News Update :
Home » » கலப்புத் திருமணங்களால் தங்களது அடையாளத்தினை இழக்கும் தமிழ்க் குடும்பங்கள்

கலப்புத் திருமணங்களால் தங்களது அடையாளத்தினை இழக்கும் தமிழ்க் குடும்பங்கள்

Penulis : Antony on திங்கள், 3 ஜனவரி, 2011 | முற்பகல் 10:16

தற்போது புலம்பெயர்நாடுகளில் கலப்புத் திருமணம் செய்து வாழும் தங்களது பிள்ளைகளும் பேரப்பிள்ளைகளும் ஊர்திரும்பும் போது தங்களது மொழி, கலாச்சாரம் மற்றும் மொழி என்னாவது என அவர்கள் தங்களது கவலையினை வெளியிடுகிறார்கள் என ucanews.com என்னும் இணையத்தளத்தின் செய்தி ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அச்செய்தி ஆய்வின் முழுவிபரமாவது:

தங்களது பிள்ளைகள் வேற்று இனத்தினைச் சேர்ந்தவர்களைத் திருமணம் செய்யும்போது தங்களது கலாச்சாரத்தினையும் வழமையினையும் இழந்துவிடுவதாக சிறிலங்காவிலுள்ள தமிழ் கத்தோலிக்கர்கள் கரிசனை கொள்கிறார்கள்.

தற்போது புலம்பெயர்நாடுகளில் கலப்புத் திருமணம் செய்து வாழும் தங்களது பிள்ளைகளும் பேரப்பிள்ளைகளும் ஊர்திரும்பும் போது தங்களது மொழி, கலாச்சாரம் மற்றும் மொழி என்னாவது என அவர்கள் தங்களது கவலையினை வெளியிடுகிறார்கள்.

பிரான்சிலுள்ள தங்களது மகன் பிரெஞ்சுப் பெண்ணொருவரை திருமணம் செய்யப்போவதாக ஒற்றைக்காலில் நிற்பதைத் தொடர்ந்து யாழ்ப்பாணத்திலுள்ள சவரிமுத்துவும் அவரது மனைவியும் கவலையில் மூழ்கிப்போயுள்ளார்கள்.

"இதுபோன்ற கலப்புத் திருமணங்களை தேவாலயங்கள் ஊக்குவிக்கக்கூடாது. இது தமிழ் மக்களது கலாச்சார ரீதியிலான அபிலாசைகளை ஒருபோதும் பிரதிபலிக்காது" என நீக்கிலஸ் சவரிமுத்து கூறுகிறார்.

ஐரோப்பிய நாடுகளிலுள்ள தங்களது பிள்ளைகளை பார்வையிடுவதற்காகச் சென்ற வேளை, பிரான்சில் வசிக்கும் கலப்புத் திருமணங்கள் செய்த பல குடும்பங்களிடையே பிணக்குகள் நிலவுவதைத் தான் நேரில் அவதானித்ததாக சவரிமுத்து கூறுகிறார்.

தங்களது துணைவிமார் தங்களது மதத்தினை, இனத்தினைச் சேர்ந்தவர்களாக இருக்கவேண்டும் என்ற பெற்றோர்களது வாதத்தினை ஏற்றுக்கொள்ளமுடியாது என புலம்பெயர் நாடுகளில் வாழும் கத்தோலிக்கத் தமிழ் இளைஞர்கள் கூறுகிறார்கள்.

சொந்தக் கலாச்சாரத்தினையும் மதத்தினையும் பின்பற்றும் பெண்ணையே மணம்செய்யவேண்டும் என்ற தங்களது பெற்றோர்களது வேண்டுகையினைத் தங்களால் மறுக்கமுடியாது என புலம்பெயர் தேசங்களில் வாழும் வேறுசிலர் கூறுகிறார்கள்.

ஏனைய சிலர் பெற்றோரது விருப்பு வெறுப்புகளுக்கு மாறாக வேறு இனப் பெண்களைத் திருமணம் செய்திருக்கும் அதேநேரம் வேறுசிலரோ திருமணம் செய்யமாமல் தனித்தே வாழ்ந்து வருகிறார்கள்.

43 வயதான தவரத்தினம் என்ற பல்வைத்தியர் பிரித்தானியாவினைச் சேர்ந்த பெண்ணொருவரைத் திருமணம் செய்திருந்தார். இவருக்கு மூன்று பிள்ளைகள் உள்ளார்கள். பரஸ்பர மரியாதை, தேவையானதைப் புரிந்துகொள்ளும் பாங்கு என்பனதான் சிறந்த திருமண வாழ்வின் அடிப்படை என்கிறார் இவர்.

