இலங்கைத்தீவிலுள்ள ”சிலோன்” அல்லது ”இலங்கை” என ஆரம்பிக்கும் அனைத்து பொதுநிறுவனங்களின் பெயர்களும் ”சிறிலங்கா” என மாற்றப்படவுள்ளதாக சிறிலங்கா அரசின் தகவற்றுறை திணைக்களம் தெரிவித்துள்ளது.தற்போது அந்நாட்டில் இலங்கை வங்கி, இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம், இலங்கை மின்சாரசபை மற்றும் இலங்கை சுற்றுலாச்சபை என்றே பதிவுசெய்யப்பட்டுள்ளன.
பண்டைக்காலத்தில் கிரேக்கர்களால் தப்ரோபேன் என்றும் அரபுக்களால் செறண்டிப் எனவும் அழைக்கப்பட்ட இலங்கைத்தீவு, 1505 ஆம் ஆண்டு போர்த்துக்கேயர்கள் அத்தீவுக்கு வந்தபோது ”சிலோ” என பெயரிட்டனர். இதனை ஆங்கிலத்தில் ”சிலோன்” என எழுதப்பட்டது.
பிரித்தானியாவின் ஆதிக்கத்துக்குள் இத்தீவு முழுவதும் வந்தபோது, தீவு முழுவதையும் ஒரே ஆளுகைக்குள் கொண்டுவந்த பிரித்தானியர் ”சிலோன்” என்ற ஒரு ஆளுகைபிரதேசமாக நிர்வகித்தனர்.
சிங்களத்தில் சிறிலங்கா எனவும் தமிழில் இலங்கை எனவும் அந்நாட்டை குறிக்கும் வழக்கு இருந்துவருகின்றபோதும், தமிழர்களை பொறுத்தவரை இலங்கை என்பது இரண்டு தேசங்களின் ஒன்றியமாகவும் சிறிலங்கா என்பது சிங்கள தேசம் எனவும் கொள்ளப்பட்டுவருகின்றது.
1972 ஆம் ஆண்டு யாப்பின்படி சிலோன் என்பதிலிருந்து சிறிலங்கா என மாற்றம் செய்யப்பட்டது. அதனை தொடர்ந்து சிறிலங்கா என்பது அன்னியப்பட்ட பெயராக தமிழ் மக்களால் பார்க்கப்பட்டது.
இதன் தொடர்ச்சியாக தமிழ் முஸ்லிம் அரசியல் கட்சிகளும் தமது பெயரில் அதுவரை இருந்த இலங்கை என்பதை சிறிலங்கா என மாற்றுவதா என்ற குழப்பத்தில் இருந்துவந்தனர்.
இலங்கை முஸ்லிம் காங்கிரஸ் அதற்கு முன்னோடியாக தனது கட்சியின் பெயரை சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் என மாற்றம் செய்தது.
தற்போது தமிழ் கட்சிகளாகவுள்ள அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் மற்றும் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் ஆகியவை இம்மாற்றத்திற்கு எவ்வாறான எதிர்வினையாற்றப்போகின்றார்கள் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும் என்கின்றனர் நோக்கர்கள்.
கடந்த வருடம் தமிழ் கட்சிகளின் பெயர்களில் தமிழ் என்ற வார்த்தை பிரயோகம் பயன்படுத்தப்படுவதை தடுக்கும் சட்டத்திருத்தம் கொண்டுவருவது பற்றி யோசனை செய்யப்பட்டது. ஆனால் கடும் எதிர்ப்பினார் அம்முடிவு கிடப்பினில் போடப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.
home



Home
கருத்துரையிடுக