News Update :
Home » » ஆனையிறவும் அந்த நாட்களும்… (ஆனையிறவு பற்றிய நினைவலைகள்)

ஆனையிறவும் அந்த நாட்களும்… (ஆனையிறவு பற்றிய நினைவலைகள்)

Penulis : ۞உழவன்۞ on ஞாயிறு, 22 ஏப்ரல், 2012 | AM 9:48

உண்ணி வெட்டை. அந்த வெட்டையில் உண்ணிகளோடு பட்ட துயர் தாளாமல் நாம் இட்ட காரணப்பெயர் இது.பரந்தனிலிருந்து இயக்கச்சி போகும்போது ஆனையிறவுப் பெயர்ப் பலகையைக் கடந்தவுடன் வடகிழக்குத் திசையில் பாருங்கள் நீண்ட நீர்ப்பரப்புக்கு அப்பால் திட்டாக ஒரு நிலம் தெரியும். அங்கே நாம் நின்றோம், 1992ஆம் ஆண்டின் கடுங்கோடை காலத்தில். ஆனையிறவை விடமாட்டோம் என்று சிறிலங்கா படையினரும், அவர்களை அங்கிருக்க விடவேமாட்டோம் என்று நாமும் வரிந்து கட்டிக்கொண்டு அந்த வெளியில் கிடந்தோம். எங்களுடைய கண்ணுக்கு இராணுவ நடமாட்டம் தெரியும். நாம் எழுந்து நடந்தால் எங்களையும் எதிரிக்குத் தெரியும். எனவே எழும்புவதில்லை. குந்தியிருந்து அவதானிக்க ஓர் அகழி. உணவுண்ண, ஓய்வெடுக்க அதனோடு இணைந்தபடி இன்னோர் அகழி. காலையிலிருந்து இருளும்வரை எங்களுடைய அனைத்துச் செயற்பாடுகளும் நடமாட்டங்களும் அந்த இரு அகழிகளுக்குள்ளே மட்டுமே. மூப்படைந்தோர் போல முதுகை வளைத்துத்தான் அகழிகளுள் நடந்தோம். நில மட்டத்தோடு விழிகளை வைத்துத்தான் கண்காணித்தோம். வீசுகின்ற காற்றில் செறிந்திருக்கும் உப்பு விழிகளோடு மோதி கண்ணீர் வடிந்துகொண்டிருக்கும். முகம், காது, கழுத்தெல்லாம் உப்புப் படிந்துவிடும். வழியும் வியர்வையைக் கையால் வழித்துத் துடைத்தோமோ, அவ்வளவுதான். உப்புப் படிவுகளால் முகம் உரசப்பட்டு உரசல்களில் உப்புப்பட்டு, தீப்பற்றி எரிவதுபோல் முகம் எரியும். மட்டுப்படுத்தப்பட்டளவு தண்ணீர் சிறு கொள்கலன்களுள்ளே இருக்கும். அளந்து குடிக்காமல் அவசரப்பட்டு குடித்துமுடித்தோமோ இருளும்வரை வாயுலரக் கிடக்கவேண்டியதுதான். வியர்க்கின்றது என்று வெளியில் எழுந்து உலாவமுடியாது. திறந்திருக்கும் அகழிகளில் கரந்துறையும் எங்களைச் சுடுவது வெயில் மட்டுமன்று . சூரியன் மேலுயர மேலுயர நிலம் வெப்பமடையத் தொடங்கும். சூடேறிய நிலம் வெளிவிடும் வெப்பத்தால் அகழிகளுக்குள் வெந்துபோய்க் கிடந்தோம். சற்றுத் தூரத்தே ஒரே ஓர் ஆலமரமும், எமக்கு அண்மையாக ஒருகாய்ந்த பூவரசு வேலியும் இருந்தது. அவற்றின் சருகுகள் காற்றிலே பறந்து நிலம் முழுவதும் பரந்து கிடந்தன. சருகுகளின் கீழே படைபடையாக உண்ணிகள் கிடந்தன. அவற்றின் இலக்கு எங்களுடைய கை, கால் விரல் இடுக்குகள் தொப்புள். எப்படித்தான் அவைஎம்மேல் ஏறுகின்றனவோ? அணிந்திருக்கின்ற