News Update :
Home » , » வாழ்வும் வரலாறும் - சமகால ஆய்வு

வாழ்வும் வரலாறும் - சமகால ஆய்வு

Penulis : Antony on வெள்ளி, 31 டிசம்பர், 2010 | முற்பகல் 9:37

வரலாற்றை நிராகரிக்கவோ அழிக்கவோ முடியாது. அதைச் செய்ய நினைப்பது தவறு. புலிகள் ஆட்சி வடக்கு கிழக்கில் நிலவியது. அதை மறைக்க முடியாது. ஏன் மறைக்க வேண்டும். மறைப்பதால் என்ன பயன். இந்த யோசனை அரசுக்கு வரவில்லை. புலிகளின் தடயங்களை இல்லாதொழிப்பதில் அரசு முனைப்புக் காட்டுகிறது.
சிங்கள் அரசின் காட்டுமிராண்டித் தனம் மாவீரர்களின் துயிலும் இல்ல அழிப்பில் மையம் கொண்டுள்ளது. 27.11.1982 தொடக்கம் 31.06.2009 வரை 18 மாவீரர் இல்லங்களைப் புலிகள் அமைத்துள்ளனர். யாழ்ப்பாணத்தை சிங்கள இராணுவம் 1995ல் கைப்பற்றிய பின் துயிலும் இல்ல அழிப்பு தொடங்கிவிட்டது. இன்று முற்றுப்பெற்று விட்டது.

இதற்கு ஒரு சில சிங்கள அதிகாரிகள் ஆட்சேபம் தெரிவித்தனர். பெல்ஜியம் போன்ற மேற்கு ஐரோப்பிய நாடுகளுக்கு இலங்கைத் தூதுவராகப் பதவி வகித்த கே.கொடகே என்பவர் பத்திரிகை வாயிலாகத் துயிலும் இல்ல அழிப்பைக் கண்டித்தார்.

இரண்டாம் உலகப் போர் காலத்தில் பெல்ஜியம் நாட்டை ஆக்கிரமித்த ஜேர்மன் படையினரின் கல்லறைகளைப் பெல்ஜியன் அரசு தனது செலவில் பராமரித்து வரும் முன்னுதாரணத்தை அவர் எடுத்துக்காட்டினர். இது செவிடன் காதில் ஊதிய சங்குபோல் சிங்களப் பேரினவாதிகளின் காதில் ஒலித்தது.

துட்டகெமுனுவால் வஞ்சகப் போரில் கொல்லப்பட்ட எல்லாளனை இராஜ மரியாதையுடன் அடக்கம் செய்து அந்த இடத்திற்கு மரியாதை செய்யும்படி துட்டகெமுனு கட்டளை இட்டதாக மகாவம்சம் பெருமையாகக் கூறுகிறது. அதே சிங்களவர்கள் துயிலும் இல்லங்களை அழித்ததை விளங்கிக் கொள்ள முடியவில்லை.

பிரிட்டிஷ் ஆட்சியாளர்கள் 19ம் நூற்றாண்டு முற்பகுதியில் கண்டி இராச்சியத்தைக் கைப்பற்றியபின் கண்டிச் சிங்களத் தலைவர்களைச் சிறைப்பிடித்து கொழும்பு கொண்டு சென்றதாகப் பிற்கால வரலாறுகள் தெரிவிக்கின்றன.

அப்படிக் கொண்டு செல்லப்பட்ட ஒருவர் எல்லாளனின் சமாதி என்று சொல்லப்பட்ட இடத்திற்கு முன்னால் தான் சென்ற பல்லக்கில் இருந்து இறங்கிக் கால் நடையாகச் சென்றதாக வரலாற்று நூல்கள் தெரிவிக்கின்றன. எல்லாளனின் சமாதிக்கு முன்னால் இசைக்கருவிகள் ஒலிப்பதில்லை என்றும் அப்பகுதியால் செல்வோர் தலை வணங்குவார்கள் என்றும் அதே நூல்கள் தெரிவிக்கின்றன.

மிகவும் வியப்பூட்டும் தகவல் என்னவென்றால் பிரிட்டிஷ் ஆட்சியில் எல்லாளன் சமாதி ஆய்வுக்கு உட்படுத்தப்பட்ட போது அது டாகொபா எனப்படும் புத்தமதக் கட்டிடம் என்று அறியப்பட்டது. இதன் மூலம் எல்லாளனுக்குச் சமாதி எழுதப்படவில்லை என்பது புலனாகின்றது.

