News Update :
Home » , , » இந்தியாவும் ஈழத் தமிழர் பிரச்சனையும் - யதீந்திரா

இந்தியாவும் ஈழத் தமிழர் பிரச்சனையும் - யதீந்திரா

Penulis : ۞உழவன்۞ on வெள்ளி, 10 பிப்ரவரி, 2012 | பிற்பகல் 3:35


[சென்னையில் இருந்து வெளிவரும் 'காக்கைச் சிறகினிலே..' இலக்கிய மாத இதழில் [பெப். 2012] அரசியல் ஆய்வாளரும் எழுத்தாளருமான யதீந்திரா எழுதிய கட்டுரையை அதன் முக்கியத்துவம் கருதி எமது தளத்தில் மீள் பிரசுரம் செய்கிறோம்.]

இந்தியாவின் விருப்பங்களுக்கு மாறாகச் செயற்பட்டதன் விளைவாகவே 1987ல் இந்தியா இலங்கைப் பிரச்சனையில் நேரடியாகத் தலையீடு செய்தது அல்லது இந்தியா கொழும்பைத் தண்டித்தது. இந்த அனுபவத்தையே கொழும்பு தனது பிற்கால வெளியுறவுக் கொள்கை நெறிக்கான பாலபாடமாகவும் பற்றிக்கொண்டது.

01.

இந்தியாவிற்கு அருகில் ஒரு குட்டித் தீவு கடந்த இரண்டாயிரம் ஆண்டுகளாகத் தன்னைப் பேணிப் பாதுகாத்துக் கொண்டிருக்கிறதென்றால், அதற்கு இராஜதந்திரம் தேவை - இது பேராசிரியர் இந்திரபாலாவின் கருத்து.

கொழும்பின் இராஜதந்திர அணுகுமுறைகள் குறித்து பலரும் அவ்வப்போது வியந்து பேசியிருக்கின்றனர். இது பற்றி அதிகம் தமிழில் பேசியவர், ஈழத்தின் மூத்த, முன்னணி அரசறிவியலாளரான மு.திருநாவுக்கரசு ஆவார். கொழும்பின் இராஜதந்திரம் பற்றிய அவதானங்கள் எவையுமே மிகைப்படுத்தல்களல்ல. ஆனால் இந்த இராஜதந்திரத்தின் அடிப்படையாக இருப்பது எங்கள் பக்கத் தவறுகள் தான், என்பதை புரிந்து கொள்வதில்தான், ஈழத்தமிழ்த் தேசியவாதிகள் என்போரும், அந்தத் தேசியவாதிகளின் கருத்துக்களை மறுப்பின்றி ஆமோதித்து வரும் தமிழ்நாட்டு ஆதரவு சக்திகள் என்போரும் தொடர்ந்தும் தடுமாற்றங்களை வெளிப்படுத்தி வருகின்றனர். இது குறித்து ஒரு முதிர்ச்சியற்ற போக்கே தொடர்கிறது.

90களுக்குப் பின்னரான இலங்கையின் வெளியுறவுக் கொள்கையை எடுத்து நோக்கினால் ஒரு விடயம் தெளிவாகும், அது கொழும்பு, இந்தியாவை அச்சாணியாகக் கொண்டே தனது அனைத்துலக உறவுகளைத் திட்ட மிட்டு வருகிறது என்பதுதான். 90களுக்கு பின்னரான இலங்கையின் வெளியுறவுக் கொள்கை என்பதே ஒரு இந்திய முதன்மைவாத கொள்கைதான். ஆனால் இலங்கையின் இத்தகைய நகர்வு, இந்தியாவின் மீதான விசுவாசத்தின் வெளிப்பாடல்ல, மாறாக தெற்காசியாவில் இந்தியாவின் [Inevitable factor] தவிர்க்க முடியாத இடத்தை ஆழமாகப் புரிந்து கொண்டிருப்பதன் வெளிப்பாடாகும்.

இந்தியாவை முன்னிலைப் படுத்தித்தான் கொழும்பு தனது ஒவ்வொரு மூலோபாய நகர்வுகளையும் முன்னெடுத்து வருகிறது. இதனை கொழும்பு தனது கடந்தகால பட்டறிவிலிருந்தே உள்வாங்கிக் கொண்டது. இந்தியாவின் விருப்பங்களுக்கு மாறாகச் செயற்பட்டதன் விளைவாகவே 1987ல் இந்தியா இலங்கைப் பிரச்சனையில் நேரடியாகத் தலையீடு செய்தது அல்லது இந்தியா கொழும்பைத் தண்டித்தது. இந்த அனுபவத்தையே கொழும்பு தனது பிற்கால வெளியுறவுக் கொள்கை நெறிக்கான பாலபாடமாகவும் பற்றிக்கொண்டது.

கொழும்பின் ஆளும் பிரிவு, தங்களது ஒவ்வொரு மூலோபாய நகர்வுகளிலும் மிக நுட்பமாக இந்திய முதன்மை வாதத்தை உள்ளெடுத்துக் கொள்கிறது. இந்தியா பின்வாங்கும் போது, அதனைக் காரணம் காட்டியே இந்தியாவுடன் முரண்படும் சீனா, பாகிஸ்தான் போன்ற சக்திகளை அரவணைத்துக் கொள்கிறது. கொழும்பின் இவ்வகை இராஜதந்திர அணுகுமுறையானது, சதா கொழும்பை அவதானித்துக் கொண்டிருக்க வேண்டிய நிலைக்கு இந்தியாவைத் தள்ளியுள்ளது. இது - கொழும்பின் கடந்த இருபதாண்டுகால இராஜதந்திர நகர்வுகளுக்கு கிடைத்த மிக முன்னேறிய வெற்றியாகும்.

இந்தியா 1987ல் நேரடியாக தலையிட்ட போது, அது எவ்வாறு நீண்டகால நோக்கில் தமிழ் மக்களுக்கு சாதகமாக அமையக்கூடுமென்பதை ஆழமாகப் புரிந்து கொண்டிருந்த ஒரு சிங்களத் தலைவரென்றால், அது இலங்கையின் முன்னாள் அதிபர் ரணசிங்க பிரேமதாசா என்பதில் சந்தேகமில்லை.