ஒற்றைஉடையைத் தொலைதூரக் கிணறொன்றுக்கு மூன்று, நான்கு நாட்களுக்கு ஒருமுறை தவழ்ந்துபோய் தோய்த்துலரவிட்டு குளித்துமுடிய அதையே அணிந்துகொண்டு வருகின்ற எங்களுக்கு, ஒரேயொரு சிறு கொள்கலன் நீரோடு ஒருநாள் முழுவதும் வாழும் எங்களுக்கு இது பெரிய சோதனை. உண்ணிகள் எம் இரத்தத்தை உறுஞ்சும்போது உண்டாகும் வலிதான் அவை எம்மீது ஏறி நிற்கின்றன என்று உணர்ந்தும். உண்ணியைப் பிடுங்கியெடுத்தால் கடிகாயத்திலிருந்து இரத்தம் வடியும். இருக்கின்ற ஒரு கொள்கலன் தண்ணீரை ஊற்றிக் கழுவவா முடியும்? கைகளால் துடைத்துவிட்டு நிமிர வேறோரு விரலிடுக்கில் புதிதாக வலி தெரியும். அந்த உப்புவெளியை மீட்க சிங்களப் படைகளோடு மட்டுமா போரிட்டோம்…? அந்தக் காலத்தில் ஆட்களின் தோற்றத்தைப் பார்த்து இவர் எந்தப்பகுதிக் காவலரணிலிருந்து வருகின்றார் என்று இனங்காணலாம். தோலின் நிறம் பெரியளவில் வேறுபடாமல், புத்துணர்வோடு நின்றால் அவர் பலாலிப் பகுதிக் காப்பரணிலிருந்து வந்தவராக இருக்கும். தலைமயிர் செம்படையாகி தோல் கறுத்து வரண்டு விழிகள் சிவப்பேறி பாதங்கள் பிளந்தபடி ஒருவர் வருகின்றாரா? ஐயம் வேண்டாம். அவர் ஆனையிறவிலிருந்துதான் வருகின்றார். பாலைவனப் பயணிகளாக எங்கள் வாழ்க்கை சிலகாலம் ஓடியது. இம்முறை எமக்கு ஒதுக்கப்பட்ட காப்பரண் பகுதியிலிருந்து கண்ணுக்கெட்டிய தொலைவில் ஒரு தென்னந்தோப்புத் தெரிந்தது. ஆகா! அதுவே போதும். தென்னந்தோப்பிலே கிடந்த துரவிலிருந்துதான் எமக்குத் தேவையான நீரை எடுத்துவர வேண்டும். இன்று துரவுக்குப்போய் நீரள்ளிவருவது யார் என்று பலத்த போட்டியின் பின் முடிவெடுக்கப்படும். நீரள்ளப்போகின்ற இருவரும் துரவுத் தண்ணீரில் குளித்துவிட்டு தென்னைகளில் ஏறி இளநீர் பிடுங்கிக் குடித்துவிட்டுத்தான் வருவார்கள். இருள் பிரியமுன்னர் இத்தனையும் நடந்துவிடும். அதிகாலையில் அவர்கள் சுமந்துவரும் ஒருகலன் நீரில் ஒரு பகல் முழுவதும் நாங்கள் குடித்து உண்டபின் கைகழுவி (துரவு கிடைத்த பின்னர் மட்டும்தான். முன்னர் “கழுவுவது” என்ற கதையே கிடையாது) துரவுக்குப் போகாத ஏனையவர்கள் பல் தீட்டி, முகம் கழுவி இயற்கைக்கடன் கழிக்கப் பயன்படுத்தி மறுநாள் அதிகாலைதான் மறுபடி நீரள்ளப் போவோம். அன்று அரையிருட்டில் துரவுக்குப் போனவர்களுக்கு ஒர் அற்புதமான யோசனை பிறந்தது. திட்டம் உடனடியாக அரங்கேறியது. தேங்காய்கள் பிடுங்கி வீசப்பட்டன. தண்ணீருக்குப் பதிலாக இளநீரால் கலன் நிரப்பப்பட்டது. காப்பரனில் நின்றவர்களுக்குப் புழுகம் தாளவில்லை. அரிய திட்டமொன்றை அரங்கேற்றிய