
பயணம் செய்வதற்கு உருப்படியான உலங்குவானூர்திகள் இல்லாது போனால் புதியவற்றை வாங்கும்படி சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்ச சிறிலங்கா வான்படை அதிகாரிகளிடம் எரிச்சலை வெளிப்படுத்தியுள்ளார்.
சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்ச பயணம் மேற்கொள்ளும் உலங்குவானூர்திகள் அடிக்கடி பழுதடைந்து போகின்றன.
இதன் காரணமாகவே, கடந்த வாரம் சிறிலங்கா வான்படை உயர்அதிகாரிகளை அழைத்து சிறிலங்கா அதிபர் தனது சினத்தை வெளிப்படுத்தினார்.
கடந்த வியாழக்கிழமை தேர்தல் பரப்புரைக்காக அவர் மொனராகலவுக்குச் சென்றார். கூட்டம் முடிந்த பின்னர் முக்கிய பிரமுகர்களுக்கான உலங்குவானூர்தியில் ஏறினார்.
அடுத்து அவர் கொழும்பில் நடைபெறும் திருமணம் ஒன்றில் சாட்சிக் கையொப்பமிட வேண்டியிருந்தது.
ஆனால் அவரது உலங்குவானூர்தியை கிளப்ப முடியவில்லை. அது பழுதடைந்து விட்டது.
பின்னர் அவர் பாதுகாப்பு அதிகாரிகள் பயணம் செய்த உலங்குவானூர்தியில் ஏறிக் கொண்டார். அது வீரவில வான்படைத் தளத்தில் அவரைக் கொண்டு சென்று இறக்கி விட்டது.
பின்னர் பாதுகாப்பு அதிகாரிகளை ஏற்றி வரும் வரை சிறிலங்கா அதிபர் வீரவிலவில் காத்திருக்க வேண்டியிருந்தது.
ஆனால் சீரற்ற காலநிலையால் பாதுகாப்பு அதிகாரிகளின் உலங்குவானூர்தியும் பறக்க முடியாமல் திரும்பி வந்தது.
பின்னர் அங்கிருந்து வை-12 வானூர்தியில் ஏறி கொழும்புக்கு புறப்பட்டார். வழக்கமாக அது இரத்மலானையில் தரையிறக்கப்படும்.
ஆனால் அன்று வான்படையின் 60வது ஆண்டு நிறைவு நிகழ்வுகள் நடைபெற்றதால் வானூர்தியை கட்டுநாயக்கவுக்கு கொண்டு சென்று தரையிறக்கினார் விமானி.
அங்கிருந்து வேறொரு உலங்குவானூர்தியில் மகிந்த ராஜபக்ச கொழும்பு சென்றார்.
அப்போது மிகவும் தாமதமாகி விட்டது. திருமணத்துக்காக குறிக்கப்பட்ட சுபநேரமும் கடந்து போனது.
இதனால் மகிந்த ராஜபக்ச அவர்களிடம் மன்னிப்புக் கேட்கும் நிலை ஏற்பட்டது.
இதுபோன்று அடிக்கடி நிகழ்வதாலேயே சிறிலங்கா அதிபர் வான்படை உயர் அதிகாரிகளை அழைத்து கடுமையாக சாடியுள்ளார்.
கருத்துரையிடுக