தைப்பொங்கலை முன்னிட்டு தடுப்பு முகாம்களில் உள்ள 100 முன்னாள் போராளிகள் ஜனவரி 15ம் திகதி யாழ்ப்பாணத்தில் வைத்து விடுதலை செய்யப்படவுள்ளதாக சிறிலங்கா இராணுவத்தின் புனர்வாழ்வு ஆணையாளர் பிரிகேடியர் சுதந்த ரணசிங்க தெரிவித்துள்ளார். “ 2009ம் ஆண்டு மே மாதம் போரின் முடிவில் சரணடைந்த 11,696 விடுதலைப் புலிகள் இயக்க உறுப்பினர்களும், ஆதரவாளர்களும் புனர்வாழ்வு முகாம்களைத் திறக்கும் போது தடுப்புக்காவலில் இருந்தனர்.
இவர்களில் புனர்வாழ்வு அளிக்கப்பட்ட 5586 முன்னாள் போராளிகள் இதுவரை விடுவிக்க்கப்பட்டு குடும்பத்தினருடன் இணைக்கப்பட்டுள்ளனர்.
மேலும் 100 முன்னாள் போராளிகள் தைப்பொங்கல் தினத்தன்று யாழ்ப்பாணத்தில் விடுவிக்கப்படவுள்ளனர்.
தடுப்புக்காவலில் இருந்த விடுதலைப் புலிகள் இயக்க முன்னாள் போராளிகளில் பாதியளவானோர் ஏற்கனவே விடுவிக்கப்பட்டு விட்டனர். வடக்கில் உள்ள புனர்வாழ்வு நிலையங்களில் 4761 முன்னாள் போராளிகள் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.
இவர்களில் பெரும்பாலானோர் இந்த ஆண்டில் விடுவிக்கப்பட்டு விடுவர்.
தற்போது முன்னாள் போராளிகளுக்கான ஒன்பது புனர்வாழ்வு நிலையங்கள் மட்டுமே இயங்குகின்றன. ஆரம்பத்தில் இந்த எண்ணிக்கை 24 ஆக இருந்தது.
ஓமந்தையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள 703 முன்னாள் போராளிகளுக்கு எதிராக விரைவில் சட்ட நடவடிக்கை எடுப்பதற்கான செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
இவர்களில் புலிகளின் படைப்பிரிவுகளுக்குத் தலைமை தாங்கியவர்கள் மற்றும் சிறப்பு அணிகளில், குறிப்பாக புலனாய்வுப் பிரிவில் இடபெற்றிருந்தவர்களும் அடங்குகின்றனர்.
முன்னாள் போராளிகளுக்கான புனர்வாழ்வுக்கு அனைத்துலக சமூகமும் வர்த்கப் பிரமுகர்களும் உதவிகளை வழங்கி வருகின்றனர்.“ என்றும் அவர் மேலும் கூறியுள்ளார்.
home



Home
கருத்துரையிடுக