
யாழ்ப்பாணம், நவாலி பிரதேசத்தின் வழுக்கையாற்று வயல்வெளியில் பெண் ஒருவரை சேற்றுக்குள் தலையை அமிழ்த்தியும் தொண்டையைத் திருகியும், கடித்தும் நகைகளைக் கொள்ளையிட திருடன் ஒருவன் எடுத்த முயற்சி அயலில் நின்ற ஒருவரின் செயற்பாட்டினால் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளது.
அயலில் நின்றவர் கூக்குரலிட்டதனால் வயல்வெளியில் நின்றவர்கள் ஒன்றுதிரண்டு கொலை முயற்சியை தடுத்து நிறுத்தியதுடன் சம்பவத்தில் ஈடுபட்ட நபரையும் மடக்கிப்பிடித்து நையப்புடைத்ததுடன் பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர்.
இந்த சம்பவம் நேற்று மாலை 5.30 மணியளவில் நவாலி தெற் கிலுள்ள வழுக்கையாற்று ஆயம்பிட்டி இந்து மயான வயல் வெளியில் இடம்பெற்றுள்ளது.
இந்தச் சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது:
கால்நடைகளுக்கு புல்வெட்டுவதற்காக தினமும் மாலை வேளைகளில் தனியாகச் சென்று வருபவர் திருமதி சந்திரகுமார் செல்வராணி (வயது 50).
இவர் நேற்று மாலை 5.30 மணியளவில் ஆயம்பிட்டி இந்து மயானத்திற்கு அருகில் புல் அறுக்கும் போது திடீரெனப் பாய்ந்த திருடன், பிரஸ்தாப பெண்மணியின் தொண்டையைத் திருகி கடித்து வயல் வெளியில் உள்ள சேற்று நீரில் தலையை அமிழ்த்திக் கொலை செய்ய முயற்சித்தான்.
இவ்வேளையில், அலறல் சத்தமிட்ட பெண்ணின் குரலைக் கேட்ட ஒருவர் சம்பந்தப்பட்டவனை மடக்கிப்பிடிக்க முயல்கையில் அயலில் நின்றவர்களும் உதவிக்கு வரவே திருடன் வகையாக மாட்டிக்கொண்டான்.
சம்பந்தப்பட்ட திருடன் கொக்குவில் கிழக்கு தலையாழி ஒழுங்கையைச் சேர்ந்த குலதீஷ்வரன் தனுசன் (வயது 20) என அவரது அடையாள அட்டையில் இருந்து தெரியவந்துள்ளது.
சிறுகாயங்களுக்கு உள்ளாகிய நான்கு பிள்ளைகளின் தாயாராகிய திருமதி செல்வராணி சந்திரகுமார் தொண்டையிலும், கையிலும், காதிலும் சிறுகாயங்களுக்குள்ளாகியுள்ளதுடன் மனப்பீதிக்கும் பாதிப்புக்கும் உள்ளாகியுள்ளார்.
சம்பந்தப்பட்ட இளைஞனை நவாலிப் பிதேசத்தில் நிலை கொண்டுள்ள படையினரும் மானிப்பாய் பொலிஸாரும் விசாரணைக்காக அழைத்துச் சென்றுள்ளனர்.
இதேவேளை, நவாலியில் அண்மையில் திருட்டு முயற்சியில் ஈடுபட்ட இளைஞர் ஒருவர் பொதுமக்களால் மடக்கிப்பிடிக்கப்பட்டு, தாக்கப்பட்டு பின்னர் இராணுவத்தினரிடம் கையளிக்கப்பட்டதும் தெரிந்ததே.
கருத்துரையிடுக