவிக்கும் அரிய வாய்ப்பாகவும் பயன்படுத்துகின்றேன் என்பதை நன்றியுடன் தெரிவித்துக்கொள்கின்றேன்.

என்னுடைய தாயார் 1958ல் யாழ்ப்பாணத்தில் பிறந்தவர். அன்றைய நாட்களில் இலங்கையில் இனக்கலவரம் நடைபெற்றுக்கொண்டிருந்தது. அதாவது சிங்கள இராணுவமும் அதனுடன் சேர்ந்த காடையர் கூட்டமும் அரசாங்கத்தின் ஆசீர்வாதத்துடன் தமிழ் மக்களின் உயிர்களையும் சொத்துக்களையும் சூறையாடிக்கொண்டிருந்தது. அப்பொழுது சிங்கள அரசிற்கு எதிராக போராட்ட இயக்கங்கள் எதுவும் இருந்திருக்கவில்லை. ஆனால் சிங்கள இனவாத இராணுவம் வைத்தியசாலையில் அன்று பிறந்திருந்த குழந்தையான எனது தாயாரை காலால் தாக்கியது. பச்சைக் குழந்தையை காலால் தாக்கிய கொடியவர்களைப் பற்றி நீங்கள் இதற்கு முதல் அறிந்திருக்க வாய்ப்பில்லை. அன்று என் தாயாருக்கு நடந்த தாக்குதல் இலங்கையின் சிங்கள மேலாதிக்க மனோபாவத்திற்கும் மனிதநேயமற்ற தன்மைக்குமான குறியீடு ஆகும்.

இத்தகைய சம்பவங்களால் பாதிக்கப்பட்ட மக்களின் காயங்களும் அரசியல் கல்வி சமூக, பொருளாதார ரீதியாக தோற்கடிக்கப்பட்டதன் விளைவுமே இலங்கையில் ஆயுதப் போராட்டத்தை ஆரம்பித்தது. ஆயுதப்போராட்டத்தில் புரியப்பட்டதாகக் கூறப்படும் குற்றங்களுக்கும் விசாரணைகளுக்கும் முதல் ஆயுதப்போராட்டத்தை தூண்டியவர்களுக்கும் உருவாக்கியவர்களுக்கும் என்ன தீர்ப்பினை மானிடத்தின் தலைமை மையமான ஐ.நா சபை வைத்திருக்கின்றது? என தங்களை பணிவுடன் பாதிக்கப்பட்ட சக மனிதனாக கேட்டுக்கொள்கின்றேன்.

இத்தகைய வினாவை எங்களுக்கு நீதியைப்பெற்றுக் கொள்வதற்காக மட்டுமல்ல, உலகில் இனிமேல் எந்தவொரு தீவிரவாதமும் தோற்றம் பெறாமல் மனிதமும் மனித உரிமைகளும் பேணப்பட்டு இந்தப் பூமி சகல மக்களுக்கும் சமாதான சொர்க்கமாக விளங்கவேண்டும் என்பதற்காகவுமே கேட்கின்றேன் என்பதை நீங்கள் ஆத்மார்த்தமாக புரிந்துகொள்வீர்கள் என நம்புகின்றேன்.

தொடர்ந்து 1983 ஆம் ஆண்டு யூலை மாதம் என்னுடைய சகோதரன் பிறந்திருந்த போதும் இன அழிப்பு நடைபெற்றது. (இதையும் இனக்கலவரம் என்றே கூறுகிறார்கள் ஆனால் அப்பாவி மக்களாகிய ஒரு இனத்தை இன்னொரு இன இராணுவம் அழித்துச் சிதைப்பதை இனக்கலவரம் என்று சொல்லமுடியாதென்பதை தாங்கள் நன்கு அறிவீர்கள்).

எனது தாய் பிறந்ததிலிருந்து எங்கள் ஒவ்வொருவருடைய பிறப்புக்களும் அன்றாட வாழ்வும், கல்வியும் இலங்கை அரச படைகளின் எறிகணை மற்றும் விமானத் தாக்குதல்களாலும் ஆக்கிரமிப்புக்களாலுமே நிறைந்து வந்திருக்கின்றது.

இதற்குள் அப்போது அமைதிகாக்கவென இலங்கைக்கு வந்திருந்த இந்திய இராணுவம் அப்பாவியான என் தந்தையை குழந்தையான என் கண்முன்னேயே சுட்டுக்கொன்றது. அப்போது என் தந்தை என்னைத் தூக்கி வைத்திருந்தார். ஆனால் அவர்கள் சிறிதும் இரக்கம் இல்லாமல் என்னை நிலத்தில் தூக்கி எறிந்தார்கள். அப்போது என் சகோதரியை என் அம்மா வயிற்றில் ஏழு மாதக் குழந்தையாக சுமந்தபடி இருந்தார். நாங்கள் நான்கு ஆண் பிள்ளைகள். ஐந்தாவதாக பிறக்க இருந்த தன் பெண் குழந்தையை பார்க்காவிடாது படுகொலை செய்யப்பட்ட என் தந்தைக்கும் அதனால் இன்றும் அநாதையாக அலையும் என் குடும்பத்திற்கும், பாடசாலை மாணவர்களாய் இருந்த என் மைத்துனரையும் அவர் நண்பனையும் நடுவீதியில் போட்டு உருட்டி உருட்டி அடித்துக்கொலை செய்யப்பட்டதற்கும் எம் போன்ற பாதிக்கப்பட்ட பல்லாயிரம் உறவுகளுக்கும் இந்திய தேசமும் ஐ.நா சபையும் என்ன நீதியைத் தரப்போகின்றது. நாங்கள் அத்தனை ஆவணங்களையும் வைத்திருக்கின்றோம். உங்களால் முடிந்தால் உலகில் எங்களுக்கன நீதியை எங்கே எப்படிப்பெறுவதென்று கூறுங்கள். நாங்கள் சாட்சிகளாய் இரு தசாப்தங்கள் கடந்தும் நீதிக்காகக் காத்திருக்கின்றோம். என்றோ ஒரு நாள் நீதி கிடைக்கும் என்று நம்பி இருக்கின்றோம்.