உண்மையில் சிங்கள மக்கள் கோவில் கட்டிக் கும்பிட வேண்டிய தலைவரும் பிரேமதாசாதான். அதற்கான அடித்தளத்தைப் பிரேமதாசவின், அரசியல் வழிகாட்டியான ஜே.ஆர்.ஜெயவர்த்தனவே உருவாக்கிக் கொடுத்திருந்தார். ஜே.ஆர். வேறு வழியில்லாமல் இந்தியாவுடன் உடன்பட வேண்டியேற்பட்டாலும், புலிகளின் அரசியல் முதிர்ச்சியற்ற தன்மையை மதிப்பிட்டிருப்பார் என்பதில் ஜயமில்லை.

புலிகள்-இந்திய மோதலை பிரேமதாச நுட்பமாகப் பயன்படுத்திக் கொண்டார். ஈழத் தமிழரின் பக்கமாக இருக்க வேண்டிய இந்தியாவை ஈழத் தமிழரைக் கொண்டே அப்புறப்படுத்தும் தந்திரோபாயத்தில் கொழும்பு வெற்றிபெற்றது. இந்த இடத்தில்தான் புலிகள் தவறிழைத்தனர்.

இந்த நேரத்தில் கேட்கப்பட்ட ஒரு கேள்விக்கு புலிகளின் பதிலோ இவ்வாறு அமைந்திருந்தது - இது, இருதரப்புக்குமான [Convegence of Interest] பொதுவான நலன்சார் முடிவாகும். இது மாவோ சேதுங்குக்கும் - சியாங்கை ஷேக்கிற்கும் இடையிலான உடன்பாட்டிற்கு ஒப்பானது.

ஆனால் இந்த நகர்வில் நன்மையடைந்தது கொழும்பேயன்றி தமிழர்களல்ல. பிரேமதாசவைக் கொலை செய்ததன் ஊடாக தாங்களே வெற்றி பெற்றதான ஒரு தோற்றப்பாட்டை வெகுசனப்படுத்துவதில் புலிகள் வெற்றிபெற்றனர். ஆனால் உண்மையில் ஈழத் தமிழர்களின் நலனில் நின்று நோக்கினால் இது ஒரு மிகப் பெரிய பின்னடைவாகும். ஒரு வரலாற்றுத் தவறாகும். அந்தத் தவறுதான் இன்றைய ஈழத் தமிழரின் அனைத்து அவலத்திற்கும் காரணமாகும்.

02.

இந்தியாவின் கேந்திர முக்கியத்துவத்தை விளங்கிக் கொள்ள வேண்டிய பொறுப்பு, ஈழத் தமிழரின் உரிமைத் தொடர்பில் குரலெழுப்பி வரும் அனைத்துத் தரப்பினருக்கும் உண்டு. ஆனால் துரதிஸ்டவசமாக கடந்தகாலம் என்னும் சிறையிலிருந்து வெளியில் வருவதற்கு நம்மில் அனேகர் விரும்பாததால், இது குறித்து ஒரு வகையான தயக்கமும் தடுமாற்றமுமே எஞ்சியிருக்கிறது.

இந்தியாவிற்கும் இலங்கைக்குமான புவியியல் சார் தொடர்புகள் எத்தகைய நிலையில் இருந்திருக்கிறது என்பதைத் தெளிவு படுத்துவதற்கு காலனித்துவ காலத்தில் நிகழ்ந்த ஒரு சில விடயங்களை இங்கு எடுத்தாளுகின்றேன். இலங்கை தொடர்பில் இந்தியா எவ்வாறானதொரு வகிபங்கைக் கொண்டிருக்கிறது என்பதை விளங்கிக் கொள்வதற்கான ஒரு உசாத்துணையாகவும் இவைகள் இருக்க முடியும்.

"இலங்கையின் கரையோர மாகாணங்களில் பரவிய தொற்று நோய் பிரித்தானியப் படைகளைப் பாதித்தது. குறிப்பாக 51ம் படைப் பிரிவில் மாத்திரம் 300 படை வீரர்கள் இறந்தார்கள். படைவீரர்களின் எண்ணிக்கையில் ஏற்பட்ட வீழ்ச்சியைத் தொடர்ந்து கொழும்பு கட்டளைத் தளபதி இந்திய அரசிற்கு அவசரசமான கடிதத்தை எழுதினார். திருகோணமலையில் ஏற்பட்டிருக்கும் படை வீரர்களின் பற்றாக்குறை திரு கோணமலையின் கோட்டையின் பாதுகாப்புக்கு ஆபத்தானது என இந்தியாவில் இருந்த பிரித்தானிய கட்டளைத் தளபதி தீர்மானித் ததைத் தொடர்ந்து 1803ல் Cap.Everard தலைமையில் சென்னையில் இருந்த 34ம் படையணி உடனடியாகத் திருகோணமலைக் கோட்டைக்குள் தங்க அனுமதிக்கப்பட்டனர். அதனைத் தொடர்ந்து 2 வங்காளச் சிப்பாய் படையணிகளும் திருகோணமலைக்குச் செல்லுமாறு பணிக்கப் பட்டது."

"1879 அசாதாரண வரட்சி யால் ஏற்பட்ட விலை ஏற்றத்தைக் கட்டுப்படுத்த இந்தியாவில் இருந்து அரிசி இறக்குமதி செய்யப்பட்டது. பிரித்தானியாவில் பதிவு செய்யப்பட்ட அரபுக் கப்பல் Mohussan கல்கத்தாவில் இருந்து பெருந்தொகையான அரிசியுடன் திருகோணமலை துறைமுகத்திற்கு வந்து சேர்ந்தது"

"1867 தம்பலகாம நில உடமையாளர்கள் விதை நெல் இல்லாமல் வறுமையில் காணப்பட்டார்கள். இதனால் திருகோணமலை அரச அதிபர் J.W.W. Birch வட்டியில்லாத விதை நெல் வழங்கும் திட்டத்தை அறிமுகம் செய்தார். இந்தியாவில் இருந்து விதை நெல் கொண்டு வரும் திட்டத்தை சிபாரிசு செய்தார்" [காலனித்துவத் திருகோணமலை - கலாநிதி சரவணபவன்]

இந்தத் தகவல்கள் இந்தியாவிற்கும் இலங்கைக்குமான புவிசார் தொடர்பை தெளிவாக படம்பிடித்துக் காட்டுகின்றன. எப்போதுமே இலங்கையில் ஒரு விடயம் என்றால் அதன் முதலாவது தொடர்பாளராக இந்தியாவே இருந்திருக்கிறது. இலங்கையில் இருந்த மன்னர்கள் தமக்கிடையிலான பிணக்குகளைத் தீர்ப்பதற்கு தென்னிந்திய மன்னர்களை அழைத்த வரலாறுதான் நம்மிடமுண்டு. நவீன அரசியலிலும் இதுதான் நடந்தது.