இருவரையும் ஏனையவர்கள் மெச்சிக்கொண்டார்கள். இளநீராலே பல் தீட்டி, முகம் கழுவி, கைகழுவி, கால்கழுவி தேவைக்கும் மேலாக குடிகுடியென்று குடித்துத் தள்ளினோம். இரவு மறுபடி போய் நீரள்ளி வரும் திட்டம். ஏற்கனவே இருந்ததால் அளவுக் கட்டுப்பாடு பற்றி எவரும் அச்சமடையவில்லை. வழமைபோல கலன் வெயிலுக்குள் கிடந்தது. எங்களுக்கே நிழல் இல்லை. நேரம் மதியத்தை நெருங்கத் தொடங்கியது. காப்பரணில் நின்றவர் கலனைச் சரித்து வாயில் ஊற்றினார். கடகடவென நாலைந்து மிடறு விழுங்கியவர் கடைசியாக வாயில் எஞ்சியதை பாய்ந்து துப்பினார். ‘கள்ளுக் குடிச்சமாதிரிக் கிடக்கு” அதெப்படி காலையில் இளநீராக இருந்தது மதியம் கள்ளாகும்? குடித்துப் பார்த்த எல்லோரும் முகத்தைச் சுளித்தார்கள். வெயில் ஏற ஏற இளநீர் நொதிக்கத் தொடங்கிவிட்டிருந்தது. புளித்த இளநீரைக் குடித்ததால் எல்லோருக்குமே நாவரண்டது. வாய் கழுவக்கூட நீரில்லை. எல்லாம் இனி இரவுதான். தண்ணீர் விடாயில் தாராளமாகக் குடித்தவருக்கு வயிறு குழப்பியது. இயற்கைக்கடன் கழிப்பதற்கும் இளநீர்தான், வேறு வழியேயில்லை. இருளும்வரை எப்படியாவது சமாளித்தாக வேண்டும். கடும் யோசனையுடன் காப்பரணில் நின்றவரின் காலில் எதுவோ கடித்த வலி. குனிந்து பார்த்தால் எறும்புப் பட்டாளம் ஒன்று கலனை மூடியிருந்தது. ஒன்றிரண்டு இவரின் பாதங்களையும் சுவைபார்த்தன. துள்ளிக் குதித்து இடம்மாறி நின்று உற்றுப் பார்த்தால் தொலைவில் இருந்து நீண்ட வரிசையில் அந்தக் கரிய பெரிய எறும்புகள் வந்துகொண்டெயிருப்பது தெரிந்தது. அடுத்த இலக்கு நாங்கள்தான். குடிப்பது தவிர்ந்த ஏனைய வேலைகளுக்கு இளநீரைப் பயன்படுத்தியவர்களின் விழிகள் பிதுங்கின. எதைச் சொல்ல? ஆனையிறவுக்காக நாம் பட்ட வலிகளில் எதைச் சொல்ல? எதை விட? ************************************** இப்போது “பலவேகய-02″ நடந்துகொண்டிருக்கிறது. ஆனையிறவுப் படைத்தளத்தை விரிவாக்கும் முயற்சியில் சிறிலங்கா இராணுவமும், தடுக்கும் முயற்சியில் நாமும் அந்த வெளியில் மறுபடி ஒரு பெருஞ்சண்டை. அன்றைய சண்டை அப்போதுதான் முடிந்தது. நல்ல பகல்வேளை. சண்டை செய்த களைப்பு, பசி, தாகம் எல்லாம் வாட்ட நடந்து வந்துகொண்டிருந்தோம். திடீரென வானத்தைக் கருமேகங்கள் மூடின. சடுதியில் மழை பெய்யத்தொடங்கியது. கையில் அகப்பட்ட காவோலைகளை (காய்ந்த பனையோலை) தலைக்கு மேலே குடையாகப் பிடித்தோம். மழையோ சிறு மழையல்ல. மாரிமழைபோலப் பொழிந்தது. காவோலையிலிருந்து வழிந்த நீரை ஏந்திக் குடிக்கத் தொடங்கியவரும், முகம் கழுவியவரும், ஓலையை எறிந்துவிட்டு