இன்று வரலாற்று ரீதியான எமது சொந்த மண் ஆக்கிரமிக்கப்பட்டிருக்கிறது. வரலாறுகள் திரிபுபடுத்தப்பட்டு வந்தேறு குடிகள் என எங்களை துரத்தும் அளவுக்கு இலங்கை அரசு துணிந்து நிற்கிறது. “கணவனை இழந்த உங்கள் பெண்களுக்கு நாங்கள் கணவன்மாரை கொடுக்கின்றோம். பிள்ளைகளை இழந்த உங்கள் பெண்களுக்கு நாங்கள் பிள்ளைகளையும் கொடுக்கின்றோம்” என பகிரங்கமாகவே பாராளுமன்றத்தில் எங்கள் இனமும் கலாச்சாரமும் கேவலப்படுத்தப்பட்டுக்கொண்டிருக்கும் நிலையிலேயே நாங்கள் இருக்கின்றோம். யுத்தம் முடிவடைந்த பின்னரும் யுத்தத்தால் ஏற்பட்ட காயங்கள் ஆறவழியின்றி நாம் அவலப்பட்டுக்கொண்டிருக்கும் நிலையிலும் எங்கள் மனங்கள் சிங்கள மேலாதிக்க மனோபாவத்தால் ரணப்படுத்ப்பட்டுக்கொண்டிருக்கின்றது. எங்கள் அடையாளங்கள் படிப்படியாக அழிக்கப்பட்டுக்கொண்டிருக்கின்றது. உயிர்களும் நிலமும் கலையும் கலாச்சாரமும் என எம் இனம் தொடர் இன அழிப்புக்கு உட்பட்டவண்ணமே இன்னமும் இருக்கின்றது.

நாங்கள் பிரித்தானியா ஆட்சிக்காலத்திற்கு முன்பிருந்ததன் படி பிரிந்து வாழ்வதே எங்கள் இருப்பையும் இயல்பு வாழ்வையும் உறுதிப்படுத்தும் என்பதை தங்களின் மேலான கவனத்திற்கு கொண்டுவரவிரும்புகின்றேன். ஐ.நா விதிகளின்படி எங்களிற்கு பிரிந்து செல்வதற்கான உரிமையும் தகமைகளும் இருந்தும் நாங்களும் கொசோவே போல் மொன்றொநீக்றோ போல் இனிவரும் தென்சூடான் போல் பிரிந்து சென்று சுதந்திரம் பெற ஒரு வாக்கெடுப்பை நடாத்த ஏன் ஐ.நா மன்றம் இன்னமும் முன்வரவில்லை என்ற என் கேள்விக்கும் தாங்கள் பதில் பெற்றுத் தருவீர்கள் என்று நம்புகின்றேன்

இறுதியாக முள்ளிவாய்க்காலில் நூறிற்கும் மேற்பட்ட என்னுடைய நேரடி குடும்ப உறுப்பினர்களை இழந்திருக்கின்றேன் அல்லது தொலைத்திருக்கின்றேன். பலர் பொஸ்பரஸ் குண்டுகளாலும் தடைசெய்யப்பட்ட வேறு பல குண்டுகளாலும் காயப்பபடுத்தப்பட்டிருக்கிறார்கள். அங்கங்களை இழக்கவைக்கப்பட்டிருக்கிறார்கள். இன்னமும் பலர் சிறைப்படுத்தப்பட்டுள்ளார்கள். சமாதான செயலக பணிப்பாளர் புலித்தேவனுடன் சரணடைந்த என்னுடைய சகோதரன் உட்பட பல உறவுகளிற்கு இன்னமும் என்ன நடந்தது என அறியமுடியவில்லை.

இலங்கை அரசு இன்று வெளியுலகுக்கு அபிவிருத்தி புனர்வாழ்வு காட்டிக்கொண்டிருக்கும் நிலையிலும் முள்ளிவாய்க்காலில் கணவனை இழந்த என்னுடைய சகோதரியும் அவள் குழந்தைகளும் உட்பட பல உறவினர்கள் சிங்கள அரச புலனாய்வுத்துறையால் உடல் உள ரீதியாக இன்றும் துன்புறுத்தப்பட்டுக்கொண்டிருக்கிறார்கள். நீங்கள் எங்கள் உறவுகளின் உயிருக்கும் பாதுகாப்பிற்கும் உத்தரவாதம் அளிக்கும் பட்சத்தில் முள்ளிவாய்க்காலிலும் அதன் பின்னரும் நிகழ்த்தப்பட்ட தற்போதும் நிகழ்த்தப்பட்டுக்கொண்டிருக்கும் அரச பயங்கரவாதத்தை பல நூறு நேரடிச் சாட்சிகள் மூலமாகவும் ஆவணங்கள் மூலமாகவும் அம்பலப்படுத்தி எமக்கான நியாயத்தைப் பெற காத்துக்கொண்டிருக்கின்றேன்.

இப்படிக்கு
உண்மையுள்ள
ஈழமகன்
Share this article :

கருத்துரையிடுக

 
Company Info | Contact Us | Privacy policy | Term of use | Widget | Advertise with Us | Site map
Copyright © 2011. welvom . All Rights Reserved.
Design Template by panjz-online | Support by creating website | Powered by Blogger