பனிப் போர் காலத்தில், இந்தியா சோவியத்யூனியனைச் சார்ந்திருந்தது. சோவியத் - அமெரிக்க பனிப் போர் காலமென்பது, பிறிதொரு வகையில் புதிய நாடுகளின் உருவாக்கத்திற்கு ஆதரவான காலமாகவும் இருந்தது. இந்த அரசியல் அலையின் வெளிப்பாடாகத்தான் மூன்றாம் உலக நாடுகள் பலவற்றிலும் பல்வேறு விடுதலை அமைப்புகள் வேர்கொண்டன.

அவ்வாறு உருக்கொண்ட போராட்ட அமைப்புக்கள் அனைத்தும் சுதந்திர நாட்டிற்கான முழக்கத்தையே உயர்த்திப் பிடித்தன. இதன் காரணமாகத்தான் அநேகமான விடுதலைப் போராட்ட அமைப்புகள் தம்மை இடதுசாரிகளாகவும் அடையாளப்படுத்திக் கொண்டன.

இப்படியொரு பின்புலத்தில் தான் இலங்கையிலும் பல விடுதலைப் போராட்ட அமைப்புகள் வெளிக்கிளம்பின. இவற்றில் அனேகமானவை இடதுசாரித்துவ முழக்கங்களையே தாங்கியிருந்தன. அவ்வாறு தோற்றம் பெற்ற விடுதலை அமைப்புக்கள் அனைத்தும், இலங்கையின் வடகிழக்குப் பகுதிகளை முன்னிறுத்தி தனிநாடு ஒன்றுக்காகவே போராடியுமிருந்தன.
இந்த இடத்தில் இதுவரை எவருமே உரையாடாத அல்லது பார்க்காத விடயமொன்றும் உண்டு. உண்மையில், இலங்கையின் வடகிழக்குப் பகுதிகளை அடிப்படையாக் கொண்டு மேலெழுந்த தனிநாட்டுக்கான பிரகடனம் என்பதே, இந்தியாவை கருத்தில் கொண்டு முன்வைக்கப் பட்ட ஒன்றுதான். இந்த விடயம் ஈழத்து மற்றும் தமிழ் நாட்டுச் சூழலில் இதுவரை ஆழமாக உரையாடப்பட்டிருக்கவில்லை. தமிழ் நாட்டின் ஈழ ஆதரவாளர்கள் என்போருக்கு இது ஒரு புதிய தகவலாகவே இருக்கும்.

1970களில் தமிழர்களை கடவுள்தான் காப்பாற்ற வேண்டுமென்று கூறிய, ஈழத் தமிழ் மக்களின் தேசியத் தந்தையாகக் கருதப்படும் எஸ்.ஜே.வி. செல்வ நாயகம், [தந்தை செல்வா] 1976ம் ஆண்டிலோ ஈழத் தமிழர்கள் பிரிந்து சென்று தனிநாடு அமைப்பதற்கான பிரகடனத்தை முன்மொழிகின்றார்.

இதனைத் தொடர்ந்து 1977ல் இடம்பெற்ற தேர்தலில் அப்போது வடகிழக்கு வாழ் தமிழ் மக்களை பிரதிநிதித்துவப்படுத்திய தமிழர் விடுதலைக் கூட்டணி பெருவாரியான வெற்றியும் பெறுகிறது. இதுவே பிரிந்து செல்வதற்கான மக்கள் ஆணையாகவும் கொள்ளப்பட்டது.

ஆனால் செல்வநாயகத்தின் மேற்படி நிலைப்பாடானது தெற்கின் சிங்களத் தலைவர்களை எச்சரிக்கும் நோக்கம் கொண்டதேயன்றி, அடிப்படையில் பிரிந்து சொல்லும் நிலைப்பாடல்ல என்று வாதிப்போரும் உண்டு. சிலர் இதனை, ஈழத் தமிழ் மக்களை உணர்வு நிலையில் ஒருங்கிணைக்கும் ஒரு தேர்தல் உத்தி என்றும் சொல்வதுண்டு.

ஆனால் 1970 இற்கும் 1976 இற்கும் இடைப்பட்ட காலத்தில் இடம்பெற்ற சில சம்பவங்களை ஆராயும் போது, செல்வநாயகம் இந்தியாவைக் கருத்தில் கொண்டே பிரிவினைக் கோரிக்கையொன்றை முன்வைக்கும் நிலைக்கு முன்னேறியிருக்கிறார் என்ற முடிவுக்கே வர வேண்டியிருக்கிறது.

தமிழ் மக்களை கடவுள் தான் காப்பாற்ற வேண்டுமென்று கூறிய செல்வா, 1972,பெப்ரவரி-20ல் தமிழ்நாட்டிற்குச் சென்று காங்கிரஸ் மற்றும் தி.மு.க கட்சிகளின் தலைவர்களைச் சந்திக்கின்றார். தமிழ் மக்கள், பிரிந்து சென்று தனிநாடு அமைக்கும் கோரிக்கையை வலியுறுத்தி வருவதாகவும், அது ஒன்றே தங்களை பாதுகாத்துக் கொள்வதற்கான ஒரேயொரு மார்க்கமென்றும் தங்களை நிர்பந்தித்து வருவதாகவும் மேற்படி சந்திப்பின் போது, செல்வா குறிப்பிடுகின்றார்.

இதனைத் தொடர்ந்து செல்வா, 1972 ஒக்டோபரில் தனது நாடாளுமன்றப் பதவியிலிருந்து விலகுகின்றா. செல்வாவின் இந்த நடவடிக்கைகள் அனைத்துக்கும் ஒரு உந்துசக்தியாக இருந்தது 1971இல் இடம்பெற்ற பங்களா தேசின் உருவாக்கமாகும். பங்களாதேசின் பிறப்பின் பின்னால் இந்தியா இருந்தது என்பதொன்றும் இரகசியமானதல்ல.