தமிழர்களுடைய நினைவுச் சின்னங்களை அழிப்பது சிங்கள தேசம் தன்னைத் தான் தரம் தாழ்த்தும் செயலாகும். 2002ம் வருடத்திற்குப்பின் புலிகள் வன்னியில் அமைத்த நிர்வாகக் கட்டமைப்புக்கள் அனைத்தும் இன்று அழிக்கப்பட்டுவிட்டன.

1995-96ல் தொடங்கிய யாழ் இடப்பெயர்வுக்குப் பிறகு புலிகள் தமது சிவில் நிர்வாகக் கட்டமைப்பு விரிவாக்கத்தை வன்னியிலும் கிழக்கு மாகாணத்திலும் தொடங்கினர். 2002 ல் தமக்குக் கிடைத்த சர்வதேச அங்கீகாரத்தின் பயனாய் கட்டமைப்பு விரிவாக்கத்தை மென்மேலும் பெருக்கினர்.

புலிகள் அமைத்த சிவில் நிர்வாக அடித்தளமான தமிழீழ வைப்பகம் (BANK OF TAMIL EELAM) யாழ் நகரின் கன்னாதிட்டி என்ற பகுதியில் 1994 மே மாதம் 23ம் நாள் தொடங்கப்பட்டது. புலிகளின் நிதிப்பொறுப்பாளரான பிரிகேடியர் தமிழேந்தி (சபாரத்தினம்.செல்லத்துரை) தேசியத் தலைவர் பிரபாகரன் அவர்களின் அனுசரணையோடு வைப்பகத்தைத் திறந்து வைத்தார்.

வன்னியின் பொருளாதார வளர்ச்சிக்கு தமிழீழ வைப்பகம் ஆற்றிய பங்களிப்பு பற்றி முழுமையான ஆய்வுரை எழுத வேண்டியது மிகவும் அவசியம். நவீன வங்கிச் சேவைகளை அடியொற்றித் தமிழ் மக்களின் விவசாய, வர்த்தக, ஏற்றுமதி இறக்குமதித் தேவைகளுக்குப் பொருத்தமான நடவடிக்கைகளைத் தமிழீழ வைப்பகம் மேற்கொண்டது.

இலங்கை வங்கி (BANK OF CEYLON) உலக வங்கி (WORLD BANK) போன்றவற்றில் பணியாற்றி இளைப்பாறிய தமிழ் அதிகாரிகள் தமிழீழ வைப்பக இயக்குநர் சபையில் இடம் பிடித்தனர். இதனால் உலக தரத்திற்கு ஒப்பான சேவையை அதனால் வழங்க முடிந்தது.

கொழும்பில் தலைமைச் செயலகங்களைக் கொண்ட இலங்கை வங்கி, வர்த்தக வங்கி (COMMERCIAL BANK) போன்றவை தமிழீழ வைப்பகத்துடன் தொடர்புகளை ஏற்படுத்தின. தமிழீழ வைப்பகத்துடன் நிதிக் கொடுக்கல் வாங்கல் தொடர்புகளை மேற்கொள்வதை அனுமதிப்பதாக இலங்கை வங்கி ஒரு உள்ளகச் சுற்றறிக்கையை (IN HOUSE CIRCULAR) வெளியிட்டது.

இலங்கையின் பாராளுமன்றதில் இந்த சுற்றறிக்கை பெரும் புரளியைக் கிளப்பியது. தினேஸ் குணவர்த்தனா என்ற பாரளுமன்ற உறுப்பினர் சுற்றறிக்கையைச் சாட்டாக வைத்து தமிழர்களுக்கும் புலிகளுக்கும் எதிரான படுமோசமான உரையை நிகழ்த்தினார். அதற்குப் பின்பும் மேற்கூறிய வங்கிகள் தமிழீழ வைப்பகத் தொடர்பைத் துண்டிக்காமல் தொடர்ந்தன.

தமிழீழ வைப்பகத்தின் வளர்ச்சியின் அங்கமாக பளை, விசுவமடு, புதுக்குடியிருப்பு, ஆகிய பெருநகரங்களில் கிளைகள் திறக்கப்பட்டுக் கருமபீடங்கள் அமைக்கப்பட்டன. கிளிநொச்சியில் வைப்பகத்திற்கு சொந்தமான நிலத்தில் மாடிக்கட்டிடங்கள் அமைக்கப்பட்டு முழுவதும் கணனி மயப்படுத்தப்பட்ட வைப்பகத் தலைமைச் செயலகம் இயங்கியது.

வைப்பகத்திற்குச் சொந்மான நிதி ஆதாரங்களை ஆக்கிரமிப்புப் படைகள் கைப்பற்றியுள்ளன. பெருந்தொகைப் பணத்தைச் சிங்களப் படைகள் கையகப்படுத்தியுள்ளன. நிதி செயற்பாட்டுகளுக்கு ஆதாரமாக வைப்பில் இருந்த 200 கிராம் தங்கத்தை படையினர் எடுத்துச் சென்றுள்ளனர். அதற்கு என்ன நடந்ததென்று இதுவரை தெரியவில்லை.

