
யாழ்.மாநகர சபையின் ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியினுள் பிளவு ஏற்பட்டுள்ளது. சபையில் இடம்பெறும் ஊழல்களுக்கு ஈ.பி.டி.பியினரே காரணம் என்று குற்றஞ்சாட்டும் அதன் பங்காளிக் கட்சியினரான சுதந்திரக் கட்சியினர் தாம் இனிமேல் தனித்துச் செயற்படப் போவதாக அறிவித்துள்ளனர்.இன்று நடைபெற இருக்கும் சபைக் கூட்டத்தில் இது தொடர்பில் அறிவிக்கப்பட உள்ளது.
யாழ். மாநகர சபையை ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி கைப்பற்றிய போது அதில் ஈ.பி.டி.பி., முஸ்லிம் காங்கிரஸ் மற்றும் சுதந்திரக் கட்சி ஆகியன முக்கிய பங்காளிகளாக இருந்தன.
சுதந்திரக் கட்சி சார்பில் 4 உறுப்பினர்களும், முஸ்லிம் காங்கிரஸ் சார்பில் 4 உறுப்பினர்களும் சபையில் அங்கம் வகிக்கின்றனர். ஈபிடிபியினர் சார்பில் 6 உறுப்பினர்கள் அங்கம் வகிக்கின்றனர்.
முதல்வரும் அவர் சார்ந்த கட்சியினரும் அதிகாரத் துஷ்பிரயோகத்தில் ஈடுபட்டதால் மாநகர சபைக்கு வருமானமாகக் கிடைக்க வேண்டிய கோடிக்கணக்கான பணம் கைவிட்டுப் போனது என்று அண்மையில் குற்றச்சாட்டு எழுந்தது.
இதனைத் தொடர்ந்து ஆளும் முன்னணிக்குள் கருத்து முரண்பாடுகள் வலுத்து அது இரு பிரிவுகளாக உடைந்துள்ளது.
முன்னணியில் அங்கம் வகிக்கும் சுதந்திரக் கட்சியினர் இனிமேல் தனித்துச் செயல்பட முடிவெடுத்துள்ளதாகவும், சபையில் ஊழல்கள் மலிந்துள்ளதால் இந்த முடிவை எடுப்பதற்கு தாங்கள் நிர்ப்பந்திக்கப்பட்டுள்ளதாகவும் எ சுதந்திரக் கட்சியின் மாநகர சபை உறுப்பினரான நிஷாந்தன் தெரிவித்துள்ளார்.
ஈபிடிபியினர் வெற்றிலைச் சின்னத்தில் போட்டியிட்டு வெற்றியீட்டியதால் அக்கட்சியினர் செய்யும் ஊழல்கள் அனைத்துக்கும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியும் இணைந்தே கெட்ட பெயர் கேட்க வேண்டி ஏற்பட்டுள்ளதாகவும் அவர் கவலைப்பட்டார்.
இதனால் இன்றைய கூட்டம் கடும் காரசாரங்களுக்கு மத்தியிலேயே இடம்பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தேவை ஏற்பட்டால் முதல்வருக்கு எதிராக நம்பிக்கையில்லாத் தீர்மானம் ஒன்றைக் கொண்டு வந்து நிறைவேற்றவும் தயங்கப்போவதில்லை என்றும் சுதந்திரக் கட்சி உறுப்பினர்கள் தெரிவித்துள்ளனர்.
இதேவேளை, யாழ். நகரின் மத்தியில் மாநகர சபை இடத்தில் 5 மாடிகள் கொண்ட வர்த்தக சந்தை ஒன்றை அமைப்பதில் முறைகேடுகள் இடம்பெற்றுள்ளன என்று கூறப்படுவது தொடர்பில் எதிர்க்கட்சிகள் இன்றைய கூட்டத்தில் சர்ச்சையைக் கிளப்பும் என்றும் தெரிகிறது
கருத்துரையிடுக