'பங்காளதேஸ் தனிநாடாகியமை தமிழரின் அரசியல் முன்நகர்வில் தவிர்க்க முடியாத தாக்கத்தை ஏற்படுத்தியது. சமஸ்டி நிலைப்பாட்டை கைவிட்டு, தனிநாட்டை பிரகடனம் செய்யும்படியான உத்தேவகத்தையும் ஏற்படுத்தியது' - கலாநிதி. ஏ.ஜே.வில்சன்.

மேலும் கலாநிதி வில்சன் பதிவு செய்திருக்கும் பிறிதொரு விடயம், இங்கு மிகுந்த முக்கியத்துமுடையதாகும் - தமிழ்நாட்டுத் தலைவர்களை சந்தித்த மேற்படி பெப்பிரவரியில், வடக்கின் கரையோரக் கிராமமான வல்வெட்டித்துறையில் அனைத்துக்கட்சிகளின் கூட்டமொன்று இடம்பெறுகிறது. காணி உரிமைகள், பிராந்தியரதியான சுயாட்சி, குடியேற்றக் கொள்கை மற்றும் தொழில் வாய்ப்புக்களின் புறக்கணிப்பு ஆகியவற்றுக்கு எதிரான [Six-point formula] ஆறு அம்சக் கோரிக்கையொன்று அங்கு முன்மொழியப்பட்டது.

இது பங்களாதேசின் சுதந்திர யுத்தத்திற்கு முன்னர், [Sheikh Mujibur Rahuman] ஷேக் முஜிபுர் ரகுமானால் அரசியலமைப்புப் பேரவைக்கு சமர்பிக்கப்பட்ட ஆறு அம்சக் கோரிக்கைகளை மீள்நினைவுபடுத்துவதாகவே இருந்தது.

மேற்படி தகவல்கள், செல்வநாயகம் இந்தியாவை கருத்தில் கொண்டே தனிநாட்டுக் கோரிக்கையை முன்வைத்திருக்கின்றார் என்ற முடிவுக்கு வருமாறு நம்மை நிர்பந்திக்கிறது. பங்களாதேசுக்கு உதவியது போன்று, இந்தியா ஈழத் தமிழர்களுக்கும் உதவ முன்வரும் என்னும் நம்பிக்கையே செல்வநாயகத்திடம் இருந்திருக்கிறது.

பங்களாதேஸ் சுதந்திர நாடாக உருவாகிய அதே 1971ல் இலங்கையின் தெற்குப் பகுதிகளில் ஜே.வி.பி எனப்படும் இடதுசாரி இளைஞர் குழு, அரசை வீழ்த்துவதற்கான கிளர்ச்சியிலும் ஈடுபட்டுக் கொண்டிருந்தது. மேற்படி ஜே.வி.பி இடதுசாரித்துவத்தையும், மாவோவின் இந்திய விரிவாக்கா முழக்கத்தையும் ஒருங்கே சுமந்து கொண்டிருந்த அமைப்பாகும்.

தெற்கில் மேலெழுந்திருக்கும் இந்திய எதிர்ப்பு வாதத்தை எதிர்கொள்ளும் நோக்கில். இந்திய ஆதரவு நிலையை வெளிப்படுத்திவரும் ஈழத் தமிழர்களுக்கு இந்தியா பக்கபலமாக இருக்கும் என்னும் கணிப்பும் செல்வாவிடம் இருந்திருக்கக்கூடும்.

எனது சில ஊகங்களை கட்டுரைக்கு வலுச்சேர்க்கும் வகையில் கையாண்டிருக்கிறேன். 1971 கிளர்ச்சியைக் கட்டுபடுத்துவதற்கு சிறிமாவோ அரசிற்கு இந்தியா உதவியது என்பதும் கவனிக்கத்தக்கது.

03.

1970களில் வேர்கொள்ளத் தொடங்கிய ஆயுத ரீதியான போராட்டச் சிந்தனைகள், படிப்படியாக ஈழத் தமிழர்களுக்கான போராட்டத்தை இளைஞர்களின் பக்கமாக இடம்மாற்றிக் கொண்டிருந்தது. அவ்வாறு தோற்றம் பெற்ற அனைத்து ஆயுத விடுதலை இயக்கங்களும் எஜ.ஜே.வி. செல்வநாயகத்தின் தமிழீழ முழக்கத்தையே தங்களது முழக்கமாகவும் வரித்துக் கொண்டன. அன்றைய சூழலில் சுமார் 32 ஆயுத ரீதியான அமைப்புகள் இயங்கியதாக சில பதிவுகள் கூறுகின்றன. அதில் முதன்மையான ஒரு சில அமைப்புகளும் பல்வேறு சிறு குழுக்களும் அடங்கும்.

ஜனநாயக அரசியல் தளத்தில் தனிநாட்டுக் கோரிக்கை வழிமொழியப்பட்ட அதே காலப்பகுதியில் இலங்கையில் ஆட்சி மாற்றமொன்றும் இடம் பெறுகின்றது. பெரும்பான்மை பலத்துடன் ஜே.ஆர்.ஜயவர்த்தன தலைமையிலான தாராளவாத நிலைப்பாடுகொண்ட ஐக்கிய தேசியக் கட்சி ஆட்சியைக் கைப்பற்றுகின்றது.

1977ல் செல்வநாயகம் [தேர்தலுக்கு முன்பதாக] இறக்கின்றார். செல்வநாயகத்திற்கு பிற்பட்ட அரசியல் என்பது செல்வநாயகத்தின் தமிழீழ முழக்கத்தை ஆயுதரீதியான விடுதலை அமைப்புகள் தத்தெடுத்துக் கொண்ட காலமாகவே கழிந்தது.

விடுதலைப் புலிகள் இயக்கம் ஏனைய பிரதான விடுதலை அமைப்புகளை பலவீனப்படுத்தி தடைசெய்ததைத் தொடர்ந்து, செல்வநாயகத்தின் தமிழீழ முழக்கத்தின் ஏகபோக உரித்தாளர்களாகினர். ஆனால் செல்வநாயகத்தின் நேரடி வாரிசுகளான கூட்டணித் தலைவர்களோ, தமிழீழக் கொள்கையை எப்போதோ கைவிட்டிருந்தனர்.

இந்தியாவை நம்பி முன்னிறுத்தப்பட்ட தமிழீழக் கோட்பாட்டை உண்மையிலேயே இந்தியா எவ்வாறு நோக்கியது?

