News Update :
Home » » நிர்வாக சேவைக்கான தெரிவில் தமிழர்கள் எவருமில்லை

நிர்வாக சேவைக்கான தெரிவில் தமிழர்கள் எவருமில்லை

Penulis : Antony on செவ்வாய், 28 டிசம்பர், 2010 | பிற்பகல் 3:20


சிறிலங்கா நிர்வாக சேவைகளில் [Sri Lanka Administrative Service - SLAS] இணைத்துக்கொள்வதற்காக புதிதாக நியமிக்கப்பட்டிருக்கும் 135 பேருக்குமான நியமனக் கடிதங்களைக் கடந்தவாரம் அதிபர் ராஜபக்ச வழங்கியிருந்தார்.

நாட்டினது அனைத்துச் சமூகத்திலிருந்தும் சிறிலங்காவினது நிர்வாக சேவைக்கான ஆட்கள் திரட்டப்படுவதுதான் வழமை.

ஆனால் புதிதாக நியமனம் பெற்றிருக்கும் 135 பேரில் தமிழர்கள் எவரும் இல்லாத அதேநேரம் ஒரேயொரு முஸ்லீமுக்கு மாத்திரம் அனுமதி வழங்கப்பட்டிருக்கிறது.

இவ்வாறு 'லக்பிம நியூஸ்' செய்தித்தளத்தின் Ranga Jayasuriya எழுதியுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டிருக்கின்றது. அதில் மேலும் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது,

நேர்காணலுக்காக தெரிவுசெய்யப்பட்ட 257 விண்ணப்பதாரிகளில் ஒரு தமிழர்கூட இல்லை. பொதுநிர்வாக மற்றும் உள்நாட்டு விவகார அமைச்சர் பி.பி அபயக்கோன் கூட இந்த அநீதியினை உறுதிப்படுத்துகிறார்.

இருப்பினும் நிலைமையினைச் சீர்செய்வதோடு தமிழர்களுக்கும் வாய்ப்புக் கொடுப்பதற்கான சந்தர்ப்பங்கள் அரிதாகவே காணப்படுகின்றன.

பொதுவான போட்டிப் பரீட்சையின் ஊடாகவே இதற்கான ஆட்தெரிவு இடம்பெற்றதாகவும் தமிழ் மொழிமூலம் தோற்றிய பரீட்சார்த்திகள் எவரும் போதிய புள்ளிகளைக் பெறவில்லை என இந்த அமைச்சர் விளக்கமளிக்கிறார்.

தமிழ் மொழிமூலக் கல்விமான்கள் மற்றும் பொதுநிர்வாக அமைச்சினால் இந்த பரீட்சை வினாத்தாள்கள் திருத்தப்பட்டபோது மீளாய்வுக்கு உட்படுத்தப்பட்டதாகவும் தமிழ் மொழிமூலப் பரீட்சார்த்திகள் போதிய புள்ளிகளைப் பெறுவதற்குத் தவறியமையினால் அமைச்சினால் எதுவும் செய்யமுடியாதுள்ளது என அமைச்சின் செயலாளர் கூறுகிறார்.

எது எவ்வாறிருப்பினும் தாம் வேண்டுமென்றே புறக்கணிக்கப்பட்டதாகவே தமிழ் மொழிமூலப் பரீட்சார்த்திகள் கருதுகிறார்கள். தமிழர்கள் இன ரீதியில் ஓரங்கட்டப்படுவதையே இது காட்டுக்கிறது என அம்பாறை மாவட்ட பொது நிர்வாக அதிகாரியான கலாநிதி ஏ.எல் பாறூக் கூறுகிறார்.

அண்மைய அம்பாறை மாவட்டச் செயலகத்திற்குப் புதிதாக நியமிக்கப்பட்டிருக்கும் 29 பணியாளர்களில் ஒரேயொருவர் மாத்திரம்தான் தமிழ் பேசுவார் என அவர் கூறுகிறார்.

