
கிளிநொச்சி நகரில் 30 மாணவர்களை எட்டுப்பேர் கொண்ட ஆயுதக்குழு ஒன்று கடத்திச்சென்றதாம். பின்னர் ஓமந்தை சோதனைச்சாவடியில் வைத்து அவர்களில் 28 பேரை விடுவித்ததாம். அவர்களில் ஒரு சிறுவன் இந்தக் கடத்தல் சம்பவம் பற்றிய தகவல்களை கிளிநொச்சி பொலிஸாருக்குத் தெரிவித்தாராம். இவ்வாறு ஊடகங்களில் செய்திகள் வெளியாகியிருந்தன.
முன்னர் தெரிவிக்கப்பட்டதைப் போன்ற ஒரு கடத்தல் சம்பவம் நடைபெறவில்லை என இப்போது தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தத் தகவலை பொலிஸார் கிளிநொச்சி நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளதாக இப்போது கூறப்பட்டுள்ளது.
கிளிநொச்சி நகல் இருந்து பஸ் வண்டியில் கொண்டு செல்லப்பட்ட இந்தச் சிறுவர்களில் 28 பேர் ஓமந்தை சோதனைச்சாவடியில் வைத்து கடத்தல்காரர்களினால் விடுதலை செய்யப்பட்டதாகவும், மிகுதி இருவரை அவர்கள் வவுனியா நகருக்குக் கொண்டுசென்றார்களாம். வவுனியா நகருக்குக் கொண்டுசெல்லப்பட்ட இரண்டு சிறுவர்களுக்கும் என்ன நடந்தது என்பது பற்றிய தகவல்கள் தெரியவில்லையாம், என்றும் செய்திகள் வெளியாகியிருந்தன.
வாகனத்தில் கடத்திச்செல்லப்பட்ட போது, ஆயுதம் ஏந்தியிருந்த நால்வர் லப்டொப் (மடிக்கணினி) ஒன்றில் இருந்த படங்களுடன் கடத்திச்செல்லப்பட்டவர்களை ஒப்பிட்டுப்பார்த்தார்களாம். இதையும் தப்பிவந்தவர்களில் ஒருவராகிய அந்தச் சிறுவன் பொலிஸாருக்குத் தெரிவித்திருந்த தாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருந்தன.
எனினும் நீண்ட விசாரணைகளின் பின்னர், இந்தச் சிறுவனை கிளிநொச்சி பொலிஸார் நேற்று முன்தினம் செவ்வாய்க்கிழமை கிளிநொச்சி நீதிமன்றத்தில் ஆஜர் செய்தனர். இந்த சிறுவன் பொலிஸாருக்கு வழங்கிய வாக்குமூலம் குறித்து நீதிமன்றத்திற்குப் பொலிஸார் விளக்கமளித்தனர்.
அப்போது பொலிஸார் தெரிவித்ததாவது:
முன்னர் கூறியதைப்போன்ற, கடத்தல் சம்பவம் நடைபெறவில்லை என்று அதே சிறுவன் இப்போது தெரிவித்துள்ளார்.
தானும் தனது நண்பர்கள் சிலரும் வவுனியா நகருக்குப் போய்வர விரும்பியதாகவும், வீட்டார் அதற்கு அனுமதி மறுத்ததை யடுத்து, வீட்டாருக்குத் தெரியாமல் வவுனியாவுக்குச் சென்று திரும்பியதாகவும் தாங்கள் வவுனியாவுக்கு அனுமதியின்றி சென்றதை மறைப்பதற்காகவே கடத்திச் செல்லப்பட்டதாகத் தெரிவித்ததாகவும் இந்தச் சிறுவன் விசாரணையின்போது தெரிவித்துள்ளார்.
கடத்திச்செல்லப்பட்டதாக, இந்தச் சிறுவன் பொய்யான தகவல்களையே முதலில் தெரிவித்திருந்தார். நீண்ட விசாரணையின் போது அவரே இதனை ஒப்புக்கொண்டார்.
இவ்வாறு பொய்யான தகவல்களைக் கொடுத்த இந்தச் சிறுவனை சிறுவர் நன்னடத்தைப் பிரிவில் வைத்துப் பராமரிப்பதற்கு நீதிமன்றம் உத்தரவிட வேண்டும். இவ்வாறு பொலிஸார் நீதிமன்றத்திடம் கோனர்.
இதனையடுத்து, என்ன நடந்தது என நீதிவான் அந்தச் சிறுவனை வினவிய போது, தாங்கள் வவுனியா நகரைப் பார்ப்பதற்காகவே சென்றதாகவும், தங்களை யாரும் கடத்தவில்லை என்றும் அந்தச் சிறுவன் தெரிவித்துள்ளார்.
பொய்யான தகவல்களைப் பொலிஸாருக்கு வழங்கிய அந்தச் சிறுவனை எச்சரிக்கை செய்த நீதிவான் அவரை யாழ். மாவட்ட சிறுவர் நன்னடத்தைப் பிரிவில் சேர்த்துப் பராமரிக்கும்படியும், அதற்காக அவரை யாழ்.மாவட்ட சிறுவர் நன்னடத்தை அதிகாரியிடம் ஒப்படைக்கும்படியும் பொலிஸாருக்கு உத்தவிட்டார்.
இதனையடுத்து புவனேஸ்வரராசா சஞ்சீவன் என்ற அந்த 16 வயது சிறுவன் யாழ் மாவட்ட நன்னடத்தைப் பிரிவு அதிகாரியிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.
கருத்துரையிடுக