ஆனந்தமாக நனைந்தவருமாக எங்களை நாங்கள் மறந்தோம். “மழைக்க நனையாதே. மழைக்க நனையாதே” என்று தூரத்தே ஒலித்த அணித் தலைவியின் குரல் இப்போது எங்களை நெருங்கியது. அவரும் நனைந்தபடி. எங்களுக்குச் சிரிப்புவந்தது, அவரும் சிரித்துவிட்டார். எல்லோரும் பலமாகச் சிரித்தோம். வருடத்தின் நடுப்பகுதியில் உடலை வரட்டும் கடுங்கோடையில் எப்படி இப்போது மழை பெய்கின்றது.? இயற்கைக்கு நன்றி சொன்னோம். மழை விட்டது. களைப்புப் பறந்த இடம் தெரியவில்லை. மீண்டும் நடந்தோம். வானிலே பேரொலி எழுந்தது. Y-12 (குண்டுவீச்சு விமானம்) வருகின்றது. அருகிருந்த அலம்பல் பற்றைகளுள் எம்மை மறைத்துக்கொண்டோம். மிகப்பெரிய அணி இது. ஒரு குண்டு அருகில் விழுந்தால்கூட இழப்பு அதிகம்தான். ஓடி வேறிடத்தில் மறைய நேரமில்லை. காப்புகளுமில்லை. எல்லோருடைய வாய்களும் Y-12 ஐச் சாபமிட்டன. அது ஒருதடவை தாழ்ந்து உயர்ந்தால் மூன்று குண்டுகள் ஆடியாடி வந்து வீழும். குண்டு வீழ்ந்து வெடித்த இடத்தில் தென்மராட்சியின் தென்னந்தோப்புக்களிடையே வெட்டப்பட்டுள்ள துரவுகள்போல் ஆழமும் அகலமுமான குழிகள் உருவாகும். எங்களிடையே அந்த மூன்றும் விழுந்தால் போர்முனையில் மகளீர் படையணியின் பலம் குறைந்துவிடும். ஒரு தடவை அது தாழ்ந்து உயர்ந்து சற்றுத்தொலைவில் குண்டுகள் விழுவது தெரிந்தது. Y-12 இப்போது பெரிய வட்டமெடுத்துச் சுற்றத்தொடங்கியது. “ இந்தச் சனியன் விழுந்து வெடிக்காதோ?” யாரோ ஒருத்தியின் குரல் கேட்டது. விழுந்துபோக! நாசமாய்ப்போக! எல்லோர் மனங்களும் சாபமிட்டன. உற்றுப் பார்த்துக்கொண்டிருந்தோம். தாழ்ந்து பறக்க எத்தனிக்கையில் அது வானில் வெடித்துச் சிதறி துண்டு துண்டுகளாக ஆடியாடி விழுந்துகொண்டிருந்தது. நம்பவே முடியவில்லை. சிரித்துக் கூக்குரலிட்டோம். கடுங்கோடையில் பெய்த குளிர் மழையில் மறுபடியும் நனைந்தோம். “இது விழுந்ததுபோல ஆனையிறவும் ஒருநாள் விழும்” யாரோ ஒருத்தியின் குரல் கேட்டது. அது ஆன்ம வாக்கு. அண்ணனின் ஆற்றல் உணர்ந்தோரின் உள் மனக்குரல். இன்று எவருமேயில்லை அந்தப் பெருவெளியில். எதிரிகளுமில்லை, நாங்களுமில்லை. அறுநூறு வருடங்களுக்கு முன்பிருந்ததுபோல, மறுபடியும் ஆனையிறவு நிம்மதியாக. மலைமகள். (மகளிர் படையணி)
Share this article :

கருத்துரையிடுக

 
Company Info | Contact Us | Privacy policy | Term of use | Widget | Advertise with Us | Site map
Copyright © 2011. welvom . All Rights Reserved.
Design Template by panjz-online | Support by creating website | Powered by Blogger