
புனேவைச் சேர்ந்த தொழிலதிபர் ஹசன் அலி கானிடம் உள்ள பெருமளவு பணம் தன்னுடையது என அவதூறாக செய்தி வெளியிட்ட கலைஞர் டிவி உள்ளிட்ட 3 ஊடகங்களும் நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்க வேண்டும் என்று அதிமுக பொதுச்செயலர் ஜெயலலிதா நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.
மும்பையைச் சேர்ந்த மாலை நாளிதழ் மிட்-டே, திமுகவின் அதிகாரப்பூர்வ நாளேடான முரசொலி மற்றும் கலைஞர் டிவி ஆகிய 3 ஊடகங்களுக்கும் ஜெயலலிதா சார்பில் அவரது வழக்கறிஞர் பி.எச்.மனோஜ் பாண்டியன் நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.
நோட்டீஸுக்கு பதிலளிக்கத் தவறினால் சட்டரீதியான நடவடிக்கை எடுக்கப்போவதாகவும் ஜெயலலிதா அந்த நோட்டீஸில் தெரிவித்துள்ளார்.
எந்த ஆவணங்களின் அடிப்படையிலும் இல்லாமல் உறுதிப்படுத்தப்படாமல் மிகவும் அற்பத்தனமான இந்தச் செய்தி வெளியிடப்பட்டுள்ளது என ஜெயலலிதாவின் சார்பாக 3 ஊடகங்களுக்கும் நோட்டீஸ் அனுப்பிய அவரது வழக்கறிஞர் பி.எச்.மனோஜ் பாண்டியன் தெரிவித்தார்.
கோடிக்கணக்கில் வருமானவரி ஏய்ப்பு செய்ததாகக் கூறப்படும் ஹசன் அலிகானிடம் உள்ள பெருமளவிலான பணம் பெண் அரசியல்வாதி ஒருவருடையது என்றும், அவர் தென்னிந்தியாவில் முதல்வராக இருந்துள்ளார் என்றும் விசாரணைகள் குறிப்பிடுவதாக பெயர்கூறவிரும்பாத விசாரணை அதிகாரி ஒருவர் தெரிவித்தார் என மிட்-டே நாளிதழில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இது விஷமத்தனமானது என மனோஜ் பாண்டியன் கூறினார்.
ஹசன் அலிகான் வெளிநாட்டு வங்கிகளில் கறுப்புப் பணத்தை வைத்திருப்பதாகக் குற்றம்சாட்டப்பட்டவர். வெளிநாட்டு வங்கிகளில் கறுப்புப் பணம் வைத்திருப்பவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தியவர்தான் ஜெயலலிதா என மனோஜ் பாண்டியன் கூறினார்.
உறுதிப்படுத்தப்படாமல் உள்நோக்கத்துடன் அந்த செய்தி வெளியிடப்பட்டுள்ளது என மனோஜ் பாண்டியன் அனுப்பிய நோட்டீஸில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த செய்தியின்மூலம் ஜெயலலிதாவுக்கு ஏற்பட்ட இழப்பு கணக்கிடமுடியாதது. செய்தியை வெளியிட்ட 2 பத்திரிகைகளும் நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்க வேண்டும். முதல் பக்கத்தில் அதை வெளியிட வேண்டும். கலைஞர் டிவியும் மன்னிப்பு கேட்டு செய்தி வெளியிட வேண்டும் என நோட்டீஸில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நோட்டீஸ் கிடைத்தவுடன் அதைச் செய்ய வேண்டும். தவறினால் உரிய சிவில் மற்றும் கிரிமினல் நடவடிக்கை எடுக்கப்படும் என ஜெயலலிதா சார்பாக மனோஜ் பாண்டியன் அனுப்பியுள்ள நோட்டீஸில் குறிப்பிடப்பட்டுள்ளது.
கருத்துரையிடுக