"அம்பாறை மாவட்டத்தில் வழபாபிட்டி [Valapapitty] போன்ற தனித் தமிழர்களைக் கொண்ட கிராமங்களுக்கு இதுபோல சிங்கள மொழியினை மாத்திரம் பேசும் அலுவலர்கள் பணிக்கமர்த்தப்பட்டிருப்பதானது அரச அதிகாரிகளுடன் மக்கள் தொடர்பு கொள்ளமுடியாததொரு நிலையினை ஏற்படுத்தியிருக்கிறது" என அவர் தொடர்ந்தார்.

இன்றைய நிலையில் கிழக்கு மாகாணத்தில் சிங்கள, தமிழ் மற்றும் முல்லீம் சமூகத்தவர்கள் சம அளவில் வாழ்ந்து வருகிறார்கள். இந்த இன ரீதியிலான பரம்பலினை அடிப்படையாகக் கொண்டே அரச நியமனங்கள் வழங்கப்படவேண்டும் என பாறூக் கூறுகிறார்.

"நாட்டினது பெரும்பான்மைச் சமூகம் எதுவோ அதற்குச் சாதகமாகவே அனைத்து முனைப்புக்களையும் மேற்கொள்ளும் அதேநேரம் ஏனைய இரண்டு சமூகங்களையும் ஒதுக்கும் வகையில் செயற்படுவதானது அவர்கள் மத்தியில் கசப்புணர்வு வலுப்பெறுவதற்கும் இன ரீதியிலான வெறுப்பு அதிகரிப்பதற்குமே வழிசெய்யும்" என அவர் தொடர்ந்தார்.

இந்த நிலையில் நாட்டினது சிறுபான்மையினைரையும் உள்வாங்குவதற்குத் தேவையான வினைத்திறன்கொண்ட நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவேண்டும் என வாதிடும் பாறூக் நீண்டபல காலமாக போர் இடம்பெற்றுவந்தமையினாலும் தமிழர்களுக்குக் கல்விக்கான வாய்ப்புக்கள் முழுமையாக ஏற்படுத்திக்கொடுக்கப்படாததும்தான் இந்தப் போட்டிப் பரீட்சையில் தமிழ் மொழி மூல பரிட்சார்த்திகள் அதிக புள்ளிகளைப் பெறாதமைக்கான காரணம் என்கிறார்.

இத்தகைய போட்டிப் பரீட்சைகளின் போது இன ரீதியிலான ஒதுக்கீடு வழங்கப்படுவதானது இதுபோன்ற பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி வைப்பதாக அமையும் என அவர் கூறுகிறார்.

எவ்வாறிருப்பினும், "இன அடையாளத்தின் அடிப்படையில் நியமனங்களை வழங்கவேண்டாம்" என சட்டமா அதிபர் தமக்கு அறிவுறுத்தியிருக்கிறார் என பொதுநிர்வாக அலுவல்கள் அமைச்சின் செயலாளர் அபயக்கோன் கூறுகிறார்.

உயர் நீதிமன்றில் தொடுக்கப்பட்டிருக்கும் அடிப்படை உரிமை மீறல் மனுவொன்றின் மீதான விசாரணையின் போதே சட்டமா அதிபர் இந்த அறிவுறுத்தல்களை விடுத்திருந்தார்.

நாட்டினது வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் பொதுச்சேவையில் பணியாற்றுவதற்காக பணியாளர்களை உள்வாங்கும்போது இந்த மாகணாங்களுக்கு உட்பட்ட போட்டிப்பரீட்சையே மேற்கொள்ளப்படும் என செயலாளர் அபயக்கோன் தொடர்ந்து தெரிவித்தார்.

1991ம் ஆண்டு முதல் பத்தாண்டுகளுக்கு ஒரு முறை வடக்குக் கிழக்கில் இந்தப் போட்டிப் பரீட்சை இடம்பெற்றுவருகிறது.

2001ம் ஆண்டு இறுதியாக இந்தப் பரீட்சை இடம்பெற்றது. 2011ம் ஆண்டு இடம்பெறவுள்ள இந்தப் போட்டிப் பரீட்சையின் பின்னர் பொதுச்சேவைகளில் உயர் பதவிகளுக்கு நியமிக்கப்படுவதற்காக 79 தமிழர்கள் உள்வாங்கப்படுவார்கள்.

இவர்கள் ஒவ்வொருவரும் ஆகக்குறைந்தது 10 ஆண்டுகளுக்கு வடக்குக் கிழக்கில் பணிசெய்வார்கள்.

