ஆயுதக்குழு ஒன்றினால் கிளிநொச்சியிலிருந்து வவுனியா நோக்கி பேருந்து ஒன்றில் கடத்திச் செல்லப்பட்ட தமிழ்ச் சிறுவர்கள் சிலர் பின்னர் வவுனியாவில் வைத்து விடுவிக்கப்பட்டிருக்கின்றனர். தாங்கள் 30 பேர் கிளிநொச்சியிலிருந்து கடத்திச் செல்லப்பட்டதாகவும் பின்னர் வவுனியாவில் ஓமந்தைப் பகுதியில் வைத்து 28 பேரை கடத்தல்காரர்கள் விடுதலை செய்ததாகவும் இவ்வாறு விடுவிக்கப்பட்ட சிறுவன் ஒருவன் காவல்துறையினரிடம் கூறியிருக்கிறான்.
பேருந்து வவுனியா நோக்கிப் பயணித்துக் கொண்டிருந்தபோது மடிக்கணனி ஒன்றைப் பயன்படுத்திய இந்த ஆயுததாரிகள் கணனியில் காணப்பட்ட ஒளிப்படங்களில் உள்ளவர்களது முகத்தினையும் கடத்தப்பட்ட இந்த சிறுவர்களது முகத்தினையும் ஒப்பிட்டுப் பார்திருக்கிறார்கள்.
இதன்போது ஓமந்தையில் வைத்து விடுவிக்கப்படாத இரண்டு சிறுவர்களையும் குறிப்பிட்ட ஆயுததாரிகள் வவுனியா நோக்கிக் கடத்திச் சென்றதாக இந்த சிறுவன் முறையிட்டிருக்கிறான்.
கடத்தப்பட்டதாகக் கூறப்படும் ஒருவரிடமிருந்து தாங்கள் முறைப்பாட்டினைப் பெற்றிருப்பதாக கிளிநொச்சி காவல்துறையினைச் சேர்ந்த ஒருவர் கூறகிறார். ஆனால் ஆயுததாரிகள் கடத்திச்சென்ற அந்த இரண்டுபேர் தொடர்பான மேலதிக தகவல்களைக் காவல்துறையினர் இன்னமும் திரட்டவில்லை.
நாட்டினது வடக்குப் பகுதியில் குறிப்பாகக் குடாநாட்டில் அண்மைய நாட்களில் அதிகரித்துக் காணப்படும் படுகொலைகள், ஆட்கடத்தல்கள் மற்றும் அச்சுறுத்திப் பணம் பறிக்கும் செயற்பாடுகளால் மக்கள் அச்சத்தில் உறைந்திருப்பதாக செய்திகள் கூறுகின்றன.
குடாநாட்டில் இடம்பெற்ற கொலைச் சம்பவம் ஒன்று தொடர்பாக காவல்துறையினர் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றபோதும் இதுபோன்ற கடத்தல் தொடர்பாக தனக்கு எதுவும் தெரியாது என தேசியப் பாதுகாப்புக்கான ஊடக மத்திய நிலையத்தின் பணிப்பாளர் லக்ஸ்மன் கிரியல்ல கூறுகிறார்.
"யாழ்ப்பாணம் பாதுகாப்புப் படையினரின் முழுமையான கட்டுப்பாட்டின் கீழ் இருக்கின்ற அமைதியான பிரதேசமது" என்கிறார் அவர்.
home



Home
கருத்துரையிடுக