
சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நீண்ட இடைவேளைக்குப் பிறகு சர்வதேச கிரிக்கெட் போட்டி நடைபெறுகிறது. ரசிகர்கள் இந்திய-நியூஸீலாந்து அணிகளுக்கு இடையிலான கடைசி ஒருநாள் போட்டியை ஆவலுடன் எதிர்பார்க்கின்றனர்.
முதல் 3 போட்டிகளிலும் எந்த வித சவாலுமில்லாமல் சரணடைந்த நியூஸீலாந்து கடந்த பெங்களூர் போட்டியில் அதிரடியாக ரன்கள் குவித்து இந்தியாவை மிரட்டியது. ஆனால் என்ன பயன்? யூசுப் பத்தான் போன்ற வீரர் தான் என்ன செய்ய முடியும் என்பதை அன்று நியூஸீலாந்துக்கு நிரூபித்தார்.
கடந்த 4 மாதங்களில் ஒருதினப் போட்டி ஒன்றில் கூட நியூஸீலாந்து வெற்றி பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் தொடரின் கடைசி போட்டியில் வெற்றி பெற்றால் நாடு திரும்பும் வீரர்களுக்கு மனதில் புதிய தெம்பு பிறக்கும்.
இந்தியாவைப் பொறுத்தவரை ஆஷிஷ் நெஹ்ராவுக்கு பதில் முனாஃப் படேல் அணியில் நீடிக்கப்படவேண்டும். பார்த்தீவ் சிறப்பாக விளையாடினாலும் மீண்டும் முரளி விஜயிற்கு சென்னையில் ஒரு வாய்ப்பு வழங்கிப் பார்க்கலாம்.
ஆட்டம் மழையால் பாதிக்க நேரிடலாம் என்று தெரிகிறது. ஆனால் புதன் கிழமை முதல் கனமழை எதுவும் இல்லை. இருப்பினும் இன்று மழை பெய்யாது என்று கூறுவதற்கு இடமில்லை.
சௌரப் திவாரியை ஒன்று அல்லது இரண்டாம் நிலையில் களமிறக்கிப் பார்க்கலாம். நெருக்கடி தருணத்தில் அவர் சற்றே திணறுவது போல் தெரிகிறது.
நியூஸீலாந்து அணி இலக்கைத் துரத்துவதுதான் சிறந்தது. பேட்டிங் பலத்தை வைத்துத்தான் அந்த அணி ஒரு வெற்றியுடனாவது திரும்ப முடியும்.
ராஸ் டெய்லர் மோசமான ஷாட் தேர்வில் ஆட்டமிழந்து வருகிறார். அவர் பொறுப்புடன் விளையாடி பவர் பிளே வரை நின்றால் சிம்ம சொப்பனமாகத் திகழ்வார்.
போட்டி இடையூறு இல்லாமல் நடந்தால் இன்று சென்னை ரசிகர்களுக்கு இளம் இந்திய பேட்ஸ்மென்கள் விருந்து படைப்பார்கள் என்று எதிர்பார்க்கலாம்.
கருத்துரையிடுக