இந்தியா தமிழீழ முழக்கத்தை தாங்கியிருந்த ஈழத்து ஆயுத இயக்கங்களுக்கு பயிற்சியளித்ததும், ஆயுதங்கள் வழங்கியதும், தமிழ் நாட்டில் சுயாதீனமாக இயங்குவதற்கு அனுமதித்திருந்ததும், இந்தியா தமிழீழத்திற்கு ஆதரவாக இருப்பது போன்ற தோற்றத்தை ஏற்படுத்தியது உண்மைதான்.

இந்தியாவிடம் பயிற்சி பெற்ற இயக்கங்களிடமும் அத்தகையதொரு நம்பிக்கையே மேலோங்கியிருந்தது. ஆனால் இந்தியாவிடம் அப்படியான நிலைப்பாடு எதுவும் இருந்திருக்கவில்லை.

1987ல் இந்தியா இலங்கைப் பிரச்சனையில் நேரடியாக தலையீடு செய்த போது, இது வெள்ளிடைமலையானது. ஏனெனில் இலங்கை பாக்கிஸ்தான் அல்ல. ஆனால் இலங்கையை ஒரு கட்டுக்குள் வைத்திருக்க வேண்டிய தேவை இந்தியாவிற்கு இருந்தது.

ஜே.ஆர்.ஜெயவர்த்தனவின் வெளிவிவகாரக் கொள்கை இந்தியாவை எரிச்சலடையச் செய்தது. சோவியத் சார்பாக இயங்கிய இந்தியாவின் பிராந்திய நலன்கள், ஜே.ஆரின் மேற்கு சார்பான நிலைப்பாட்டால் அச்சுறுத்தலுக்குள்ளாவதாகவே இந்தியா கருதியது. இதன் தொடர்ச்சியாகத்தான் இந்தியா ஈழத் தமிழர் பிரச்சனையைக் கையில் எடுத்தது.

இது பற்றி கொழும்பின் ஆளும் பிரிவினரின் நெருங்கிய நண்பரும், தீவிரவாத நிபுணருமான ரொஹான் குணரத்தின பதிவு செய்திருக்கும் விடயமொன்று இங்கு எடுத்தாளத்தக்கது - நீங்கள் [Non alliance] அணிசாராப் பொறுப்பிற்கு வெளியில் செல்கின்றீர்கள். நீங்கள் [Voice of America] அமெரிக்க குரலான வானொலி நிலையத்திற்கு இடமளித்திருக்கின்றீர்கள். நீங்கள் திருகோணமலை துறைமுகத்தை, [American fleet] அமெரிக்கக் கடற்படைக்கு வழங்கியிருக்கின்றீர்கள், அங்கு [Oil storage] எண்ணெய் சேமிப்பு வசதிகள் இருக்கின்றது. நீங்கள் இஸ்ரேலிய நலன்பிரிவுக்கு இடமளித்திருக்கின்றீர்கள். நீங்கள் தென்னாப்பிரிக்க கூலிப்படையினர் வருவதற்கு அனுமதித்திருக்கின்றீர்கள். இவையெல்லாம் இந்திய நலன் களுக்கு இடையூறானவை - இந்திய வெளியக உளவுத் துறையான 'றோ'வின் நிறுவகத் தலைவரான, ஆர்.என்.காவோ தன்னிடம் இவ்வாறு கூறியதாக ரொஹான் பதிவு செய்திருக்கின்றார்.

இந்தப் பின்னணியில்தான் இந்தியா, கொழும்பை தனது வழிக்குக் கொண்டு வருவதற்காக இலங்கையின் வடகிழக்கில் கொதித்துக் கொண்டிருந்த இனப் பிரச்சனையைக் கையில் எடுத்தது. அதுவரைக்கும் இலங்கையின் உள்ளக விடயமாகக் கருதப்பட்ட தமிழர் பிரச்சனை, இந்தியாவின் பிராந்திய நலன்களுடன் இணைக்கப்பட்டது. எனவே இலங்கைப் பிரச்சனையை இந்திரா காந்தி கையில் எடுத்தமை என்பது, முழுக்க முழுக்க இந்திய நலன்களை இலக்காகக் கொண்டது என்பதை விளங்கிக் கொள்வதில் சிரமப்பட வேண்டிய தில்லை.

'இந்திராகாந்தி இலங்கையின் இனப்பிச்சனையை ஆகக் குறைந்தது தனது இரு இலக்குகளை அடையப் பயன்படுத்திக் கொண்டார் - முதலாவது ஜெயவர்த்தனவை இந்திய முன்னுரிமைகளுக்கு ஏற்றவாறு ஆட்டுவித்தல், இரண்டாவது 1967ல் நழுவவிட்ட தமிழ் நாட்டில் மீண்டும் காங்கிரஸ் ஆட்சியை நிலைநிறுத்தல். அகாலி தளத்தை நிலைகுலையச் செய்வதற்காக, இந்திராகாந்தி எவ்வாறு காலிஸ்தான் தீவிரவாத குழுவிற்கு ஆதரவு வழங்கினாரோ, அதனையொத்த அணுகுமுறையையே ஜெயவர்த்தன விடயத்திலும் கைக்கொண்டார். இந்தியாவின் பிராந்திய கொள்நெறிச் சட்டகத்திற்கு வெளியில் சென்று கொண்டிருந்த ஜெயவர்த்தனவிற்கு, பாடம் புகட்டுவதற்காக ஈழ விடுதலை இயக்கங்களை ஆதரிக்கும் முடிவை எடுத்தார் இந்திரா' - சங்கரன் கிருஸ்ணா.

தாயாரால் அடித்தளமிடப்பட்ட விடயத்தையே ராசீவ் காந்தி பொறுப்பேற்றார். ஒரு சில ஈழத் தேசியவாத ஆய்வாளர்கள் மிகைப்படுத்திச் சொல்வது போன்று, இந்திராகாந்தி இருந்திருந்தால் இவ்வாறு நடந்திருக்காது, என்பதெல்லாம் வெறும் மாயை என்பதே என் வாதம்.

அவ்வாறான மதிப்பீடுகள், இந்திய அமைதிப்படைக் காலத்தில் நடைபெற்ற சில கசப்பான சம்பவங்களின் உந்துதல்களே யன்றி வேறில்லை. இந்திரா காந்தியும் சரி அவரது இடை வெளியை நிரப்பிய ராசீவ் காந்தியும் சரி, ஈழத் தமிழ் இயக்கங்களின் தனிநாட்டுக் கோரிக்கையை எந்தவொரு சந்தர்ப்பத்திலும் ஆதரித்திருக்கவில்லை. ஆனால் அவர்கள் அத்தகையதொரு உள்நோக்கம் கொண்டு இயங்கியதாக சிங்கள அடிப்படைவாதிகள் அளவுக்கதிகமாகவே பேசியிருக்கின்றனர்.

