இந்த கருத்தரங்கில் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு போலியோவை ஒழிக்க நிதியுதவி செய்யுமாறு வேண்டுகோள் விடுத்தார் நடிகை சினேகா.உலகமெங்கும் போலியோ ஒழிப்பு முழுமையடைந்தாலும் பாகிஸ்தான் ஆப்கானிஸ்தான் இந்தியா மற்றும் நைஜீரியாவில் மட்டும் இன்னும் முழுமையடையவில்லை.
இந்த நாடுகளில் போலியோவை ஒழிக்க ரூ 825 கோடியைத் திரட்ட இலக்கு நிர்ணயித்துள்ளது ரோட்டரி கிளப். இதன் ஒரு பகுதியாக பாண்டிச்சேரி மாவட்ட ரோட்டரி கிளப் சார்பில் நிதி திரட்டும் நிகழ்ச்சி சென்னையை அடுத்த காட்டாங்குளத்தூரில் உள்ள எஸ்ஆர்எம் பல்கலைக்கழக அரங்கில் நடந்தது.
இந்நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டார் நடிகை சினேகா. விழாவில் பேசிய சினேகா "போலியோ ஒழிப்பு என்பது இன்றைக்கு மிக முக்கியமான ஒரு விஷயம். என்னுடைய அப்பாவும் ஒரு ரொட்டேரியன்தான். அந்த வகையில் இந்த விழாவுக்கு வந்ததை பெருமையாகக் கருதுகிறேன். போலியோ ஒழிப்பு என்ற நோக்கத்துக்கு ஒவ்வொருவரும் தம்மாலான தொகையை நன்கொடையாக வழங்க வேண்டும்.." என்றார்.
இதில் தானே முதல் நபராக ரூ 15000 கொடுத்து போலியோ ஒழிப்புக்கான நிதி திரட்டலைத் தொடங்கிவைத்தார் சினேகா.மேலும் "போலியோ ஒழிப்பு போன்ற நல்ல நோக்கங்களுக்காக பாடுபடும் ரோட்டரி கிளப்பில் என்னையும் ஒரு உறுப்பினராக இன்று முதல் (ஜனவரி) இணைத்துக் கொள்கிறேன்" என்று அறிவித்தார் சினேகா.
ரூ 5000-க்கும் அதிகமாக நன்கொடை வழங்கியவர்கள் மேடைக்கு அழைக்கப்பட்டு சினேகாவுடன் புகைப்படம் எடுத்துக் கொள்ள அனுமதிக்கப்பட்டனர். நிகழ்ச்சியில் தமிழகம் முழுவதிலுமிருந்து வந்திருந்த பல்வேறு ரோட்டரி கிளப் உறுப்பினர்கள் ஆயிரக்கணக்கில் சினேகாவிடம் நன்கொடை வழங்கினர்.
இந்த நிகழ்ச்சிக்கான ஏற்பாட்டை ரொட்டேரியன் செல்வநாதன் மற்றும் ரொட்டேரியன் சக்கரபாணி ஆகியோர் செய்திருந்தனர்.

கருத்துரையிடுக