
வீட்டின் முன்பக்கத்தில் திடீரென வந்துநின்ற "ஹைஏஸ்" வாகனத்தைக் கண்டு வீட்டின் பின்புறக் கதவைத் திறந்து ஓடினார் வீட்டுக்காரர்! திகிலடைந்து கண்மண் பாராது ஓடிய அவரது காலை உடைந்த போத்தல் ஓடு பதம் பார்த்தது.
இந்தச் சம்பவம் யாழ்.நகரில் நேற்று முன்தினம் இரவு இடம்பெற்றுள்ளது.
குடாநாட்டில் வெள்ளைவான் பீதி மக்களை எவ்வாறு அச்சத்தில் உறையவைத்துள்ளது என்பதை இந்தச் சம்பவம் எடுத்துக் காட்டுகிறது.
இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருவதாவது:
போத்தல் ஓடு (பிசுங்கான்) வெட்டியதில் அவரது கால் பாதம் பிளந்த நிலையில் தலை தெறிக்க ஓடிய அவர், அயல் வீடொன்றில் அடைக்கலம் புகுந்தார். அவர்கள் காயமடைந்தவரை இரத்தம் ஓட ஓடத் தனியார் ஆஸ்பத்திரிக்குக் கூட்டிச் சென்றனர்.
இவருக்கு நடந்த இந்தச் சம்பவத்தை அறிந்திராத அவரது உறவினர்கள் இவர் கடத்தப்பட்டுவிட்டார் என்று கருதிப் பதற்றமடைந்தனர்.
இது குறித்து அவர்கள் பொலிஸ் நிலையத்துக்கும் தகவல் கொடுத்துவிட்டனர்.
இந்நிலையில் அவர் தனியார் வைத்தியசாலையில் சிகிச்சையைப் பெற்றுக் கொண்டு நண்பர்களின் உதவியுடன் நள்ளிரவு வேளை வீடு திரும்பிவந்தார். அதன் பின்னரே வீட்டாருக்குப் "புதினம்" தெரியவந்தது.
இதேவேளை, வீட்டார் செய்த முறைப்பாடு வாபஸ் பெறாத நிலையில் நேற்றுக்காலை பொலிஸார் பிரஸ்தாப வர்த்தகரை பொலிஸ் நிலையம் அழைத்திருந்தனர். அவரை விசாரணைக்காக நீண்டநேரம் வைத்திருந்துவிட்டு மாலை 5 மணிக்கே வீடு செல்ல அனுமதித்தனர்.
home



Home
கருத்துரையிடுக