1980ம் ஆண்டு தான் அரச சேவையில் இணைந்தபோது கூட இதற்குத் தமிழர்கள் உள்வாங்கப்படும் வீதம் குறைவாகவே இருந்ததாகவும் 1980ம் ஆண்டு காலப்பகுதியில் நான்கு அல்லது ஐந்து தமிழர்கள் மாத்திரமே உள்வாங்கப்பட்டதாகவும் அவர் கூறுகிறார்.

சிறிலங்கா சுதந்திரமடைந்த வேளையிலும் அதற்கு முன்னான காலப்பகுதியில் சிறிலங்காவினது அரச சேவைகளில் தமிழர்களே பெரும்பான்மையாக இருந்தார்கள்.

19ம் நூற்றாண்டில் சிறிலங்காவினது வடக்குப் பகுதியில் கிறீஸ்தவக் கல்லூரிகளில் அதிகமிருந்ததும் இலங்கைத் தீவில் வாழ்ந்த மக்களை பிரித்தானிய ஆட்சியாளர்கள் பிரித்தாழும் தந்திரத்தினைக் கையாண்டதும்தான் இதுபோல அரச சேவைகளில் தமிழர்கள் மேலோங்கிக் காணப்பட்டமைக்கான காரணம்.

பொதுச்சேவைகளில் மாத்திரமில்லாது வேறுபல துறைகளிலும் பறங்கியர்களும் தமிழர்களும் ஆதிக்கம் செலுத்தினர்.

சிறிலங்கா கொலணித்துவ ஆட்சிக்கு உட்பட்டிருந்த காலப்பகுதியில் சிறிலங்காவினது ஆயுதப் படையில் 40 சதவீதமான பறங்கியர்களும் 20 சதவீதமான தமிழர்களும் இருந்தமை இங்கு குறிப்பிடத்தக்கது.

சுதந்திர இலங்கையின் முதலாவது இராணுவத் தளபதியாக அன்ரன் முத்துக்குமார் என்ற தமிழரே இருந்தார். சுதந்திர இலங்கையின் இரண்டாவது கடற்படைத் தளபதியாக இருந்த ரஞ்சன் கதிர்காமர் சிறிலங்காவின் வரலாற்றில் அதிக காலம் பதவியில் இருந்த கடற்படைத்தளபதி ஆவார். இவர் முன்னாள் வெளிவிவகார அமைச்சர் லக்ஸ்மன் கதிர்காமரின் சகோதரர்.

எவ்வாறிருப்பினும், சிறிலங்கா சுதந்திரமடைந்ததைத் தொடர்ந்து நிலைமைகளில் படிப்படியான மாற்றம் ஏற்பட்டது.

சிங்களவர்களின் தலைமையிலான தொடர்ந்துவந்த அரசுகள் தமிழர்களை இன ரீதியாக ஓரங்கட்டும் முனைப்புக்களில் ஈடுபட்டன. சிறிலங்கா சுதந்திரமடைந்ததைத் தொடர்ந்து நாட்டினது பொதுநிர்வாக சேவைகளில் தமிழர்களது விகிதம் வெகுவாகக் வீழ்ச்சிகாணத் தொடங்கியது.

1970-77ம் ஆண்டு காலப்பகுதியில் சிறிலங்காவினது நிர்வாக சேவையில் 11.1 வீதமான தமிழர்கள் பொறுப்புநிலையில் இருந்தார்கள். ஆனால் 1978-81க்கும் இடைப்பட்ட காலப்பகுதியில் இந்தத் தொகை 5.7 வீதமாக வீழ்ச்சிகண்டது.

1948ம் ஆண்டு சிறிலங்காவினது தமிழர்களினது மொத்த சனத்தொகையில் 24.7 சதவீதமான தமிழர்கள் அரச சேவைகளில் இருந்தார்கள். ஆனால் 1985ம் ஆண்டு இந்தத் தொகை 12.6 சதவீதமாக வீழ்ச்சி கண்டிருந்தது.