சிறிலங்காவில் தமிழர்களது திருமண நிகழ்வின் போது வெறும் சோடிகள் மாத்திரம் இணைவதில்லை. அவர்களது பெற்றோரும்கூட திருமணத்தினைத் தொடர்ந்து நெருங்கிய உறவுகளாகிவிடுகிறார்கள்.

திருமணத்தின் பின்னரும் பெற்றோரைப் பாதுகாக்கவேண்டும் என்ற நிலை மற்றும் தமிழர்களது கலாச்சாரப் பண்புகளைத் தொடர்ந்தும் பற்றிப்பிடித்து வாழுவதற்கு கலப்புத் திருமணங்கள் தடையாக அமைகின்றன எனப் பலரும் நம்புகிறார்கள்.

"மரணத்தில்கூட நாங்கள் பாதிக்கப்படுகிறோம்" என 63 வயதுடைய சிங்கராசா செபஸ்தியம்பிள்ளை கூறுகிறார். இவரது ஐந்து பிள்ளைகள் புலம்பெயர் நாடுகளில் வசித்து வருகிறார்கள்.
புலம்பெயர் நாடுகளில் கலப்புத் திருமணம் செய்தவர்கள் மத்தியில் மணமுறிவுகள் அதிகரித்துக் காணப்படுவது பெற்றோர்களது வாதத்தினை வலுப்படுத்துவதாக அமைகிறது என முத்துத்தம்பி சிவலிங்கம் என்ற சட்டவாளர் கூறுகிறார்.

சில சந்தர்ப்பங்களின்போது குறித்த ஒருவர் வேறு கலாச்சாரத்தினைப் பின்பற்றும் வேறு மொழியினைப் பேசும் ஒருவரைத் திருமணம் செய்தபோதிலும் பெற்றோர்களுக்குத் தொடர்ந்தும் நிதியுதவியளித்து வருகிறார்கள் என்கிறார் இவர்.

கலப்புத் திருமணங்கள் இடம்பெறுமெனில் அதில் கத்தோலிக்கத் தேவாலயங்கள் உத்தியோகபூர்வமாகத் தலையிட்டு நடவடிக்கைகள் எதனையும் முன்னெடுக்கப் போவதில்லை எனச் சட்ட வல்லுநரான மதகுரு தம்பிராசா ஜெப்றியல் கிருபாகரன் கூறுகிறார்.

"தேவாலயங்களைப் பொறுத்தவரையில் திருமணம் என்பது மத ரீதியிலான சடங்குகளில் அடிப்படையில் இடம்பெறவேண்டும் என்பதே தேவாலயங்களின் பிரதான கரிசனை. மணமுறிவு, செல்லுபடியாகாத திருமணங்கள் உள்ளிட்ட விடயங்கள் தொடர்பில் தேவாலயங்கள் ஒருபோதும் தலையிடாது" என்றார் அவர்.

"திருமணத்திற்கென வரும் சோடிகள் திருமண வயதினை அடைந்துவிட்டார்களா என்பதை உறுதிப்படுத்திவிட்டு அவர்களுக்கான சமயச் சடங்குகளைத் தேவாலயம் முன்னெடுக்கும்" என யாழ்ப்பாணத்திலுள்ள சென் ஜேன்ஸ் தேவாலயத்தின் பங்குத்தந்தை சாள்ஸ் சேவியர் நேசராசா கூறுகிறார்.

எவ்வாறிருப்பினும் தனது பங்கில் வெறும் ஐந்து அல்லது ஆறு கலப்புத் திருமணக் குடும்பங்களே இருப்பதாக அவர் கூறுகிறார். இன்றைய நிலையில் இது புறம்தள்ளக்கூடிய தொகை என்றும் ஆனால் கலப்புத் திருமணங்களை மேற்கொள்ளும் போக்கு வேகமாக வளர்ந்துவருவதாகவும் அவர் கூறுகிறார்.

ஐரோப்பா, ஐக்கிய அமெரிக்கா போன்ற புலம்பெயர் தேசங்களில் 1.5 மில்லியன் சிறிலங்காவினைச் சேர்ந்த தமிழர்கள் வாழ்ந்துவருகிறார்கள்.
Share this article :

கருத்துரையிடுக

 
Company Info | Contact Us | Privacy policy | Term of use | Widget | Advertise with Us | Site map
Copyright © 2011. welvom . All Rights Reserved.
Design Template by panjz-online | Support by creating website | Powered by Blogger