News Update :
Home » » சிறிலங்கா சிறையில் நான்காண்டுகளுக்கும் மேலாக அடைக்கப்பட்டிருக்கும் பிரித்தானிய தமிழர்

சிறிலங்கா சிறையில் நான்காண்டுகளுக்கும் மேலாக அடைக்கப்பட்டிருக்கும் பிரித்தானிய தமிழர்

Penulis : ۞உழவன்۞ on சனி, 17 செப்டம்பர், 2011 | PM 12:22

எந்தவொரு விசாரணைகளுமின்றி தொடர்ச்சியாக தடுப்புக் காவலில் ஒருவரை வைத்திருப்பதற்கு அனுமதிக்கின்ற பயங்கரவாத தடுப்புச் சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்ட பிரிட்டன் குடிமகனாக கோபிதாஸ் உள்ளார்.

இவ்வாறு பிரித்தானியாவில் இருந்து வெளியாகும் The Guardian ஊடகத்தின் இணையத்தளத்தில் Sam Jones எழுதியுள்ள செய்திக்கட்டுரையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதனை புதினப்பலகைக்காக மொழியாக்கம் செய்தவர் நித்தியபாரதி.

நோயாளியான பிரிட்டன் தமிழர் ஒருவர் பயங்கரவாத எதிர்ப்புச் சட்டங்களின் சரத்துக்களின் பிரகாரம், கடந்த நான்கரை ஆண்டுகளாக எந்தவொரு குற்றச்சாட்டுக்களோ அல்லது விசாரணைகளோ அன்றி சிறிலங்காவில் தடுத்துவைக்கப்பட்டுள்ளது தொடர்பான தமது ஆதங்கத்தை பிரிட்டன் அரசாங்கம் மற்றும் சட்ட ரீதியான தொண்டர் அமைப்பு ஒன்றும் வெளிப்படுத்தியுள்ளன.

இரு பிள்ளைகளின் தந்தையாரான தெற்கு லண்டனைச் சேர்ந்த விஸ்வலிங்கம் கோபிதாஸ் என்பவர், ஏப்ரல் 2007 ல் விடுதலைப் புலிகளிற்கு ஆதரவு வழங்கினார் என்ற சந்தேகத்தின் பேரில் கொழும்பில் வைத்து கைதுசெய்யப்பட்டார்.

விடுதலைப் புலிகள் அமைப்பிற்கு இரவு நேர தொலைநோக்குக் கருவி ஒன்றை வழங்க முற்பட்டார் என மேற்கொள்ளப்பட்ட குற்றச்சாட்டை 41 வயதுடைய கடை உரிமையாளரான இவர் மறுத்துள்ளார். நண்பனின் வியாபாரத்திற்காகப் பயன்படுத்தப்படும் செல்லிடத் தொலைபேசிகள் மற்றும் பூகோள நிலையறிதல் கருவிகள் ஆகியவற்றையே கொண்டுவந்துள்ளதாக கோபிதாஸ் தெரிவித்தார்.

தான் சிறிலங்காவிற்கு வரும்போது இரவு நேரத் தொலைநோக்குக் கருவியை ஒருபோதும் கொண்டு வரவில்லை என கோபிதாஸ் தெரிவித்தார். பிரிட்டனுக்குத் திரும்பிச் செல்வதற்கு முன்னர் இவர் ஏற்கனவே தான் சுங்கத்திணைக்களத்தில் ஒப்படைத்த பொருட்களைத் தன்னுடன் மீளவும் கொண்டு செல்லும் நோக்குடன் அவற்றைச் சரிபார்க்கச் சென்றிருந்தார்.

இந்தவேளையிலேயே பயங்கரவாத புலனாய்வுத் திணைக்களத்தைச் சேர்ந்த அதிகாரிகள் இவரைக் கைதுசெய்திருந்தனர். இவ்வாறு கைது செய்யப்பட்ட கோபிதாஸ் பயங்கரவாத புலனாய்வுப் பிரிவின் செயலகத்தில் ஒருமாத காலம் வரை தடுப்பில் இருந்தார்.

இதன் பின்னர் இவரால் புரிந்து கொள்ள முடியாத சிங்கள மொழியில் எழுதப்பட்ட அறிக்கை ஒன்றில் கையெழுத்திட்ட பின்னர் கோபிதாஸ் தொடர்ந்தும் ஒன்றரை ஆண்டுகள் வரை காவற்துறையினரில் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டார். இதனைத் தொடர்ந்து கொழும்பிலுள்ள புதிய மகசீன் சிறைச்சாலைக்கு மாற்றப்பட்ட இவர் அங்கே மூன்று ஆண்டுகள் வரை எந்தவொரு குற்றமும் சாட்டப்படாமலும், விசாரணைகள் எதுவுமின்றியும் மூன்று ஆண்டுகளைக் கழித்துள்ளார்.