இதன் வெளிப்பாடு தான், கடற்படை அணிவகுப் பொன்றின் போது, படைச் சிப்பாய் ஒருவர் ராசீவ் காந்தியை தாக்க முற்பட்டிருந்தார். ஆனால் இலங்கையின் சிறுபான்மை தமிழ் மக்களின் பிரச்சனைக்கு ஒரு நியாமான தீர்வு காணப்பட வேண்டுமென்னும் ஆர்வம் அவர் களிடம் இருந்தது. அது எவ்வாறு அமைய வேண்டுமென்பதை இந்தியாவே தீர்மானிக்கும் என்னும் முடிவும் அவர்களிடம் இருந்தது. குறிப்பாக ராசீவ் காந்தி 'இனப்பிரச்சனையை இழுத்தடிப்பதைவிட, அதற்குத் தீர்வு காணப்பட வேண்டுமென்பதில் நேர்மையான ஆர்வத்தைக் கொண்டிருந்தார்' - சங்கரன் கிருஸ்ணா.

04.

ராசீவ் காந்தியின் ஆர்வத்திற்கும் பிரபாகரனின் ஆர்வத்திற்கும் இடையில் எவ்வாறான தொரு இடைவெளி இருந்தது என்பதுதான் பிற்கால அரசியலானது. இந்தியாவின் பிராந்திய அக்கறைகளை விளங்கிக் கொண்டு முடிவுகளை எடுக்கும் ஆற்றல் விடுதலைப்புலிகளிடம் இருந்திருக்கவில்லை. புலிகளின் அரசியல் முதிர்ச்சியற்ற அணுகு முறையானது இறுதியில், இந்திய ஆளும் பிரிவினருடன் ஒரு தீராப் பகையை தோற்றுவிப்பதாக முடிவுற்றது.

இந்தியாவை வெளி யேற்றுவதில் பிரேமதாசவுடன் பொதுநலன்சார் இணக்கப் பாட்டை ஏற்படுத்திக் கொண்ட பிரபாகரன், அத்தகையதொரு இணக்கப்பாட்டை ராசீவ் காந்தியுடன் ஏற்படுத்திக் கொள்ள முன்வராததுதான் அனைத்துப் பிரச்சனைகளினதும் அடிப்படையாக இருந்தது. ஆனால் ஆரம்பத்தில் விடுதலைப்புலிகள் விடயத்தில் ராசீவ்காந்தி கடும் போக்காளராக இருந்திருக்க வில்லை. ஆனால் காலப் போக்கில் அத்தகையதொரு நிலையை நோக்கி முன்னகர வேண்டிய நிலைக்கு ராசீவ் தள்ளப்பட்டார்.

மிக இளம் வயதில், இந்தியாவின் சர்வவல்லமை பொருந்திய நபராக வெளித்தெரிந்த ராசீவ் காந்தியின் அயலுறவு தொடர்பான முதலா வது நகர்வே தோல்வியில் முடிவடைவதை ராஜீவால் சகித்துக் கொள்ளமுடியவில்லை. ஒரு சில தேசியவாத எழுத்தாளர்கள் மிகைப்படுத்துவது போன்று புலிகளை பூண்டோடு அழிக்க வேண்டுமென்னும் எண்ணம் இந்தியாவிற்கு இருந்திருக்கவில்லை. ஆனால் புலிகளைப் பலவீனப்படுத்தாமல் தாங்கள் விரும்பும் ஒரு அரசியல் இணக்கப் பாட்டை ஏற்படுத்த முடியாதென்ற நிலைமை இருந்தது.

ஒரு நாட்டின் வெளி விவகாரக் கொள்கை என்பது, அந்த நாட்டின் நலன்களை அடிப்படையாகக் கொண்ட ஒன்றாகும். எந்தவொரு நாடும் தனது நலன்களைப் புறம்தள்ளி விட்டு பிறிதொரு நாட்டிற்கு அல்லது அமைப்புகளுக்கு உதவுவதில்லை. இது ஒரு சாதாரண வெளிவகார உண்மையும் கூட. இந்த அடிப்படையில்தான் இந்தியத் தலையீட்டின் அரசியலையும் நாம் புரிந்துகொள்ள வேண்டும். இந்தியா தனது பிராந்திய நலன்களை முன்னிறுத்தியே எங்களைக் கையாண்டது. ஆனால் நாங்கள் எங்களது நலன்களில் நின்று இந்தியாவைக் கையாண்டிருக்கவில்லை. இந்தியாவின் ஆர்வங்களுடன் எங்களது நலன்களை எவ்வாறு பொருத்துவது என்னும் சூட்சுமம் எங்களுக்குத் தெரிந்திருக்கவில்லை குறிப்பாக தமிழீழ விடுதலைப் புலிகளுக்குத் தெரிந்திருக்கவில்லை.

இந்திய அமைதிப் படைக் காலத்தில் நடைபெற்ற சம்பவங்கள் எவற்றையும் நான் இங்கு நியாயப்படுத்தவில்லை. ஆனால் எந்தவொரு அரசியல் நிலைப்பாட்டிற்கும் ஒரு படிமுறைசார்ந்த வளர்ச்சிப் போக்கிருக்கிறது. கிடைக்கும் சந்தர்ப்பங்களை கையாண்டு, அவற்றின் போதாமையை நடைமுறை ரீதியாக நிரூபித்து முன்னேறுவதே சரியானதொரு அரசியல் அணுகுமுறையாகும். ஆனால் இந்தியாவின் நேரடித் தலையீட்டின் போது அத்தகையதொரு அரசியல் முதிர்ச்சியை புலிகள் காட்டியிருக்கவில்லை.

