
இறுதிப் போரின்போது வன்னியில் பணிபுரிந்த வைத்திய அதிகாரிகள், அழுத்தங்களுடன், பயிற்றுவிக்கப்பட்ட கருத்துகளையே, 2009 ம் ஆண்டு ஜூலை மாதம் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது தெரிவித்திருந்ததாக இலங்கைக்கான அமெரிக்க தூதரகத்தின் அதிகாரி ஜேம்ஸ் மோர், அமெரிக்காவிற்கு கூறியுள்ளதாக விக்கிலீக்ஸ் இன்று மற்றுமொரு புதிய தகவலை வெளியிட்டுள்ளது.
2009 ஆம் ஆண்டு ஒகஸ்ட் மாதம் 24 ஆம் திகதியிடப்பட்டு வெளியாகியுள்ள விக்கிலீக்ஸ் தகவல்களின்படி, யுத்தத்தின் முடிவில் பொதுமக்கள் பாதிக்கப்பட்டது தொடர்பில் வைத்திய அதிகாரிகள் வெளியிட்ட தகவல்களை சுட்டிக்காட்டி குற்றப்புலனாய்வுத் துறையினர் அவர்களை விசாரணை செய்தனர்.
பின்பு அவர்கள் பிணையில் விடுதலை செய்யப்பட்டனர். அழுத்தங்களினால் பயிற்றுவிக்கப்பட்ட ஒருசில வார்த்தைகளையே இவர்கள் அன்று ஊடகங்களுக்கு தெரிவித்ததாக விக்கிலீக்ஸ் குறிப்பிட்டுள்ளது.
விடுதலை செய்யப்பட்ட நான்கு வைத்திய அதிகாரிகள் தற்போதும் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு வருவதாகவும் தற்போதும் கூட அவர்களுக்கு அச்சுறுத்தல் இருப்பதாகவும் விக்கிலீக்ஸ் கூறியுள்ளது.
2010 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 8 ஆம் திகதி இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில், தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம் கட்டாயப்படுத்தியதன் காரணமாகவே, பொதுமக்கள் யுத்தத்தின் போது அதிகளவில் கொல்லப்பட்டதாக தாம் சர்வதேச ஊடகங்களுக்கு தவறான கருத்துக்களை வெளியிட்டதாக குறித்த வைத்தியர்கள் ஊடகங்களுக்கு தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
கருத்துரையிடுக