புலிகளின் ஆட்சியில் மாற்று அரசியல் கட்சிகளுக்கு இடமளிக்கப்படவில்லை என்ற குற்றச்சாட்டு விமர்சகர்களால் சுமத்தப்படுகிறது உலக வரலாற்றில் புரிந்து கொண்டவர்கள் இந்த நியாயமற்ற வாதத்தை முன்வைக்க மாட்டார்கள். சீனா, ரஷ்யா, சிங்கப்பூர் ஆகியவற்றில் மாற்றுக் கட்சிகள் கிடையாது.

தேசியத் தலைவர் அவர்கள் அரசியல் பற்றிப் பின்வருமாறு குறிப்பிடுகிறார். மக்களின் துயரங்களில் பங்குகொண்டு அவர்களுடைய கஷ்டங்களைப் போக்குவதற்கு திட்டமிட்டு செயலாற்றுவது தான் உண்மையான அரசியல் வேலை.

அரசியல் சாக்கடையின் நாற்றத்தை சுவாசிக்க வேண்டுமாயின் தழிழகம் செல்ல வேண்டும. ஏன் புதுடில்லியில் ஏதோ புனிதம் காணப்படுகிறதா. நிதி ஊழல்களும் பதவி கவிழ்ப்புக்களும் பாலியல் முறைகேடுகளும்தான் அரசியலாக இடம்பெறுகின்றன. புலிகள் ஆட்சியில் இவை இடம்பெறவில்லை.

போராட்ட வாழ்வைக் கைவிட்டபடி மைய நீரோட்ட அரசியலுக்கு வந்து விட்டதாகப் தம்பட்டம் அடிக்கும் டக்ளஸ் தேவானந்தாவும், கருணாவும் நடத்திய அரசியல் சுயவடிவத்தை அண்மையில் அம்பலமாக்கிய அமெரிக்க இராஜதந்திரத்தின் தகவல் பரிமாற்றக் குறிப்புக்கள் வெளிப்படுத்துகின்றன.

இரு ஆயுதக் குழுக்களுக்குள் தலைமை தாங்கிய மேற்கூறிய இனத் துரோகிகள் இருவரும் சிங்கள அரசு வழங்கிய ஆணைக்கு அமைவாக வடக்கு கிழக்கில் படுகொலைகள், கப்பம் வசூலித்தல், ஆட்கடத்தல், சிறுவர்களை படையில் சேர்த்தல், தமிழ்ப் பெண்களைப் படையினரின் பாலியல் தேவைக்கு வழங்குதல் போன்ற ஏராளமான வன்செயல்களைப் புரிந்தார்கள். என்று மேற்கூறிய குறிப்புக்கள் தெரிவிக்கின்றன.

பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ச இருவர் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டாம் என்று இராணுவத்திற்கும் பொலிஸாருக்கும் கட்டளை பிறப்பித்தார். 2004ம் ஆண்டிற்குப் பிறகு வடக்கு கிழக்கில் பெருமளவு படுகொலைகள் நடந்தன. 2009 ல் போர் முடியும் வரை இது தொடர்ந்தது.

டக்ளஸ் தேவானந்தாவின் பயங்கரவாத ஆட்சியில் யாழில் தினமும் 1-6 பேர் வரை சுட்டுப் படுகொலை செய்யப்பட்டனர். இது எப்படி நடத்தப்பட்டது என்பதை முன்னால் பாராளுமன்ற உறுப்பினர் மகேஸ்வரன் பாராளுமன்றத்தில் பகிரங்கப்படுத்தினார். இதற்காக அவர் சுட்டுக்கொல்லப்பட்டார்.

யார் யார் சுட்டுக்கொல்லப்பட வேண்டும் என்பதை டக்ளஸ் தேவானந்தா தீர்மானித்து பட்டியல் தயாரிப்பாராம். பின்பு தனது கொழும்புச் செயலகத்திற்கு இந்தப் பட்டியலை அனுப்பி கொழும்பில் வாழும் கொலையாளிகளை இராணுவ விமானத்தில் வரவழைப்பார். அவர்கள் இராணுவ முகாம்களில் தங்கி படுகொலைகளை நடத்திய பின் கொழும்புக்குச் சென்று விடுவார்கள்.

