அமெரிக்காவில் தடைசெய்யப்பட்டுள்ள விடுதலைப் புலிகள் இயக்கத்துக்கு பொருள் உதவி வழங்கியதாக குற்றம்சாட்டப்பட்ட கனடாவைச் சேர்ந்த தமிழர் ஒருவர் அமெரிக்க மாவட்ட நீதிமன்றத்தில் நேற்று குற்றத்தை ஒப்புக்கொண்டுள்ளார். ஒன்ராரியோவை வசிப்பிடமாகக் கொண்ட ரமணன் மயில்வாகனம் என்பவர், 2006ம் ஆண்டில், விடுதலைப் புலிகளுக்கு நீர்மூழ்கி வடிவமைப்பு தொழில்நுட்ப மென்பொருள் மற்றும் இரவுப்பார்வை கருவிகள் போன்றவற்றை பெற்றுக் கொடுக்கும் சதியில் ஈடுபட்டதாக குற்றம்சாட்டப்பட்டிருந்தார்.
இவர் நேற்று நியுயோர்க் புறூக்லின் மாவட்ட நீதியாளர் முன் தனது குற்றத்தை ஒப்புக்கொண்டுள்ளதை அடுத்து ஆகக்கூடியது 15 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்படும் என்று கருதப்படுகிறது.
கனேடிய குடியுரிமை பெற்றவரான 35 வயதான மயில்வாகனம் ரமணன் முன்னர் அமெரிக்காவில் வசித்து வந்தவராவார்.
2009ம் ஆண்டில் கனேடிய அதிகாரிகளால் ரொரன்ரோவில் கைது செய்யப்பட்ட அவர் அமெரிக்காவிடம் ஒப்படைக்கப்பட்டார். இதையடுத்து அவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
22,000 டொலர் பெறுமதியான நீர்மூழ்கி வடிவமைப்பு மென்பொருளை இவர் பிரித்தானிய நிறுவனம் ஒன்றிடம் இருந்து விடுதலைப் புலிகளுக்காக கொள்வனவு செய்ய முயன்றதாகவும், கனடாவின் பிரிட்டிஸ் கொலம்பியாவில் உள்ள நிறுவனம் ஒன்றிடம் இருந்து புலிகளுக்காக இரவுப்பார்வைக் கருவிகளை வாங்க முற்பட்டதாகவும் ரமணன் மீது குற்றம்சாட்டப்பட்டுள்ளது.
அத்துடன் விடுதலைப் புலிகளுக்கு கணினி கருவிகள், இலத்திரனியல் பொருட்கள், தொடர்பாடல் கருவிகள் போன்றவற்றை வாங்க உதவியதாகவும் இவர் மீது குற்றம்சாட்டப்பட்டுள்ளது.
home



Home
கருத்துரையிடுக