'விடுதலைப்புலிகளின் தேவை ஒரு நடைமுறைசார் அரசு என்றால், அது குறித்தும் நான் பேசத் தயாராக இருக்கின்றேன் என்று ராசீவ் முரசொலி மாறனிடம் கூறியிருக்கின்றார். ஆனால் விடுதலைப்புலிகள் இந்தியா விற்குப் போதுமான கால அவகாசத்தைக் கொடுத்திருக்க வில்லை. மகாணசபை முறைமை ஈழத் தமிழர் உரிமைகளை நிறைவுசெய்யப் போதுமானதல்ல என்பதை இந்தியாவை வைத்துக் கொண்டே நாம் நிரூபித்துக் காட்டியிருக்க வேண்டும். ஆனால் பிரபாகரனோ இந்தியாவை அரசியல் அரங்கிலிருந்து வெளி யேற்றுவதன் மூலம் தனது இலக்கை அடையமுடியுமென்று நம்பினார்' - டி.பி.எஸ். ஜெயராஜ்.

மிகச் சிறியதொரு அணியான விடுதலைப்புலிகள் அமைப்பு, தெற்காசியாவின் பலம்பொருந்திய இந்தியாவின் படைகளை இராணுவ ரீதியாக எதிர்கொண்டமையானது, வெகுசனங்கள் மத்தியிலும் ஒரு கிளர்ச்சியூட்டக் கூடிய உளவியலை கட்டமைத்தது. விடுதலைப் புலிகளிடமும் அத்தகையதொரு பார்வையே இருந்தது. இந்திய இராணுவம் வெளியேறிய பின்னர் இலங்கை இராணுவம் தமிழர்களுக்கு எதிராகத் திரும்பினால் என்ன செய்வீர்கள் - என்ற கேள்விக்கு அவர்கள் அளித்த பதில், புலிகள் ஒருவகை துணிகர உளவியலால் பீடிக்கப்பட்டிக்கின்றனர் என்பதையே காட்டியது - தமிழீழ விடுதலைப்புலிகள் வலிமைவாய்ந்த 100,000 இந்தியப் படைகளை எதிர்கொண்டிருக்கின்றனர். எனவே இலங்கை இராணுவத்தை எதிர்கொள்ளுவதென்பது சிக்கலாக இருக்காது.

எனது கணிப்பில் விடுதலைப் புலிகளிடம் இராணுவவாதம் மேலோங்கி, அரசியல் உபாயங்கள் மீதான நம்பிக்கை கடைநிலைக்குச் செல்வதில் மேற்படி சம்பவமே முக்கியப் பங்காற்றியது. இந்தியாவைப் பகைத்துக் கொண்டு தன்னால் ஒரு தமிழீழத்தை எடுக்க முடியுமென்னும் நம்பிக்கையும் பிரபாகரனுக்குள் குடிகொள்ளவும் இதுவே காரணமாகியது எனலாம்.

பிற்காலத்தில் அவர் இலங்கை அரசுக்கு எதிராகப் பெற்றுவந்த இராணுவ வெற்றிகளும் அவரை மீளமுடியாதவாறான இராணுவ மனோநிலைக்குள் சிறைப்படுத்தியது.

ஆனால் இந்தியாவிற்கு சண்டித்தனம் காட்டிக் கொண்டு அல்லது இந்தியாவை ஓரங்கட்டிக் கொண்டு ஒரு தீர்வை ஈழத் தமிழர்கள் பெறமுடியாது, என்பதையே கடந்தகால வரலாறு தெட்டத் தெளிவாக நிரூபித்திருக்கிறது. கொழும்பு இந்த விடயத்தை கெட்டியாகப் பிடித்துக் கொண்டது.

பிரபாகரன் இந்தியாவை தவிர்த்துச் சிந்திக்க, கொழும்போ இந்தியாவை முதன்மைப்படுத்தி தனது அயலுறவைத் திட்டமிட்டது. எங்களது தவறுகளால் வெளித்தெரிந்த இடைவெளியை கொழும்பு தனது இராஜதந்திர அணுகுமுறைக்குப் பயன்படுத்திக் கொண்டது.

"பிரதமர் ராசீவ்காந்தி தெற்காசியக் கப்பலின் கேப்டன். அவர் அழைத்துச் செல்லும் இடத்திற்குத்தான் நாங்கள் செல்வோம். அவரையும் இந்தியாவையும் பொருத்துத்தான் எல்லாம். ஆனால் அவர் எங்களைச் சரியான திசையில் அழைத்துச் செல்கிறாரா என்பதுதான் என் கவலை"- 1985ல் ஜே.ஆர்.ஜெயவர்த்தன இந்தியாவின் பிரபல பத்திரிகையாளரும், இந்திரா காந்தியின் நன்பருமான குல்திப் நய்யாரிடம் குறிப்பிட்டவைகளே இவை.

ஜெயவர்த்தனவின் புரிதல் இவ்வாறிருக்க. பிரபாகரனின் பார்வையோ கேப்டனை இல்லாமலாக்கிவிட்டால், தெற்காசியக் கப்பல் வேறு பக்கம் போவிடும் என்பதாக இருந்தது. இதுவே பிரபாகரன் பின்னர் ஒரு வலாற்றுத் தவறை நோக்கிப் பணிக்கவும் காரணமாகியது

05.

இன்று ஒரு புதிய சூழல் உருவாகியிருக்கிறது. எவர் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் இது முற்றிலும் புதியதொரு சூழல் என்பதுதான் உண்மை. இதுவரைக்கும் இந்திய மத்திய அரசிற்கு எது பகையுணர்வுமிக்க நெருக்கடியாக இருந்ததோ அது இப்போது இல்லை. ஈழத் தமிழ் அரசியல் சக்திகள் இந்தியாவையும். இந்தியா ஈழத்தமிழ் சக்திகளையும் அணுகுவதில் இருந்த தடைகளும் இப்போது இல்லை. எனவே இந்தப் புதிய சூழலை ஈழத்தமிழ் அரசியல் சக்திகளும், ஈழத் தமிழர்களின் உரிமைகளுக்காக குரல் கொடுத்துவரும் தமிழ் நாட்டின் ஆதரவு சக்திகளும் எவ்வாறு கையாளாப் போகின்றனர் என்பதுதான் கேள்வி.

நமது இச்சைகளில் இருந்து அரசியலைப் பார்க்காமல், சூழலில் இருந்து அரசியலைப் பார்க்கும் அணுகுமுறையொன்று நமக்குத் தேவைப்படுகிறது. 1987ல் இருந்த இந்தியாவல்ல இப்போது இருப்பது. 90களில் இருந்த உலகமல்ல இப்போது இருப்பது. அன்று [ஜெயவர்தனாவின்] எந்த அணுகு முறையை இந்தியா பிரச்சனையாகப் பார்த்ததோ, அத்தகைய பிரச்சனைகள் எவையும் இன்றைய இந்தியாவிற்கு பிரச்சனையான விடயங்களல்ல. சோவியத் சார்பு நிலை பிராந்தியக் கொள்கையல்ல இப்போதைய இந்தியாவின் கொள்கை.