கொலையாளிகளின் பெயர் விபரங்களைக் வெளியிடப்போவதாகப் பாராளுமன்றத்தில் விரட்டிய மகேஸ்வரனை சுடும்படி டக்ளஸ் உத்தரவிட்டார். இதுதானா சர்வதேச சமூகம் எதிர்ப்பார்க்கும் மாற்றுக் கட்சி அரசியலா? புலிகள் சகோதர யுத்தம் புரிந்தார் என்று வாய்க்கு வந்தபடி புலம்பும் கருணாநிதி என்ன சொல்லப் போகிறார்?

படையினரின் பாலியல் தேவைக்குப் தமிழ்ப் பெண்களைப் பிடித்துக் கொடுத்தார்கள் என்ற நேரடிக் குற்றச்சாட்டை அமெரிக்க தூதரகம் டக்ளஸ், கருணா ஆகியோர் மீது திட்ட வட்டமாக சுமத்துகிறது இப்போது அமைச்சர் பதவி வகிக்கும் இருவரையும் கைவிட இலங்கை அரசு தயாராகி விட்டது.

தந்திரசாலியான இருவரும் தமது இருப்பை உறுதி செய்வதற்கு பாதுகாப்புச் செயலர் கோத்தபாயா மீது பலியைச் சுமத்த துணிந்து விட்டனர். அவருடைய பணிப்புரைக்கு அமைவாக நாம் செயற்பட்டோம். என்று வாதிட தயாராகிவிட்டனர். இதனால் இவர்களைப் பாதுகாக்க வேண்டிய நிர்ப்பந்தம் அரசுக்கு இருக்கிறது.

கோத்தபாயாவுடன் நெடுங்காலமாக இருக்கும் இந்திய நடுவண் அரசு அவரை சர்வதேச குற்றவியல் விசாரணைகளில் இருந்து விலக்குவதற்காக பகீரதப் பிரயத்தனம் மேற்கொள்கிறது. அவரைப் பயன்படுத்திப் பல அனுகூலங்களைப் பெற இந்தியா திட்டமிடுகிறது.

பலாலி விமான நிலையம், காங்கேசன்துறை துறைமுகம் ஆகியவற்றை விரிவாக புனரமைத்தல் என்ற திட்டத்தின் கீழ் இந்திய அரசு நிரந்தரமாக வடக்கில் காலூன்ற எத்தனிக்கின்றது. இதற்கான ஒப்பந்தங்கள் கையொப்பம் இடப்பட்டதாக தகவல்கள் கசிந்துள்ளன.

குளத்தைக் கலக்கிப் பிராந்தின் கையில் கொடுப்பது போல் இலங்கையின் பிரச்சினை திசைமாறி செல்கிறது. இந்த வரலாற்று சுழற்சியில் ஈழத்தமிழர் வாழ்வும் தாழ்வும் மாட்டிக் கொண்டுள்ளன. இந்தியாவின் தேசியப் பாதுகாப்புச் செயலர் கோத்தபாயாவை புதுடில்லிக்கு வருமாறு அழைப்பு விடுத்திருக்கிறார்.

அப்போது பலாலி விமான நிலையம், காங்கேசன்துறை துறைமுகம் பற்றிய ஆவணங்கள் உத்தியோகபூர்வமாகப் கைச்சாத்திடப்படலாம் என்று அறியப்படுகிறது. இராமேஸ்வரம் மீனவர்கள் மீதான தாக்குதல்கள் மீண்டும் தொடங்கிவிட்டன. ஆனால் இந்திய அரசும் இந்திய கடற்படையும் மெத்தனப் போக்கை கடைப்பிடிக்கின்றன.

மத்திய அரசின் அங்கமான கருணாநிதி அரசும் தமிழக மீனவர்களின் பாதுகாப்பில் அக்கறை காட்டுவதில்லை அவர்கள் நடத்தும் அரசியல் வரலாறு தமிழர்களின் எதிர்காலம் பற்றிய சிந்தனைக்கு இடமளிப்பதில்லை.

இரத்தத்தால் எழுதப்படும் எமது இனத்தின் விடுதலை வரலாறு மனித குலத்தின் விடுதலை எழுச்சிக்கு ஒரு உன்னத எடுத்துக்காட்டாக விளங்கும். காலத்திற்கு காலம் தமிழர் மத்தியில் தோன்றும் புல்லுருவிகளால் தமிழர் வரலாற்றை திசை திருப்பி விட முடியாது. சுதந்திரம் வேண்டிப் போராடும் இனத்தால் மாத்திரமே காத்திரமான வரலாற்றைப் படைக்க முடியும்.
Share this article :

கருத்துரையிடுக

 
Company Info | Contact Us | Privacy policy | Term of use | Widget | Advertise with Us | Site map
Copyright © 2011. welvom . All Rights Reserved.
Design Template by panjz-online | Support by creating website | Powered by Blogger