
எண்ணெய் வளத்தையும், வாயு வளத்தையும் கண்டுபிடிப்பதை தடுத்து நிறுத்தவே நோர்வே, புலிகளுக்கு ஆதரவளித்து அவர்களைக் காப்பாற்றி வந்ததாக சிறிலங்காவின் பெற்றோலியத்துறை அமைச்சர் சுசில் பிறேம் ஜெயந்த குற்றம்சாட்டியுள்ளார்.
போரை முடிவுக்குக் கொண்டு வந்திராது போனால் மன்னார் படுக்கையில் மட்டுமல்ல, மன்னார் பக்கமே யாரும் தலைவைத்துப் படுத்திருக்கவே முடியாது என்றும் அவர் கூறியுள்ளார்.
மன்னார் படுக்கையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ள எரிவாயுவை இன்னும் மூன்று வருடங்களில் மின்உற்பத்திக்கும், போக்குவரத்துக்கும் பயன்படுத்த முடியும் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
முதலாவது எண்ணெய் கிணறு மூலம் ஹைட்ரோ கார்பன் என்ற வாயு கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாகவும், இதனை உடனடியாகப் பயன்படுத்த முடியாது என்றும் அவர் கூறியுள்ளார்.
இந்த வாயுவை கடல் மட்டத்துக்கு மேல் கொண்டு வந்தால் மின்உற்பத்திக்காக பயன்படுத்த முடியும் என்றும் அதன் மூலம் மிகக்குறைந்த செலவுடன் மின்உற்பத்தி செய்ய முடியும் என்றும் சுசில் பிறேம் ஜெயந்த குறிப்பிட்டுள்ளார்.
கண்டுபிடிக்கப்பட்டுள்ள எரிவாயு சமையலுக்காகப் பயன்படுத்தப்படும் திரவ எரிவாயு அல்ல என்றும், இந்த இயற்கை எரிவாயுவை திரவநிலைக்குக் கொண்டுவர வேண்டும் என்றும் அவர் மேலும் கூறியுள்ளார்.
இந்த திரவ எரிவாயுவைக் கொண்டே ஜப்பான், கொரியா போன்ற அபிவிருத்தியடைந்த நாடுகள் தமது மின்உற்பத்தித் தேவையில் 30 வீதத்தை பூர்த்தி செய்வதாகவும் அவர் கூறியுள்ளார்.
கடல் மேல்மட்டத்தில் இருந்து சுமார் 1354 மீற்றர் ஆழத்தில் கண்டுபிடிக்கப்பட்ட எரிவாயுவை ஓரிரண்டு நாட்களில் மேலே கொண்டு வந்துவிட முடியாது என்றும் கூறியுள்ள சுசில் பிறேம் ஜெயந்த, கடல் மட்டத்தில் தளம் அமைத்து எரிவாயுவை திரவநிலைக்கு மாற்ற வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.
இதற்காக வெளிநாட்டில் இருந்து தொழில்நுட்பத்தைப் பெற வேண்டியுள்ளதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
கருத்துரையிடுக