
தமிழ்நாட்டு மீனவரை தமது கடற்படையினர் சுட்டுக் கொல்லவில்லை என்று சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ள போதும் இந்தியக் கடற்படை அதிகாரிகள் அதை ஏற்கவில்லை.
சிறிலங்கா கடற்படையினரே மீனவரை சுட்டுக் கொன்றதாக அவர்கள் கூறியுள்ளனர்.
கடந்த புதன்கிழமை பாக்கு நிரிணையில் மீன்பிடித்துக் கொண்டிருந்த தமிழ்நாட்டு மீனவர் ஒருவர் சிறிலங்கா கடற்படையினரால் சுட்டுக் கொல்லப்பட்டிருந்தார்.
அவரைத் தாம் சுடவில்லை என்று சிறிலங்கா கடற்படையினர் கூறியிருந்தனர்.
பின்னர் கடந்த வெள்ளியன்று சிறிலங்கா அதிபரும் அதையே கூறியிருந்தார்.
ஆனாலும் இந்திய கடற்படை அதிகாரிகள் சிறிலங்கா கடற்படையினரே அவரைச் சுட்டதாக உறுதிப்படுத்தியுள்ளனர்.
இந்தியக் கடற்படையின் கிழக்குப் பிராந்திய நடவடிக்கைப் பணிப்பாளர் தாக்கரே இதுகுறித்து செய்தியாளர்களிடம் மீளவும் உறுதிப்படுத்தியுள்ளார்.
அதேவேளை சிறிலங்கா கடற்படைத் தளபதியாக கடந்த வாரம் பொறுப்பேற்றுக் கொண்ட வைஸ் அட்மிரல் சோமதிலக திசநாயக்க, முடிந்தால் இதற்கான ஆதாரங்களை சமர்ப்பிக்கட்டும் என்று சவால் விடுத்திருந்தார்.
இந்தநிலையில் இந்திய கடலோரக் காவல்படை முழுமையான விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.
மண்டபம் கடலோரக் காவல்படையின் கட்டளை அதிகாரி கொமாண்டர் சைனி இதுகுறித்து தகவல் வெளியிட்டுகையில் “அனைத்து விடயங்களையும் உள்ளடக்கியதாக விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
சம்பவம் நடந்த இடம், நேரில் கண்ட சாட்சிகள், சுடப்பட சரியான நேரம், இதற்கு முன்னரும் பின்னருமாக நடந்த சூட்டுச் சம்பவங்கள் மற்றும் பல்வேறு விடயங்களை உள்ளடக்கியதாக இந்த விசாரணைகள் நடத்தப்படவுள்ளன.
காவல்துறையினரின் உதவியுடன் விசாரணைகள் இடம்பெறுகின்றன.
அதன் முடிவுகளின் படி மேல் நடவடிக்கை எடுக்கப்படும்.
படகில் இருந்து ஒரு கல்லும், ரவையும் மீட்கப்பட்டுள்ளன.
இவையும் பரிசோதனைக்கு எடுத்துக் கொள்ளப்படும்.
கரையில் இருந்து 25 - 30 கடல்மைல் தொலைவில் இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
அதன்படி சூட்டச் சம்பவம் இந்தியக் கடல் எல்லைக்குள் நடைபெறவில்லை.
ஆரம்பகட்டத் தகவல்களின் படி மீனவர்கள் தொலைத்தொடர்புக் கருவியையோ அல்லது புவிநிலைகாட்டி போன்ற கருவிகளையோ கொண்டு சென்றிருக்கவில்லை என்றும் அவர் கூறியுள்ளார்.
கருத்துரையிடுக