எந்தவொரு விசாரணைகளுமின்றி தொடர்ச்சியாக தடுப்புக் காவலில் ஒருவரை வைத்திருப்பதற்கு அனுமதிக்கின்ற பயங்கரவாத தடுப்புச் சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்ட பிரிட்டன் குடிமகனாக கோபிதாஸ் உள்ளார்.

சிறிலங்காவில் கடந்த 26 ஆண்டுகளுக்கும் மேலாகத் தொடரப்பட்ட போரானது 2009 ல் புலிகளைத் தோற்கடித்ததன் மூலம் முடிவிற்கு வந்தபோதிலும், இவ்வாறான பயங்கரவாத எதிர்ப்புச் சட்டங்கள் தொடர்ந்தும் நடைமுறையிலிருக்கின்றது.

பெருமளவில் அதிகரித்துள்ள கைதிகளின் எண்ணிக்கை காரணமாக இதய வருத்தங்களாலும், உயர் இரத்த அழுத்தத்தாலும் பாதிக்கப்பட்டுள்ள தனது உடல் நிலைக்குப் பொருத்தமான மருத்துவ வசதியைப் பெறமுடியாதுள்ளதாவும் இதனால் தனது உடல் நிலை பாதிப்படைந்து வருவதாகவும் கோபிதாஸ் தெரிவித்துள்ளார்.

எந்தவொரு படுக்கை விரிப்புக்களோ, காற்றோட்ட வசதிகளோ, மின்விசிறிகளோ இன்றி வெறும் சீமெந்துத் தரையிலேயே கோபிதாஸ் படுத்துறங்குவதாக இவரது உறவினர் ஒருவர் கார்டியனுக்கு தெரிவித்துள்ளார்.

"இங்கு குடிநீர் மற்றும் மலசலகூட வசதிகள் மிகவும் அரிதாகவே காணப்படுகின்றன. அதாவது மலசலகூடத்திற்குச் செல்வதற்கு நீண்ட வரிசையில் காத்திருக்க வேண்டும். 80-100 வரையானவர்களுக்கு இரண்டு மலசலகூடங்கள் மட்டுமே உள்ளன" எனவும் அவர் தெரிவித்தார்.

"காலவரையின்றி தன்னை இவ்வாறு தடுத்து வைத்திருந்து தாங்கொணாத் துன்பங்களை எதிர்கொள்வதை விட இறப்பதோ அல்லது அவர்கள் என்னைச் சுட்டுக் கொல்வதோ மேலானதாகும் எனவும் இதன் மூலம் தான் அனுபவிக்கும் துன்பங்கள் நீங்குவதுடன், தனது குடும்பத்தவர்களது துன்பங்களும் குறைக்கப்படும்" என கோபிதாஸ் தெரிவித்ததாக இவரது பிறிதொரு உறவினர் ஒருவர் தெரிவித்தார்.

ஏனெனில் இவர் தடுத்து வைக்கப்பட்டுள்ளதால் இவர் மட்டும் துன்பங்களை அனுபவிக்கவில்லை. ஒவ்வொரு நாளும் இவருக்கு உணவு கொண்டு வரும் 80 வயதை அடைந்த இவரது தந்தையார் உள்ளடங்கலாக ஒவ்வொருவரும் இவரது நிலையால் நாளும் துன்பத்தைச் சுமந்து வாழ்கிறார்கள் என கோபிதாசின் உறவினர் மேலும் தெரிவித்தார்.

2007ம் ஆண்டிலிருந்து இவர் தொடர்பான விசாரணைகளை துரிதப்படுத்துமாறு சிறிலங்கா அதிகாரிகள் மீது தொடர்ச்சியாக அழுத்தம் கொடுத்து வருவதாகவும் இனிவருங்காலத்திலும் தொடர்ச்சியாக இது தொடர்பான அழுத்தங்கள் மேற்கொள்ளப்படும் எனவும் பிரிட்டன் தூதரக அதிகாரிகள், கோபிதாசை கிரமமுறையில் சந்தித்து வருவதாகவும் பிரித்தானிய வெளியுறவுச் செயலகம் குறிப்பிட்டுள்ளது.