சமீபகாலமாக அமெரிக்கா கொழும்பின் மீது, குறிப்பாக அரசின் போர்க் குற்றச்சாட்டுக்கள் குறித்து அழுத்தங்களை வெளியிட்டுவருவதை இந்தப் பின்னணியிலேயே நாம் விளங்கிக் கொள்ள வேண்டும். கொழும்புடனான சீன நெருக்கம் இந்திய-அமெரிக்க மூலோபாய நலன்களுக்குக் குந்தகமாக இருக்கிறது. ஏனெனில் இது நிக்சன் காலத்து சீனாவல்ல. எனவே எதிர்காலத்தில் இலங்கை பல்வேறு முரண்பாடுகளின் களமாக மாறக் கூடும். இத்தகைய மாற்றங்களுக்கு ஊடாகவெல்லாம் பயணிக்க வேண்டிய நிலையில் தான் இன்றைய ஈழத் தமிழர் அரசியல் இருக்கிறது.

கொழும்பின், சீனா-பாகிஸ்தானிய உறவு நிச்சயமாக இந்தியாவின் விருப்புக்குரிய ஒன்றல்ல. அதே போன்று கொழும்பின் ஈரானிய உறவு அமெரிக்க விருப்புக்குரிய ஒன்றல்ல. கொழும்பின் சீன-பாகிஸ்தானிய உறவானது நிச்சயமாக இந்தியாவை ஒருவகை நிதான நிலைக்குள் முடக்கிவைக்கும் சாணக்கியமாகும். ஆனால் அமெரிக்காவை எந்தவொரு வரையறைக்குள்ளும் முடக்க முடியாது. இப்படியான பல்வேறு விடயங்களை நாம் பரிசீலிக்க வேண்டியவர்களாய் இருக்கிறோம்.

சிலர் விவாதிப்பது போன்று ஈழத் தமிழர் பிரச்சனை தொடர்பில் இந்தியா 87இற்குத் திரும்ப முடியாது. ஆனால் இந்தியாவிற்கு ஒரு தீர்வு குறித்து அழுத்தத்தை கொடுப்பதற்கான கடப்பாடுண்டு. அந்தக் கடப்பாட்டை யார் வலியுறுத்துவது.

உலகிலேயே ஈழத் தமிழர் பிரச்சனை தொடர்பில் இந்திய மத்திய அரசிற்கு அழுத்தம் கொடுப்பதற்கான ஆற்றல் தமிழ் நாட்டிற்கு மட்டுமே உண்டு. இதற்கு முதலில் கடந்த கால வரலாற்றிலிருந்து நாம் அதிகம் கற்றுக் கொள்ள வேண்டியிருக்கிறது.

இந்தியாவின் பிராந்திய நலன்களை புறம்தள்ளும் வகையிலான அரசியலை கைவிட்டு, அவற்றுடன் ஒத்திசைந்து போய் எவ்வாறு ஈழத் தமிழர்களுக்கு உதவ முடியுமென்று பார்க்க வேண்டும். தமிழீழ விடுதலைப் புலிகள் முன்னிறுத்திய அரசியலை கைவிட்டு, புதிய நிலைமைகளுக்கு ஏற்றதான அரசியலை முன்னிறுத்த வேண்டும். புலிகளை முதன்மைப்படுத்திக் கொண்டு இந்திய மத்திய அரசை அணுக முடியாது, குறிப்பாக காங்கிரஸ் இந்தியாவை அணுக முடியாது.

இந்திய மத்தியரசு எந்தெந்த விடயங்களில் இலங்கை தொடர்பாக கரிசனை கொள்கின்றதோ அதனை அமுல்படுத்துவதற்கான அழுத்த அரசியலை மேற்கொள்ள வேண்டும். கவனிக்க. அழுத்த அரசியல் என்பது எதிர்ப்பரசியல் அல்ல.

தமிழ் நாட்டில் இருந்து எழும் அழுத்தங்கள், ஆளும் காங்கிரஸ் தலைமையிலான அரசாங்கத்திற்குள்ள கடப்பாட்டை வலியுறுத்துவதாக அமைய வேண்டும். கடந்த காலத்தின் கசப்பான அனுபவங்களின் வழியாக மட்டுமே அரசியலை நோக்குவோமாயின், அது நம்மை மேலும் தனிமைப்படுத்தவே வழிவகுக்கும்.

இந்த இடத்தில் தமிழ்நாட்டிலுள்ள ஈழ ஆதரவு சக்திகளின் உணர்ச்சி வசப்பட்ட அரசியல் புரிதலிலுள்ள சிக்கல்கள் தனித்துப் பார்க்கப்பட வேண்டியவை. இது குறித்து பிறிதொரு சந்தர்ப்பத்தில் பார்ப்போம்.

இந்தியாவினை எவ்வாறு பார்க்க வேண்டும், கடந்தகாலத்தில் இந்தியாவைக் கையாளுவதில் தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கம் விட்ட தவறுகளின் தாக்கம் எத்தகையது, இன்றைய புதிய அரசியல் சூழலும் அது வெளிப்படுத்தியிருக்கும் புதிய வாய்ப்புக்களும், அவற்றை எவ்வாறு எதிர் கொள்ள வேண்டும் போன்ற விடயங்களை இங்கு பதிவு செய்திருக்கின்றேன்.

இது விரிவான ஆய்வுக்குரிய ஒன்றாகும். அத்தகைய ஆய்வொன்றை நோக்கிச் செல்வதற்கான முன்வரைபுக் குறிப்புக்களாக இவற்றைக் கையாள முடியும்.

'கடந்த காலத்தின் தவறுகளை மறப்போர் அதன் தவறுகளை மீளவும் செய்யச் சபிக்கப்பட்டவர்களாவர் என்பதை நாம் ஒவ்வொருவரும் நினைவில் இருத்திக் கொள்ள வேண்டிய காலமிது' -ஜோர்ஜ் சத்நயணா.
Share this article :

கருத்துரையிடுக

 
Company Info | Contact Us | Privacy policy | Term of use | Widget | Advertise with Us | Site map
Copyright © 2011. welvom . All Rights Reserved.
Design Template by panjz-online | Support by creating website | Powered by Blogger