வடக்கு,கிழக்கு மக்களின் பிரச்சினைக்கு சிறிலங்காவுக்குள்ளேயே தீர்வு காணப்பட வேண்டும் என்று இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் சிவசங்கர்மேனன் தெரிவித்துள்ளார். புதுடெல்லிக்குச் சென்றிருந்த சிறிலங்கா ஊடக ஆசிரியர்களை பாதுகாப்பு அமைச்சில் சந்தித்த போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
“ சிறிலங்காவின் உள்நாட்டு விவகாரங்களில் இந்தியா தலையிடமாட்டாது.
தமது மக்களின் விருப்பங்களை அறிந்து நல்லதொரு தீர்வை முடிவு செய்ய வேண்டியது சிறிலங்கா தான்.
இந்திய- சிறிலங்கா உறவுகளில் பாரிய தாக்கத்தை ஏற்படுத்தும் சக்தியாக ஊடகங்கள் உள்ளன.
எம்மைப் பொறுத்தவரையில் சிறிலங்கா ஒரு முக்கியமான பங்காளி நாடு.
இந்தியாவுக்கு மிகவும் அருகில் உள்ள சிறிலங்காவின் கொழும்புத் துறைமுகம் எமக்கு மிகவும் முக்கியமான ஒன்று.
எமது பாதுகாப்பும் அதனுடன் இணைந்துள்ளது.
அத்துடன் இனத்துவ அடிப்படையில் மட்டுமன்றி மத மற்றும் சமூக ரீதியாகவும் சிறிலங்காவுடன் இந்தியா பிணைந்துள்ளது.
தற்போதைய உலக ஒழுங்கின்படி, யாருமே தனித்து இயங்க முடியாது.
சேர்ந்து இயங்காமல் எம்மால் எதையும் செய்ய முடியாது.
இந்தியாவும் சிறிலங்காவும் அண்டை நாடுகள்.
சிக்கலான விவகாரங்கள் இருந்தாலும் இருதரப்பு உறவுகள் மிகவும் நெருக்கமாகவே உள்ளன. தீவிரமானதும் சிக்கலானதுமான பிரச்சினைகள் விடயத்தில் எமக்கிடையே இணக்கப்பாட்டைக் கொண்டுள்ளோம்.
இது இலகுவான காரியமல்ல.
ஆனால் ஒருவரின் விருப்பத்துக்கு மற்றவர் மதிப்பளிப்பதன் மூலம் வெற்றிகரமாக அதற்கு முகம் கொடுக்கிறோம்.
வடக்கு, கிழக்கு மக்களின் பிரச்சினை தொடர்பாக சிறிலங்காவுக்கு உதவ நாம் தயாராகவே உள்ளோம்.
ஆனால் முடிவுகளை சிறிலங்காவே எடுக்க வேண்டும்.
சிறிலங்காவின் உள்நாட்டு விவகாரங்களில் தலையிடாத வகையில் எடுக்கக் கூடிய முடிவுகளுக்கு இந்தியா உதவத் தயாராக உள்ளது.
எமது பிரச்சினைகளை நாமே கையாள வேண்டும்.
அரசியல் தீர்வு 13வது திருத்தத்தின்படி அமைய வேண்டுமா இல்லையா என்பதை சிறிலங்காவே முடிவு செய்ய வேண்டும்.
எந்தத் தீர்வையும் இந்தியா திணிக்கமாட்டாது.
இந்தமாதிரி அல்லது அந்த மாதிரியான தீர்வை நடைமுறைப்படுத்துங்கள் என்று நாம் சிறிலங்காவுக்குப் போய்ச் சொல்லமாட்டோம்.
சிறிலங்கா தமது பிரச்சினைகளுக்கு உள்நாட்டுக்குளேயே தீர்வு காண வேண்டும் என்பதே எமது நிலைப்பாடு.
ஒருவேளை சிறிலங்கா உதவி கோரினால் அதை மனமுவந்து செய்வதற்கு இந்தியா முன்வரும்.
சிறிலங்காவுக்கு பொருத்தமான தீர்வை இந்தியா வழங்க வேண்டும் என்று சிலர் சொல்கிறார்கள்.
இன்னும் சிலரோ இந்தியா தலையிடக் கூடாது. அவர்கள் தமது பிரச்சினைகளைத் தாமே பார்த்துக் கொள்ளட்டும் என்கிறார்கள்.
13வது அரசியலமைப்புத் திருத்தத்தை நடைமுறைப்படுத்துமாறு இந்தியப் பிரதமர் பரிந்து பேசவில்லை.
சிறிலங்காவுக்கு அருகே உள்ள நட்பு நாடு இந்தியா.
இந்தவகையில் இந்தியா தனது கருத்தைத் சொல்லாம்.
ஆனால் யாருக்கும் அழுத்தம் கொடுக்க முடியாது.
இதை நாம் செய்வதற்கு அது ஒன்றும் இந்தியர்களுக்கான தீர்வு அல்ல.
அது சிறிலங்காவினுடையது. சிறிலங்காவின் பிரச்சினைகளுக்கான தீர்வு சிறிலங்காவைச் சேர்ந்தவர்களுக்கே.
இறுதியான முடிவை சிறிலங்காவே எடுக்க வேண்டும்.
அதிலும் முக்கியமாக ஐக்கிய இலங்கைக்கு உள்ளிருந்தே தீர்வு வரவேண்டும்.
தீவிரவாதத்தை இந்தியா எப்போதும் எதிர்த்தே வந்துள்ளது.
கடந்த 30 ஆண்டுகளில் இந்தியாவின் எந்தவொரு பிரதான அரசியல் கட்சியுமே விடுதலைப் புலிகளை ஆதரிக்கவில்லை.
இந்தியாவில் மிகவும் வேகமாக வளர்ந்து வரும் மாநிலங்களில் ஒன்று தமிழ்நாடு.
சிறிலங்காவின் வடமாகாணத்தில் வாழும் மக்கள் குறித்து தமிழ்நாடு உணர்வுகளைக் கொண்டுள்ளது.
அதேவேளை, அவர்கள் தவறான புரிதல்களையும் கொண்டுள்ளனர்.
தீவிரவாத நடவடிக்கைகளுக்கு எமது மண்ணைத் தளமாகப் பயன்படுத்த இந்தியா ஒருபோதும் அனுமதிக்காது.
இதில் இநதியா உறுதியாக உள்ளது.
இங்கு தமிழ்நாடு அல்லது புலம்பெயர் தமிழர்கள் அதிகம் முக்கியமானவர்கள் என்று நான் கருதவில்லை.
சிறிலங்காவில் உள்ள மக்கள் தீர்வு ஒன்றைப் பெற்று மகிழ்ச்சிடையவார்களேயானால், தமிழ்நாட்டில் உள்ளவர்கள் எதற்காக வருத்தப்பட வேண்டும்?“ என்று அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
home



Home
கருத்துரையிடுக