"எந்தவொரு குற்றச்சாட்டுக்களுமின்றி கோபிதாசைத் தொடர்ந்தும் தடுத்து வைத்திருப்பது தொடர்பாக பிரிட்டன் வெளியுறவு மற்றும் பொதுநலவாய அமைச்சரான Alistair Burt, சிறிலங்காவின் வெளியுறவுச் செயலர் பீரிசிடம் இவ்வாண்டு யூன் மாதத்தில் கேள்வியெழுப்பியிருந்தார். இதற்கப்பால் சிறிலங்காவில் நீண்டகாலமாக எந்தவொரு குற்றச்சாட்டுக்களுமின்றி தடுத்து வைத்திருக்கப்படுவது தொடர்பான அந்நாட்டின் சட்ட நடைமுறை தொடர்பாகவும் பிரிட்டன் தனது அதிருப்தியை வழமையாக வெளியிட்டு வருகின்றது" என பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

கோபிதாஸ் இன்னமும் விடுதலை செய்யப்படவோ அல்லது அவரை விடுதலை செய்வதற்கான முயற்சிகள் எடுக்கப்படவில்லை என்பது தொடர்பாக பிரிட்டன் அரசாங்கத்தின் மத்தியில் அதிருப்தி நிலவுவதை கார்டியன் உறுதிப்படுத்துகின்றது. சிறிலங்காவின் மனித உரிமைகள் நிலவரம் தொடர்பாக பிரிட்டன் நாடாளுமன்றில் வியாழன் அன்று விவாதம் மேற்கொள்ளப்படவுள்ளது.

பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் கால வரையறைகளின்றி தடுத்து வைக்கப்பட்டுள்ள கோபிதாஸ் தொடர்பான விடயத்தை Fair Trials International என்கின்ற நிறுவனமானது ஐ.நா மனித உரிமைகள் சபையின் கவனத்திற்குக் கொண்டு சென்றிருந்தது.

"சிறிலங்காவில் இடம்பெற்ற போரானது சில ஆண்டுகளுக்கு முன்னர் நிறைவுபெற்றுவிட்டது. ஆனால் கோபிதாஸ் உட்பட பல ஆயிரக்கணக்கானவர்கள் எந்தவொரு விசாரணைகளோ அல்லது குற்றச்சாட்டுக்களோ இன்றி அவசரகாலச் சட்ட நடைமுறைகளின் கீழ் தொடர்ந்தும் தடுத்துவைக்கப்பட்டுள்ளனர்" என இவ்வமைப்பின் நிறைவேற்று இயக்குனர் யாகோ றுஸ்ஸெல் தெரிவித்துள்ளார்.

"தடுத்து வைக்கப்பட்டு கோபிதாஸ் உடனடியாக விடுதலை செய்யப்பட்டு லண்டனிலுள்ள அவரது மனைவி மற்றும் இரு இளவயது மகள்மாருடன் மீண்டும் சென்று வாழ வழிவகுப்பதற்கேற்ப பிரிட்டன் அதிகாரிகள், சிறிலங்கா அதிகாரிகள் மீது அழுத்தத்தைப் பிரயோகிக்கவேண்டும்" எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

"இவர் தொடர்பான சரியான சாட்சியங்களுடன் நீதியான விசாரணை ஒன்று நடாத்தப்படவேண்டும் என நான் கோரிக்கை விடுக்கின்றேன். நீண்ட காலம் தடுத்து வைக்கப்பட்டுள்ள கோபிதாஸ் தொடர்பில் உடனடி நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு அவர் தொடர்பான பிரச்சினைகள் நீதியான முறையில் தீர்க்கப்படவேண்டும்" என பழமைவாதக்கட்சியின் இல்போர்ட் வடக்குப் பகுதிக்கான நாடாளுமன்ற உறுப்பினரும், தமிழ் மக்களுக்கான அனைத்துக்கட்சி நாடாளுமன்றக் குழுத் தலைவருமான லீஸ்கொற் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

"சிறிலங்காவில் அவசரகாலச் சட்டம் நீக்கப்பட்டதை நாம் வரவேற்கின்றோம். இருந்தும் சிறிலங்காவில் தொடர்ந்தும் நடைமுறையிலுள்ள பயங்கரவாதத் தடைச்சட்டம் மற்றும் தற்போது புதிதாகப் பரிந்துரைக்கப்பட்ட சில சட்ட விடயங்கள் தொடர்பில் நாம் அதிக கவனத்தைச் செலுத்தியுள்ளோம். இதற்கு முன்னர் சிறிலங்காவில் புதிதாக அவசரகாலச் சட்டமானது முன்னறிவித்தல் மற்றும் கால அவகாசத்துடன் நாடாளுமன்றின் ஊடாகவே புதுப்பிக்கப்படுவது வழமையாகும். ஆனால் தற்போது இதுபோன்ற சட்டங்கள் நாடாளுமன்றின் அனுமதியுடன் சரிபார்க்கப்பட்டு நடைமுறைப்படுத்துவதை சிறிலங்கா அரசாங்கம் தவிர்த்து வருகின்றது" என உலக தமிழர் பேரவையின் தலைவரான S.J இமானுவேல் அடிகளார் தெரிவித்துள்ளார்.
Share this article :

கருத்துரையிடுக

 
Company Info | Contact Us | Privacy policy | Term of use | Widget | Advertise with Us | Site map
Copyright © 2011. welvom . All Rights Reserved.
Design Template by panjz-online | Support by creating website | Powered by Blogger