பல்கலைக்கழக அனுமதியில் தரப்படுத்தல் மேற்கொள்ளப்பட்டதும் வெட்டுப்புள்ளி முறைமை கொண்டுவரப்பட்டதும் தமிழர்களது கல்விக்கு, குறிப்பாக யாழ்ப்பாணத் தமிழர்களது கல்வியினைப் பெரிதும் பாதித்தது.

பல்கலைக்கழக அனுமதி வழங்கும்போது இதுபோன்ற புதிய முறை கைக்கொள்ளப்பட்டமையினால் அதிக புள்ளிகளைப் பெற்ற தமிழ் மாணவர்களுக்குப் பல்கலைக்கழக வாய்ப்பு மறுக்கப்பட்ட அதேநேரம் குறைந்த புள்ளிகளைப் பெற்ற கிராமப்புறச் சிங்களவர்கள் பலரும் பல்கலைக்கழகம் சென்றனர்.

சிறிலங்காவின் வடக்கு மற்றும் கிழக்குப் பகுதிகளில் பல பத்தாண்டுகளாகத் தொடர்ந்த போரினால் இந்தப் பகுதிகளில் கல்விக்கான வசதிவாய்ப்புக்கள் பெரிதும் பாதிக்கப்பட்ட நிலையிலேயே இருக்கிறது.

வடக்குக் கிழக்குப் பகுதிகளைக் சேர்ந்த தமிழர் மாணவர்கள் இடப்பெயர்வுக்கு மேல் இடப்பெயர்வினை சந்தித்த அதேநேரம் உயர் பாதுகாப்பு வலயங்கள் என்ற போர்வையில் அவர்களது பாடசாலை வளாகங்கள் அபகரிக்கப்பட்டமையினால் பாடசாலைகள் தற்காலிக கூடாரங்களில் இயங்கும் நிலை தோன்றியது.

போர் முடிவுக்குவந்த இந்த நிலையிலும் வடக்குக் கிழக்கினது கல்வியினை சீர்செய்யும் வகையில் அரசாங்கம் உருப்படியான நடவடிக்கைகள் எதனையும் மேற்கொள்ளவில்லை என கல்விமானும் பத்திரிகையாளனுமான சகாதேவராசா கூறுகிறார்.

உதாரணமாக கிழக்கு மாகாணத்தினைப் பொறுத்தவரையில் 147 துணைக் கல்விப் பணிப்பாளர்கள் கடந்த 10 ஆண்டுகள் பணியாற்றிய போதிலும் அவர்கள் இன்னமும் தற்காலிகமாகவே பணிசெய்து வருகிறார்கள்.

ஆனால் நாட்டின் ஏனைய பாகங்களில் இதுபோல ஒருவர் துணைக் கல்விப் பணிப்பாளராக இரண்டு ஆண்டுகளுக்குத் தற்காலிகமாகப் பணிசெய்தால் அவர் நிரந்தரமாக்கப்பட்டு விடுகிறார். இதுவும் ஒருவகைப் பாகுபாடுதான் என்கிறார் அவர்.

"கொடிய போரிலிருந்து தற்போதுதான் மெல்ல மீண்டுவரும் இந்தப் பிராந்தியத்தில் கல்வியின் தன்மை மேம்படாமல் இருப்பதற்கு இதுவும் ஒரு காரணம்" என அவர் தொடர்ந்தார்.

அண்மையில் அம்பாறை மாவட்டச் செயலகத்திற்கு நியமனங்கள் வழங்கப்பட்டபோது தமிழர்கள் எவரும் இடம்பெறாதமை தொடர்பாக தாங்கள் கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவிற்கு அம்பாறை மாவட்ட மத அமைப்புக்களில் கூட்டமைப்பு முறையிடப்போவதாக அம்பாறை மாவட்டத்திலுள்ள உதவி அரசாங்க அதிபரும் குறித்த இந்த அமைப்பின் ஊடக இணைப்பாளருமான சகாதேசராசா கூறுகிறார்.

எதிர்வரும் தை மாதம் கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு கிழக்கில் தனது அமர்வுகளை நடாத்தவுள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கது.
Share this article :

கருத்துரையிடுக

 
Company Info | Contact Us | Privacy policy | Term of use | Widget | Advertise with Us | Site map
Copyright © 2011. welvom . All Rights Reserved.
Design Template by panjz-online | Support by creating website | Powered by Blogger